உலகம்

ஈரானில் ஜனாதிபதித் தேர்தல்; இஸ்லாமிய குடியரசின் புதிய தலைமைத்துவம் யார் வசம்?

இஸ்லாமியக் குடியரசு மேற்காசியாவில் அமையப்பெற்றுள்ள ஈரான் நாட்டில் நாளை வெள்ளிக்கிழமை (28.06.24) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் கிழக்கு அஸர்பைஜானுக்குஅருகிலுள்ள ஜோல்பா பகுதியில் கடந்த மாதம் (05.24) 19 ஆம் திகதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்ளிட்ட 09 பேர் உயிரிழந்தனர்.

அரசியலமைப்பின் 131 ஆவது பிரிவின்படி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் வரை இடைக்கால ஜனாதிபதியே நியமிக்கப்பட வேண்டும் என்ற பின்னணியில் முதல் துணை ஜனாதிபதியாக பணிபுரியும் முகமது மொக்பர் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

எவ்வாறாயினும் 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட வேண்டும் என்ற அரசியமைப்பின் பிரகாரம் நாளை (28.06.2024) தேர்தல் நடைபெறவுள்ளது.

உள்நாட்டு அதிருப்தி மற்றும் பிராந்திய கொந்தளிப்புகளுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள இந்த வாக்கெடுப்பு இஸ்லாமிய குடியரசை புதிய தலைமைத்துவத்திற்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தேர்தலில், மதகுரு தலைமைக்கு நெருக்கமான பழமைவாத வேட்பாளர்களில் ஒருவர் வெற்றி பெற்றால், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அரசாங்கம் அதனை தனது அரசியலின் முத்திரைக்கான வெற்றியாக அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான மேற்கத்திய தரநிலைகள் அல்லது மனித உரிமை அமைப்புகளால் ஈரானிய தேர்தல்கள் சுதந்திரமாகவோ அல்லது நியாயமானதாகவோ கருதப்படவில்லை.

இந்த பதவிக்கு போட்டியிடுவதற்கு 04 பெண்கள் உட்பட 80 பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்களை பரிசீலனை செய்த கார்டியன் கவுன்சில் 74 பேரின் விண்ணப்பங்களை நிராகரித்தது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் கார்டியன் கவுன்சில், 12 சட்ட வல்லுநர்கள் மற்றும் மதகுருமார்கள் கொண்ட குழுவால் கடுமையாக சரிபார்க்கப்படுகிறார்கள்.

இத்தேர்தலில் 80 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை 06 ஆகக் குறைத்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில் ஏழு பெண்கள், ஒரு முன்னாள் ஜனாதிபதி மற்றும் பல அரசாங்க அதிகாரிகள், சட்டமியற்றுபவர்கள் மற்றும் அமைச்சர்கள் உள்ளனர்.

இதன்படி, 06 பேர் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியலை கடந்த 09 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

அதில், முகமது பாகர் கலிபாப், சயீத் ஜலிலி, மசூத் பெஜெஷ்கியான், முஸ்தபா பூர்மொஹம்மதி, அமீர்உசைன் காசிசாதே ஹாஷமி மற்றும் அலிரேசா ஜகானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

வளைகுடாவிலுள்ள அத்தனை அரபு நாடுகளுக்கு மத்தியிலும் மொழியால் வேறுபட்ட நாடு ஈரான்.

மதத்தால் மாத்திரம் ஒன்றுபட்டுள்ள இந்த நாடு, தொழினுட்பம் உள்ளிட்டவற்றில் வேறுபட்டு காணப்படுகின்றது. இதனாலேயே ஈரான் வளைகுடா வீரன் என்றும் அழைக்கப்படுகின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.