வெற்றி கிடைக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை; இஸ்ரேல் பிரதமர்!
ஹமாஸ் அமைப்புடனான போரில் முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
காஸாவுக்கு எதிராக இஸ்ரேல் தீவிரமாக போர் நடத்தி வரும் நிலையில், அமெரிக்காவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இவரது வருகைக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் தீவிர போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர் அமெரிக்க நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்துக்கு பெஞ்சமின் நெதன்யாகு வந்தபோது, அவையினர் எழுந்து நின்று தொடர்ந்து 8 நிமிஷங்களுக்கு கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர்.
அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோதும் 8 முறை அவையினர் எழுந்து நின்று கரவொலி எழுப்பி, அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
சுமார் 50 நிமிடங்களுக்கு ஆவேசமாக உரையாற்றிய அவர், ஹமாஸ் அமைப்பை முழுமையாக வீழ்த்தி வெற்றி பெரும்வரை இந்தப் போரை நிறுத்தப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.
எனினும், இஸ்ரேலின் நிபந்தனைகள் ஏற்கப்பட்டால் போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன அமைப்புகளுக்கும் இடையே தற்போது நடைபெற்றுவரும் போரானது நாகரீகத்துக்கும் காட்டுமிராண்டித்தனத்துக்கும் இடையிலான போர் என்றும் இந்தப் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபடுவோர் ஈரானால் பயன்படுத்திக்கொள்ளப்படும் கைப்பாவைகள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
அத்தோடு, காஸா போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செயல்படுவது பாராட்டுக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், காஸாவில் பாலஸ்தீனர்களுக்கு போதிய உணவு கிடைக்காமல் இருப்பதற்கு உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லவிடாமல் தடுப்பது காரணமல்ல என்றும் அம்மக்களுக்கு அனுப்பப்படும் பொருள்களை ஹமாஸ் அமைப்பினர் திருடிக்கொள்வதுதான் காரணம் என்றும் இஸ்ரேல் பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இவரது இந்தக் கருத்தானது பாலஸ்தீன பகுதிக்கான ஐ.நா. அகதிகள் நல அமைப்பின் கருத்துக்கு முற்றிலும் முரணானது என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.