உளவுத்துறைத் தலைவரைக் கத்தாருக்கு அனுப்பியது இஸ்ரேல்: பேச்சுவார்த்தை வெற்றியளிக்குமா?
ஹமாஸ் போராளிகள் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலியக் கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள தனது உளவுத்துறையான ‘மொசாட்’ அமைப்பின் தலைவரை இஸ்ரேல் கத்தாருக்கு அனுப்பிவைத்துள்ளது.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் பலர் உயிரிழந்தனர். இஸ்ரேலியர்கள் பலரை ஹமாஸ் போராளிகள் பிடித்துச் சென்று பிணைக் கைதிகளாக அடைத்துவைத்துள்ளனர்.
251 பேரை ஹமாஸ் பிணை பிடித்ததாகக் கூறப்படுகிறது அவர்களில் 116 பேர் காஸாவில் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. 42 பிணைக் கைதிகள் மாண்டுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.
ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மத்தியக் கிழக்கில் போர் வெடித்தது. காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
இதுவரை 38,011க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் மடிந்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்துக்கு உலக நாடுகள் அழைப்பு விடுத்தும் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடர்கிறது.
இஸ்ரேலியக் குழு ஒன்று கடந்த சில மாதங்களாக கத்தாரில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அதற்குத் தற்போது மோசாட் தலைவர் டேவிட் பார்னியா தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கத்தார் தலைநகர் தோஹாவை ஜூலை 5ஆம் திகதி சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு பார்னியா, கத்தார் பிரதமர் முகம்மது அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள இஸ்ரேலியப் பேராளர் குழுவைக் கத்தாருக்கு அனுப்பியதற்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டினார்.
இந்த விவகாரத்துக்குக் கூடிய விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அதிபர் பைடன், இஸ்ரேல் எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்றார்.
இதன்மூலம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படக்கூடும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்தது.