பாரிஸ் நகரில் அவுஸ்திரேலிய பெண் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், அவுஸ்திரேலிய பெண் ஒருவர் ஐந்து ஆண்களால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த பெண் உணவகம் ஒன்றில் தஞ்சமடைந்ததாகவும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பெண்ணின் ஆடைகள் ஓரளவு கிழிந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் ஐவரும் “ஆப்பிரிக்க தோற்றத்தில்” இருந்ததாகவும், அதிகாலை ஐந்து மணியளவில் தன்னை கும்பல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ள பெண், அவர்களிடம் இருந்து தப்பித்து உணவகத்தில் தஞ்சமடைந்ததாகவும் கூறியுள்ளார்.
சிசிரிவி காட்சிகளில் அந்த பெண் கடைக்குள் ஓடி, பயந்துபோய், ஊழியர்களிடம் உதவி கேட்பதைக் காட்டுகிறது. கடை ஊழியர்கள் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கிய போதிலும் அவசர உதவியை அழைத்தனர்.
எவ்வாறாயினும், அந்தப் பெண்ணுக்கு பிரான்ஸ் மொழியில் ஒரு வார்த்தைக் கூட கதைக்க முடியாமல் இருந்ததாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், சம்பவம் நடந்த இடம் அல்லது சூழ்நிலைகள் குறித்த விவரங்களை குறித்த பெண்ணால் வழங்க முடியவில்லை எனவும் அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. எனினும், பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், நகரம் முழுவதும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.