கராச்சியில் மர்ம மரணங்கள் அதிகரிப்பு; 3 தினங்களில் 29 சடலங்கள் மீட்பு
பாகிஸ்தானின் கராச்சி நகரில் மர்மமான முறையில் உயிரிழந்த 29 பேரின் சடலங்கள் நகரின் பல பகுதிகளிலிருந்து 3 நாட்களில் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சடலங்களில் காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், இம்மரணங்களுக்கான காரணத்தை கண்டறிவதற்கு விசாரணைகளை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கராச்சியில் கடும் வெப்பம் நிலவும் நிலையில் இச்சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நகரின் பல பகுதிகளிலிருந்தும் 09 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘சிப்பா’ தொண்டு நிறுவனத்தின் தொண்டர்களால் 5 சடலங்களும், ‘எதி’ தொண்டுநிறுவனத்தின் தொண்டர்களால் 4 சடலங்களும் செவ்வாய்க்கிழமை (25) மீட்கப்பட்டுள்ளன.
இதனால், செவ்வாய் வரையான 3 தினங்களில் கராச்சியில் இவ்வாறு மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
கராச்சி நகரின் பெரிய வைத்தியசாலைகள் மற்றும் பிரேத அறைகளுக்கு கொண்டுவரப்படும் சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இம்மரணங்களுக்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்கு விசாரணை நடத்தப்படுவதாக சிந்து மாகாண உள்துறை அமைச்சர் ஸியா லன்ஞார் தெரிவித்துள்ளார்.
கடும் வெப்பம் நிலவும் நிலையில், மின்வெட்டு காரணமாக இம்மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டால், கராச்சியில் மின்சாரம் விநியோகிக்கும் கே எலெக்ட்ரிக் நிறுவனமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும், அந்நிறுவனத்தின் முகாமைத்துவத்துக்கு எதிராக கொலை வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் ஸியா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
கராச்சியில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவுகிறது. செவ்வாய்க்கிழமை 41.3 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. ஈரப்பதன் 63 சதவீதமாக இருந்தது.
நகரின் பல பகுதிகளில் பல மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டதால் நிலைமை மேலும் மோசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கராச்சியின் ஜின்னாஹ் பட்டப்பின்படி மருத்துவ நிலையத்தின் அவசரசேவைப் பிரிவு அதிகாரி வைத்தியசர் நௌஷீன் ரவூப் இது தொடர்பாக ஊடகங்களிடம் கூறுகையில், அவ்வைத்தியசாலையின் அவசர சேவைப் பிரிவுக்கு கடந்த திங்கள், செவ்வாய் தினங்களில் வந்த நோயாளிகளின் எண்ணிக்கை வழமையைவிட அதிகமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
“கடும் காய்ச்சல், பலவீனம், இரப்பை குடல் அழற்சி, வாந்தி, வயிற்றோட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகளின் எண்ணிக்கை வழக்கத்துக்கு மாறாக இருந்தது. செவ்வாய்க்கிழமை 12 மணிவரை 886 பேர் சிகிச்சைக்கு வந்தனர்.
திங்கட்கிழமை 24 மணித்தியாலங்களில் வெப்பத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 22 பேர் உட்டபட 1,592 பேர் அவசரசிகிச்சை பிரிவுக்கு வந்தனர்.
வழக்கமாக, ஒரு நாளில் 1200 முதல் 1,300 பேர் எமது அவசர சேவைப் பிரிவக்கு வருவார்கள். கொண்டு வரப்படும் சடலங்களின் எண்ணிக்கை 10 முதல் 15 வரை இருக்கும். ஆனால், நோயாளிகளின் எண்ணிக்கையும் சடலங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது” என அவர் கூறியுள்ளார்.
கராச்சியிலுள்ள ரூத் பாவ் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் இது தொடர்பாக கூறுகையில், வெப்பத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 65 பேர் சிகிச்சை பெற்றபின் வெளியேறியதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தூஸ் வைத்தியசாலையில் திங்கட்கிழமை 704 பேர் அவரச சிகிச்சை பிரிவுக்கு வந்தனர். அவர்களில் 8 பேர் வெப்பத்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார் என வைத்தியசாலை தரவுகள் தெரிவிக்கின்றன.
அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகளை தான் ஆரம்பித்துள்ளதாக ‘எதி’ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை 22 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டதாக அத்தொண்டு நிறுவனம் தெரிவித் துள்ளது.
அதேவேளை, கராச்சியின் சில பகுதிகளில் 28 ஆம் திகதி முதல் மழை பெய்யக்கூடும் என பாகிஸ்தான் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.