ரணிலின் ஊழல்கள் தொடர்பில் அனுர வெளிப்பாடு: சட்டத்தின் முன் நிறுத்தப்படும் எனவும் எச்சரிக்கை
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்த ஊழல் மோசடிகள் தொடர்பான இரு கோப்புகள் தன்னிடம் இருப்பதாக ஜேவிபியின் அரசியல் கூட்டணி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜப்பானில் தெரிவித்துள்ளார்.
கடந்த நல்லாட்சி காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு செயலகத்திற்கு அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் ஜப்பானின் Tsukuba வில் இடம்பெற்ற இலங்கை மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
“ஊழல் எதிர்ப்பு செயலகத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் மேற்கொள்ளும் ஊழல் மேசாசடிகள் தொடர்பில் புதிய முறைப்பாடுகள் கிடைக்க ஆரம்பித்ததன் காரணமாக இந்த அலுவலகத்தை மூட ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் தெரிவித்தார்.
ஊழல் மோசடிகள் தொடர்பில் மட்டுமல்லாது சில குற்றங்கள் தொடர்பிலும் தனது அரசாங்கத்தின் கீழ் ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு கோப்புகள் உட்பட அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் என்னிடம் தகவல்கள் உள்ளன. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, பறிமுதல் செய்யக்கூடிய அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும்” என தெரிவித்தார்.
“காலத்தின் மணலில் புதைக்க முயற்சிக்கும் பல குற்றங்கள் உள்ளன. லசந்த விக்ரமதுங்க, தாஜுதீன், எக்னெலிகொட கொலைகள் மற்றும் அரசியல் சதிகளுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படும் என சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டில் பாதாள உலகம் அரசியல்வாதிகளால் நடத்தப்படுவதாக குற்றம் சுமத்திய தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அவர்கள் அனைவரையும் உரிய விசாரணைகளை நடத்தி சட்டத்தின் முன் நிறுத்துவதாக மேலும் உறுதியளித்தார்.