சச்சினின் சாதனையை முறியடிக்க தயாராகும் விராட் கோலி

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 14,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைக்க விராட் கோலிக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

இன்றையப் போட்டியில் 114 ஓட்டங்களை பெற்றுக்கொண்டால் அவர் இந்த சாதனையை நிகழ்த்த முடியும். எனினும் கடந்த இரண்டு போட்டிகளின் போதும் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சினால் விராட் கோலி தடுமாறியிருந்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு எதிரான இன்றையப் போட்டியின் போது, ​​கோலி ஒரு நாள் போட்டிகளில் அதி வேகமாக 14,000 ஓட்டங்களை கடந்து வரலாற்றைப் படைக்கும் வாய்ப்பைப் பெறுவார்.

2008ஆம் ஆண்டு ஓகஸ்ட் 18ஆம் திகதி தம்புளையில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமான கோலி இதுவரை விளையாடிய 294 போட்டிகளில் 13,886 ஓட்டங்களை குவித்துள்ளார்.

14,000 ஓட்டங்களை கடக்க அவருக்கு இன்னும் 114 ஓட்டங்களே தேவையாக இருக்கின்றது. அவர் இந்த சாதனையை நிகழ்த்தினால், சச்சின் டெண்டுல்கரின் 18 ஆண்டுகால சாதனையை முறியடிப்பார்.

இந்தியாவுக்காக தனது 359வது போட்டியில் விளையாடிய சச்சின் ஒருநாள் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை குவித்திருந்தார். இதுவரை இரண்டு துடுப்பாட்ட வீரர்கள் மட்டுமே ஒருநாள் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை குவித்துள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 18,426 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார 14,234 ஓட்டங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்த ரிக்கி பொண்டிங் மற்றும் சனத் ஜயசூர்யவின் சாதனைகளை கடந்த ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண தொடரின் போது விராட் கோலி முறியடித்திருந்தார்.

இன்றையப் போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடினால் அதிவேகமான 14,000 ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையுடன், சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ஓட்டங்களை குவித்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் கோலி பெறுவார்.

தற்போதைய நிலையில், இந்தியாவுக்காக 532 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 26,922 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button