காசா, ஏமன், லெபனான் மீது அதிரடி தாக்குதல் – ருத்ர தாண்டவமாடும் இஸ்ரேல்
காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. ஆனால், 100க்கும் மேற்பட்டோர் இன்னும் பணய கைதிகளாக ஹமாஸ் பிடியில் உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசா முனையில் இஸ்ரேல் படையினரும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதனிடையே, இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களும், லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர்.
இந்த ஆயுதக்குழுக்கள் இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் சிலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி ஆயுதக்குழு பொறுப்பேற்றது.
இந்நிலையில், காசா முனை, ஏமன், லெபனான் ஆகிய பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் இன்று அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. ஏமனின் துறைமுக நகரமான ஹூடைடா மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.ஹூடைடா நகரில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு, ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆயுதக்கிடங்கு, மின் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 87 பேர் படுகாயமடைந்தனர். அதேபோல், காசா முனையின் நஸ்ரத் முகாம், ரபா உள்பட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், லெபனானின் அட்லோன் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினரின் ஆயுதக்கிடங்கை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர்.ஒரேநேரத்தில் லெபனான், ஏமன், காசா என 3 பகுதிகளில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தியது மத்திய கிழக்கு பகுதியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.