ஐக்கிய மக்கள் சக்தியின் பொன்சேகாவிற்குப் பதிலாக புதிய தவிசாளர்?
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை தவிசாளராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களால் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாங்கள் தற்போது கட்சியின் தவிசாளர் குறித்து கலந்துரைடி வருகின்றோம். 2020ஆம் ஆண்டு முதல் தவிசாளராக பதவி வகித்த சரத் பொன்சேகா கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். ஆகவே புதிய தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும்.
பக்கீர் மார்க்கரை தலைவராக நியமிப்பதில் புதிதாக ஒன்றும் இல்லை. அடுத்த வாரம் கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெறும். அப்போது இறுதி தீர்மானம் எடுக்கப்படும். கட்சி மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் அண்மையில் நீக்கப்பட்டார்.
இதன்படி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்றக் குழுக் கூட்டம் உள்ளிட்ட கூட்டங்களுக்கு இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. கட்சித் தலைமை மீதான விமர்சனங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை மறைமுகமாகத் தாக்கிப் பேசியிருந்தார்.
தன்னை நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கவிடாது எதிர்க்கட்சிகள் தடுப்பதற்கு முயற்சிப்பதாக பொன்சேகா குற்றம் சுமத்தியதன் சில நாட்களுக்குப் பின்னர் அவர் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.