பிரித்தானிய பொதுத்தேர்தல்: தொழிற்கட்சியின் ஆதிக்கத்தால் ஆசனத்தை இழந்த ரணில்
நடைபெற்று முடிந்த பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சரவை அமைச்சருமான ரணில் ஜயவர்தன தனது பதவியை இழந்துள்ளார்.
ரணில் ஜயவர்தன, முன்னாள் பிரதமர் லிஸ் ட்ரஸ் அமைச்சரவையில் சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராமிய விவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளராக இருந்தார்.
இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில், லிபரல் டெமாக்ரட் 21,178 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். uணில் ஜயவர்தன 20,544 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
அவர் 2015 முதல் 2024 வரை வட கிழக்கு ஹாம்ப்ஷயரின் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
நடந்து முடிந்த தேர்தலில் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியைப் பெற்றதுடன், 14 ஆண்டுகால கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி முடிவு கட்டியுள்ளது.
தொழிலாளர் கட்சியின் வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சி கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மரை பிரித்தானிய மன்னர் சார்லஸ் வரவேற்றார்.
அத்துடன், கெய்ர் ஸ்டார்மரை அரசாங்கத்தை அமைத்து பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்குமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
மன்னருடனான சந்திப்பை தொடர்ந்து, ஸ்டார்மர் தனது புதிய அலுவலகத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்னர் டவுனிங் தெருவின் முன் உரை நிகழ்த்தினார்.
இதேவேளை, தோல்வியைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரிஷி சுனக், வரும் வாரங்களில் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறினார்.
கன்சர்வேடிவ் கட்சியின் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய பாராளுமன்றம் 650 ஆசனங்களை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆசனமும் ஒரு தொகுதி அல்லது மாவட்டத்தைக் குறிக்கிறது.
நடந்து முடிந்த தேர்தலில் தொழிற்கட்சி 412 இடங்களை வென்றுள்ளது, அதே நேரத்தில் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 121 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மத்தியவாத லிபரல் டெமாக்ராட்ஸ் 71 இடங்களைப் பெற்றுள்ளது.