பெட்ரா பிராங்கா அருகே இரு கப்பல்கள் மோதியதில் தீ; 36 ஊழியர்கள் மீட்பு
பெட்ரா பிராங்கா தீவுக்கு வடகிழக்கே ஏறத்தாழ 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நீர்ப்பகுதியில்இரு கப்பல்களில் தீ மூண்டதை அடுத்து, அவற்றிலிருந்து 36 ஊழியர்கள் மீட்க்கப்பட்டனர்.
அவ்விரு கப்பல்களில் ஒன்றான ‘சாவோ தொமே’ மற்றும் பிரின்சிப்பி நாட்டுக் கொடியேந்திய ‘செரெஸ் I’ (Ceres I) கப்பலில், தீயை அணைக்க 40 ஊழியர்களில் 26 பேர் இருப்பதாக சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
சிங்கப்பூர்க் கொடி தாங்கிய ‘ஹஃப்னியே நீல்’ (Hafnia Nile) கப்பலில் இருந்த 22 ஊழியர்களும் மீட்கப்பட்டுவிட்டதாக ஆணையம் கூறியது.
சிங்கப்பூரின் கடற்துறை தேடுதல், மீட்புப் பகுதிக்கு உட்பட்ட கடலின் ஒரு பகுதியில் இரு கப்பல்களில் காலை 6 மணியளவில் தீ மூண்டது. இதனால் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
இச்சம்பவம் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஹஃப்னியே கப்பல் நிறுவனத்துக்கான பேச்சாளர் ஒருவர், இரு கப்பல்களும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால் தீ மூண்டதாகக் கூறினார்.
அனைத்து ஊழியர்களும் கணக்கில் கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆணையம், இரு கப்பல்களில் இருந்த ஊழியர்களில் எவரும் சிங்கப்பூரர் அல்லர் என்றது.
இரு கப்பல்களுக்கு அருகே இருந்த சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் ‘ஆர்எஸ்எஸ் சுப்ரீம்’ கப்பல், ‘ஹஃப்னியே நீல்’ கப்பலில் இருந்த 22 ஊழியர்களில் 16 பேரை மீட்டது.
உயிர்காப்புப் படகில் இருந்த எஞ்சிய அறுவரும் மலேசிய அரசாங்கக் கப்பலால் மீட்கப்பட்டு, பின்னர் ‘ஆர்எஸ்எஸ் சுப்ரீம்’ கப்பலுக்கு மாற்றிவிடப்பட்டதாக ஆணையம் கூறியது.
சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த ஆர்எஸ்எஸ் சுப்ரீம் கப்பலில் ஹஃப்னியே நீல் ஊழியர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாகவும் ஆணையம் சொன்னது.
இரு கப்பல்களுக்கு அருகில் இருந்த சிங்கப்பூர்க் கொடியேந்திய ‘டால்ஃபின் 1’ கப்பல், செரெஸ் I கப்பலில் இருந்து 14 ஊழியர்களை மீட்டது. அவர்களில் இருவர், சிங்கப்பூர் குடியரசு ஆகாயப்படையின் ஹெலிகாப்டரில் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
இரு கப்பல்களில் தீ மூண்ட சம்பவத்தால் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று ஆணையம் சொன்னது.