கொழும்பு மாவட்டம் முழுவதும் ‘ரணில் முகம்’; ஐ.தே.கவுக்கு ஒரு ‘நற்செய்தி’
ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியை தயார்ப்படுத்தும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
இதற்காக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் தினமும் பல்வேறு சந்திப்புகளை அக்கட்சியின் மூத்த தலைவர்கள் நடத்தி வருகின்றனர்.
தேர்தல் பணிகளை வழிநடத்த ஜனாதிபதி செயலகத்தின் தலைமை செயலாளர் சாகல ரத்நாயக்க தலைமையில் விசேட குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.
இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்களின் முழுமையான வாக்குகளை கைப்பற்ற ஐ.தே.க வியூகம் வகுத்துள்ளது.
அதற்காக கொழும்பு மாவட்டம் முழுவதும் 1200 தேர்தல் காரியாலயங்களை அமைக்க ஐ.தே.க நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 10 நாட்களுக்குள் இந்த காரியாலயங்களை திறப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த காரியாலயங்கள் அமைக்கப்பட்டதும் கொழும்பு மாவட்டத்தில் இங்கு சென்றாலும் ரணிலின் பதாதைகளையே மக்கள் காண்பர்.
நாட்டை மீட்டெடுத்த தலைவர் ‘ரணில்’ என்ற தொனிப்பொருளின் கீழ் வைக்கப்பட உள்ள பதாதைகள் ஊடாக மக்கள் எங்கு சென்றாலும், ‘ரணில்’ என்ற பேச்சுகள் இடம்பெற வேண்டும் என்பதே ஐ.தே.கவின் நோக்கமாக உள்ளது.
அதன் காரணமாகவே “இதோ ஒரு நற்செய்தி“ என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வேறு விளம்பரங்களும் அண்மைய நாட்களாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை கட்சியின் மூத்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க செய்துவருவதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக போட்டியிடுவதற்கான எல்லாம் ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாக ரவி கருணாநாயக்க தெரிவிதுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.