புதிய கருத்துக்கணிப்பு; ரணில் விக்ரமசிங்கவுக்கு சாதகமா?
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த காலத்தில் பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளியாகியிருந்தன.
இந்தக் கருத்துக் கணிப்புகளில் தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தியும் மாறி மாறி முதிலிடம் பிடித்திருந்தன. அரசாங்கத்துக்கான ஆதரவு 10 சதவீதம்வரையே இருந்தது.
இதன் காரணமாக தமது செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுத்து அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.
‘இதோ ஒரு நற்செய்தி’ என்ற தொனிப்பொருளின் கீழ் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஆதரவான பிரசாரங்களும் கடந்த சில நாட்களாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், புதிய கருத்துக் கணிப்பொன்றை அரசாங்கம் இலங்கைத் தீவின் 25 மாவட்டங்களிலும் முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்புக்கு முன் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் இறுதி கருத்துக் கணிப்பாகவும் இது உள்ளது.
எதிர்வரும் 48 மணித்தியாலத்துக்குள் இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.
ரணில் விக்ரமசிங்கவுக்கான செல்வாக்கு அதிகரித்து இருக்கும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. ஆனால், அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் மனநிலையில் இன்னமும் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளின் பிரகாரமே அரசாங்கம் தமது அடுத்தகட்ட செயல்பாடுகளையும் வகுக்க உள்ளது.