தன்னையும் சேர்த்துக்கொள்ளும்படி ராணுவத்திற்குக் கடிதம் எழுதிய சிறுவன்

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஜூலை 31 ஆம் தேதி வயநாடு மாவட்டத்தில் உள்ள முண்டகை, சூரல்மலை, மேம்பாடு ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், 380க்கும் மேற்பட்டோர் மாண்டனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.400க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக சேதமாகின. நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கட்டுள்ளனர். மேலும், நிலச்சரிவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவமும் மீட்புக் குழுக்களும் ஈட்பட்டுள்ளனர்.

31 மணி நேரத்தில் மீட்புப் பாலம் அமைத்த பெண் அதிகாரி
மலைப்பாங்கான இடத்தில் மீட்புப்பணிகளை மேற்கொள்வதில் ராணுவம் பல சிரமங்களை எதிர்கொண்டன. இந்தச் சிரமங்களை எளிதாக்க மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் தற்காலிக பாலம் அமைத்த ராணுவ அதிகாரியான சீதா ஷெல்கே தற்போது சமூக ஊடகங்களில் பலரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறார். இவர், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராத்மோலா என்ற இடத்தில் பிறந்தவர்.

ராணுவ அதிகாரியான சீதா ஷெல்கே, வயநாடு பேரிடர் மீட்புப் பணிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மலை மற்றும் முண்டக்கை கிராமங்களை இணைக்கும் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், மீட்புப் பணிகளுக்கு சிரமம் ஏற்பட்டதால், சீதா ஷெல்கேவின் தலைமையில் 31 மணி நேரத்தில் அங்கு தற்காலிக இரும்பு பாலம் ராணுவத்தினரால் கட்டப்பட்டது.

“என்னையும் மீட்புப் பணியில் இணைத்துக்கொள்ளுங்கள்”

கேரளாவில், தனியார் பள்ளி ஒன்றில் 3ம் வகுப்பு படித்து வரும் ரயான் என்ற சிறுவன் மலையாளத்தில் தனது மழலை மொழியில் ராணுவத்திற்கு எழுதிய கடிதத்தில், “அன்புள்ள இந்திய ராணுவத்தினருக்கு , எனது அன்பான வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை ராணுவ வீரர்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும், பெரும் மகிழ்ச்சியும் அடைந்தேன். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் தங்களது பசியைப் போக்க பிஸ்கட் சாப்பிடும்காணொளிகளைப் பார்த்தேன்.

“தொடர்ந்து இயங்கி உடனடியாக ராணுவ வீரர்கள் பாலம் கட்டும் வீடியோவை இப்போதுதான் பார்த்தேன். அந்தக் காட்சி என்னை மிகவும் ஈர்த்தது. நானும் ஒருநாள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டை பாதுகாப்பேன். அதற்காக ஆசைப்படுகிறேன்,” என்று எழுதியுள்ளார்.

சிறுவனின் இந்தக் கடிதத்தை இந்திய ராணுவம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும், இத்தக் கடிதத்திற்கான பதிலையும் அதில் பதிவிட்டது.

இதயம் கனிந்த உன்னுடைய வார்த்தைகள் எங்களை ஆழமாக தொட்டு விட்டது என்று இந்திய ராணுவம் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளது. “நீ சீருடை அணிந்து எங்கள் பக்கம் நிற்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்,” என்று குறிப்பிட்டு அச்சிறுவனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

வீடுகளை இழந்த 100 குடும்பங்களுக்கு நிலம் வழங்கும் தொழிலதிபர் வயநாடு நிலச்சரிவில் உயிர் தப்பிய பலரும் தற்போது ஒதுங்கக் கூட இடம் இல்லாமல் இருக்கிறார்கள். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள பலரும் தங்களின் வீடுகளை இழந்தவர்கள்.

பிரபலங்கள் முதல் சாதாரண மக்கள் வரை உணவு, உடைகள் என பல விதங்களிலும் இவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

அந்த வகையில், தொழிலதிபரான பாபி செம்மண்ணுர், 100 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு ஏதுவாக இடத்தை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளதாக பிபிசி தெரிவித்தது.

இந்நிலையில், அங்குத் தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button