கறுப்பு ஜூலைக்கு வயது 41: மறக்கவும், மறுக்கவும் முடியாத சரித்திரம்
கறுப்பு ஜூலை இந்த நாளையும், இந்த வார்த்தையும் யாராலும் மறக்கவும் முடியாது, மறுக்கவும், முடியாது. சுமார 3000 உயிர்களை காவுகொண்ட கறுப்பு ஜூலைக்கு இன்று வயது 41.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற தமிழர் விரோதப் படுகொலையின் கொடூரம் நடந்து 41 வருடங்கள் ஆகின்றது.
வாக்காளர் பட்டியல்களுடன் ஆயுதம் ஏந்திய தமிழர் விரோத கும்பல்கள் தமிழர்களின் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களை குறிவைத்து தாக்கியதுடன், சொத்துக்களையும் சூறையாடினர்.
குறிப்பாக கொழும்பில் உள்ள வீடுகளில் இருந்து தமிழ் மக்கள் துரத்தப்பட்டு, 3000க்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்,
தமிழர்களை தெருவில் கத்தியுடன் துரத்திய கும்பல் அவர்களை உயிருடன் கொளுத்தியதை நேரில் பார்த்த அறிக்கைகள் விவரித்துள்ளன.
பெண்கள் பலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை படுகொலை செய்ய சிறைக்காவலர்கள் அனுமதித்ததால் அவர்கள் இலக்கு வைக்கப்பட்டனர்.
இந்த கொடூர சம்பவம் நடந்து 41 ஆண்டுகள் கடந்த போதிலும், அதனால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மாறவில்லை. ஏதோ ஒருவகையில் தமிழர்களுக்கு எதிரான விரோத போக்கு இன்றும் தொடர்ந்துகொண்டே செல்கின்றன.
1983 ஜூலை 23 ஆம் திகதி அதிகாலை யாழ் திருநெல்வேலி பலாலி வீதியில் சென்று கொண்டிருந்த இலங்கை இராணுவத் தொடரணி மீது புலிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 13 இராணுவச் சிப்பாய்கள் கொல்லப்பட்டனா்.
உயிரிழந்த 13 இராணுவத்தினரின் சடலங்களும் கொழும்பு பொரளை மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து பெருமளவான மக்கள் அங்கு குவிந்தனர். பதற்றமும் நிலவியது.
அரச வாகனங்களிலும் ஏராளமானோர் பொரள்ளைக்கு அழைத்து வரப்பட்டனர். இதன் பின்னரே தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன்படி, கொழும்ப நகரிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு வீடுகள், வணிகத் தளங்கள் எரிக்கப்பட்டன.
நிலைமை மோசமடைந்ததை அறிந்த அதிகாரிகள் ஊரடங்கு சட்டத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
கொழும்பு மாத்திரமன்றி மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீதும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
எனினும், ஊரடங்கு உத்தரவு அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜேஆர்.ஜயவர்தனவினால் பிறப்பிக்கப்படவில்லை.
வன்முறைகளை கட்டுப்படுத்துமாறு அப்போதைய ஜனாதிபதிக்கு இந்தியா உட்பட சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தது.
எவ்வாறாயினும், கறுப்பு ஜூலையில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஆதரவுடன் தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.
அந்தக் கிளர்ச்சிச் சூழலை உருவாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, ஜே.வி.பி உட்பட மூன்று கட்சிகளுக்கு அப்போதைய அரசாங்கம் தடை விதித்திருந்தது.
கறுப்பு ஜுலை கலவரம் அல்லது 83 கலவரம் என இந்த கலவரத்தை இன்றும் தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தை அழிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட மற்றொரு முயற்சியாக இந்த கறுப்பு ஜுலை வன்முறைகள் இன்றும் பேசப்படுகின்றன.
இந்த வன்முறை சம்பவத்தினால் பல தமிழர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டதாகவும், பலர் எரியூட்டி கொலை செய்யப்பட்டிருந்தனர். இது பற்றி இலங்கை நாடாளுமன்றத்தில் பலரும் சுட்டிக்காட்டி உரையாற்றியுமுள்ளனர்.
கொழும்பு – வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளான தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்ட பின்னணியில், பெரும்பாலான தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியிருந்தனர்.
கறுப்பு ஜூலையை உருவாக்கியவர்கள், அதற்குக் காரணமானவர்கள் இன்றுவரை தண்டிக்கப்படவில்லை.
பிற்காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி அதற்குக் கவலையும் கண்டனமும் வெளியிட்டிருந்தது. ஆனாலும் குற்றவாளிகள் எவரும் தண்டடிக்கபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.