ஆஸ்திரேலிய அமைச்சரவையில் மாற்றம்; அல்பனிஸ் அறிவிப்பு
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28), நாட்டின் அமைச்சரவையில் மாற்றத்தை அறிவித்துள்ளார்.
அடுத்தப் பொதுத் தேர்தலின்போது அரசியல் ஓய்வு பெறத் திட்டமிடுவதாக மூத்த அமைச்சர்கள் இருவர் கூறியதை அடுத்து ஆஸ்திரேலியப் பிரதமரின் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு (2025) பொதுத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் திரு அல்பனிஸ் அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார்.
“வருங்காலத்தில் தேர்தல் நடைபெறும்போது இந்தக் குழுவைத்தான் முன்னிறுத்துவேன் என்று கருதுகிறேன்,” என்று கேன்பராவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். அக்கூட்டம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.
கலைத் துறை அமைச்சர் டோனி பர்க், உள்துறை, குடிநுழைவு, பலகலாசார விவகாரங்கள், இணையப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்.
உள்துறை, இணையப் பாதுகாப்பு அமைச்சர் கிளேர் ஓ’நீல் இனி வீடமைப்பு, வீடற்றோருக்கான அமைச்சராகப் பணியாற்றுவார்.
குடிநுழைவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரூ ஜைல்ஸ் அமைச்சரவையிலிருந்து விலகி இனி திறன், பயிற்சித் துறையில் பணியாற்றுவார்.
வடக்குப் பகுதி செனட்டர் மலார்ன்டிர்ரி மெக்கார்த்தி, ஆஸ்திரேலியப் பழங்குடியினர் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பார்.
நீண்டகாலம் தொழில்துறை அமைச்சர்களாகப் பொறுப்பு வகித்த பிரெண்டன் ஓ’கான்னர், லிண்டா பர்னி இருவரும் அடுத்த பொதுத் தேர்தலின்போது ஓய்வுபெறவிருப்பதாக அறிவித்தனர்.
அவ்விருவரும் நீண்டகாலமாக நாட்டுக்கு மிகச் சிறப்பாகப் பணியாற்றியதாகப் பிரதமர் அல்பனிஸ் புகழாரம் சூட்டினார்.