இலங்கை

இலங்கைப் பாடகர்கள் குவைட் நாட்டில் கைது: ஜே.வி.பிக்கு நிதி சேகரிக்கச் சென்றதாக தகவல்

‘வெளிநாட்டில் இருக்கும் நாங்கள்’ (எதெர அபி) எனக் கூறப்படும் அமைப்பின் மூலம் நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக குவைட் நாட்டை நோக்கி சென்ற இலங்கையைச் சேர்ந்த பிரபல பாடகர்கள் உள்ளிட்ட 26 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்பு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை கொழும்பில் இருந்து இன்று வெளியான சிங்கள நாளிதழான “தினமின” முதற்பக்க தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில், ஜே.வி.பியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்திக்கு நன்கொடை சேகரிக்கும் நோக்கில் “எதெர அபி” என்ற அமைப்பின் மூலம் இசை நிகழ்ச்சியொன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இசைநிகழ்சியில் கலந்துக் கொள்வதற்காக குவைட் நாட்டிற்கு சென்று அங்கு கைது செய்யப்பட்ட பிரபல பாடகர்கள் உள்ளிட்ட இலங்கையர்களில், மேலும் இருவர் இன்னுமும் பொலிஸ் காவலில் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 26 பேர்களுள் 24 பேரை விடுவிக்க குவைட் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் நேற்று (04) நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

குறித்த இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த இருவரை நேற்று (04) வரையில் பொலிஸார் விடுவிக்கவில்லை.

இலங்கையைச் சேர்ந்த அவர்கள் இருவரும் முறையான அனுமதியின்றி அதனை ஏற்பாடு செய்துள்ள காரணத்தினால் இந்தக் கைது கடந்த 02 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிப்பதாக “தினமின” செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சிக்கு இலங்கையைச் சேர்ந்த சமனலீ பொன்சேக்கா, ஜொலீ சீயா எனப்படும் அப்புக்குட்டி சந்திரரதன சில்வா, இந்திரசாபா லியனகே, உபோகா நிர்மாணி, முபாரக் உள்ளிட்ட ஏரளமான கலைஞர்கள் குவைட் நாட்டை நோக்கிச் சென்றிருந்தனர்.

இந்த இசைநிகழ்ச்சியின் விளம்பர பிரச்சாரமும் குவைட் நாட்டில் இடம்பெற்றிருந்தது.

இந்நாட்டு கலைஞர்கள் குழுவினர் குவைட் இசைநிகழ்ச்சிக்கு கலந்துக்கொள்ள சென்றிருந்த போது அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யபட்ட தகவல் அறியக் கிடைத்தவுடன் அவர்களை விடுவிக்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அந்நாட்டில் காணப்படும் இலங்கைத் தூதரகத்திற்கு அறிவித்துள்ள நிலையில் அவர்களின் உதவியால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

இலங்கை கலைஞர்கள் வருகைத் தந்திருப்பது இசைநிகழ்ச்சிக்காக மாத்திரமே எனவும் அனுமதி கோரவில்லை என்பது தொடர்பில் அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் அவர்களை விடுவிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவைட் பொலிஸ் பாதுகாவலில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏற்பாட்டாளர்கள் இருவர் தொடர்பில் குவைட் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வரும் காரணத்தினால், குறித்த விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தூதரகம் அறிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.