முஸ்லிம் கட்சிகள் ரணிலுடன் கைகோர்க்குமா?; கொழும்பில் நடைபெறும் ரகசிய பேச்சுகள்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டுள்ளதாக தெரிவருகிறது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமானவர்களை வைத்து ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள இரண்டு பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை தமது கூட்டணிக்குள் கொண்டுவரும் ரகசிய பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்கவால் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டணியில் இந்த இரண்டு கட்சிகளும் இருந்தன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் ஐ.தே.கவின் கூட்டணியிலேயே இக்கட்சிகள் இருந்தன.

என்றாலும், 2020 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியுடன் கைகோர்த்தன. தொடர்ந்து அக்கூட்டணியிலேயே இக்கட்சிகள் இரண்டும் பயணித்து வருகின்றன.

இந்த பின்புலத்தில் ரணில் விக்ரமசிங்க தமது கூட்டணிக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை கொண்டுவந்தால் முஸ்லிம் மக்களின் குறிப்பிடத்தக்களவான வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என கணக்குப் போட்டுள்ளார்.

ரிசாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹக்கீமுடன் இதுதொடர்பில் ரகசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ள போதிலும் அவர்கள் இதுவரை எவ்வித சாதகமான பதிலையும் அளிக்கவில்லை.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரவூப் ஹக்கீம் தாம் ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியிலேயே இருப்பதாக தெரிவித்திருந்தார்.

என்றாலும், ரிசாத் பதியுதீன் இதுவரை ஜனாதிபதித் தேர்தல் கூட்டணி தொடர்பில் கருத்தகள் எதனையும் வெளியிடவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button