பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க தீர்மானம்!
பிரித்தானியாவில், 60,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாட்டுக்குள் அனுமதிக்க, புதிய அரசாங்கமான தொழிலாளர் அரசாங்கம் (Labour Party) தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானியாவின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் (Keir Starmer) புதிய குடியேற்றத் திட்டங்களின் கீழ் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ருவாண்டா நாடு கடத்தல் திட்டமானது முன்னதாக கன்சர்வேடிவ் கட்சி (Conservative Party) அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை கைவிடுவதே தற்போது புதிய பிரதமராக பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) அரசாங்கத்தின் முதல் முடிவுகளில் ஒன்றாக காணப்படுகின்றது.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்கள் ஆபிரிக்க நாடான ருவாண்டாவுக்கு நாடு கடத்தப்படுவர் என்ற இந்த திட்டத்தை முன்னாள் பிரதமர் போரிஸ் ஜொன்சன் (Boris Johnson) அறிமுகப்படுத்தினார்.
போரிஸ் ஜொன்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகியதையடுத்து, பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்ற ரிஷி சுனக்கின் (Rishi Sunak) ஆட்சிக் காலத்திலும் ருவாண்டா திட்டம் பெரும் பேசுபொருளாக இருந்தது.
ஆங்கில கால்வாய் வழியாக சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தோர் வருவதை தடுக்க குறித்த திட்டம் உதவும் என ரிஷி சுனக் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது, ஸ்டார்மரின் தொழிலாளர் அரசாங்கம் சுமார் 90,000 சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் புகலிட விண்ணப்பங்களை விரைவாகக் கண்காணிக்கத் தயாராகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவற்றில் சுமார் 60,000 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.