ஆண் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம் இரத்து: உயர் நீதிமன்ற தீர்ப்பை வெற்றியாக கருதும் நமீபிய உரிமைக்குழுக்கள்

ஆண்களுக்கு இடையிலான ஒருபாலின உறவை குற்றமாக கருதுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என நமீபியாவின் தலைநகர் விண்ட்ஹோகில் உள்ள நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அத்துடன், குறித்த சட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், ஜனநாயக சமூகத்தில், பெரும்பான்மையான ஒரு பிரிவினர் ஏற்றுக்கொள்ள முடியாது என கருதுவதால், ஒரு நடவடிக்கையை குற்றமாக்குவது நியாயமானது என தாம் நம்பவில்லை எனவும் தீர்ப்பை அறிவித்த நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மே மாதம் நமீபியாவின் உயர் நீதிமன்றம், நாட்டு பிரஜைகள் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஓரினச்சேர்க்கை திருமணங்களை அங்கிகரித்தது. இருப்பினும், ஓரினச் சேர்க்கை குற்றமாகவே கருதப்பட்டது.

இந்த நிலையில், 1927 ஆம் ஆண்டுக்கு முந்தைய சட்டங்களை இரத்து செய்து இன்று இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரசு 21 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய முடியுமென நமீபியா பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான ஜான் நகுதா தெரிவித்துள்ளார்.

நமீபியாவை பொருத்தவரையில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் அரிதாகவே பயன்படுத்தப்பட்டாலும், உரிமைக் குழுக்கள் இந்த நீதிமன்றத் தீர்ப்பை வெற்றியாகக் கருதுகின்றன.

இந்த வழக்கை ஆதரித்த இலண்டனை தளமாகக் கொண்ட ஹியூமன் டிக்னிட்டி அமைப்பு இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button