உலகம்

அமைதியாக இருக்கப்போவதில்லை’; காசா பிரச்சினையில் கமலாவின் நிலைப்பாடு என்ன?

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் போட்டியில் இருக்கும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ள கருத்து காசா பிரச்சினையில் அவரின் மாறுபட்ட நிலைப்பாட்டினை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இது அமெரிக்க அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நெதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலா ஹாரிஸ் “தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருக்கிறது. அதேவேளையில் காசாவில் நிலவும் மனித துயரத்தின் வீச்சு பற்றிய எனது அக்கறையை நெதன்யாகுவிடம் மிகத் தெளிவாக முன்வைத்தேன். இதில் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை” என்று கூறினார்.

இஸ்ரேலிற்கு தன்னை பாதுகாப்பதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் ஹமாஸ் அமைப்பினை ஈவிரக்கமற்ற யுத்தத்தினை தூண்டிய பயங்கரமான பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட அமைப்பு என வர்ணித்துள்ளார்.

எனினும் இஸ்ரேல் எப்படி தன்னை பாதுகாத்துக்கொள்கின்றது என்பது முக்கியமான விடயம் என குறிப்பிட்டுள்ள அவர் காசாவில் இந்த துயரங்கள் நிகழும்போது நாங்கள் அதனை அலட்சியம் செய்ய முடியாது, எனகுறிப்பிட்டுள்ளார்.

துன்பங்கள் குறித்து நாம் உணர்ச்சியற்றவர்களாகயிருக்க முடியாது,நான் மௌனமாகயிருக்கமாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன தேசத்தை ஏற்படுத்தவேண்டும் என கமலா ஹரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கமலா இதனைத் தெரிவித்தபோது அவர் குரலில் இருந்த உறுதியும் கெடுபிடியும் இஸ்ரேல் பிரச்சினையில் கமலா ஹாரிஸின் நிலைப்பாடு பைடனுடையதிலிருந்து மாறுபட்டதாகவே இருக்கும் என்ற விமர்சனங்களை ஈர்த்துள்ளது. இஸ்ரேல் போருக்கு பைடன் அரசு முழு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இஸ்ரேல் பிரச்சினை குறித்து வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில் “இஸ்ரேல் – ஹமாஸ் படையினர் இடையேயான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் சில சிக்கல்கள் நிலவுகின்றன. இருதரப்புமே சில சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.” என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழலில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்கப் பயணம் கவனம் பெற்றுள்ளது. நெதன்யாகு வருகையை ஒட்டி வெள்ளை மாளிகையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

முதலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனை இஸ்ரேல் பிரதமர் சந்தித்தார். அப்போது ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களின் குடும்பத்தினரும் இருந்தனர். அந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரதிநிதிகள் போர் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பிணைக் கைதிகள் நாடு கொண்டுவரப்படுவார்கள் என நம்புவதாகத் தெரிவித்தனர்.

.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.