இலங்கை

தமிழ் பொது வேட்பாளர்; இந்திய அழுத்தம் இல்லை

தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பில் இந்தியா மற்றும் மேற்கத்தேய வல்லரசுகளின் அழுத்தம் எதுவும் கிடையாது என ரெலொ அமைப்பின் ஊடாகப் பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து சந்திப்புகளை நடத்தி வருகின்றன. தமிழீழ விடுதலை இயக்கத்தின தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான எமது கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பில் தனது பூரண ஆதரவை ஏற்கனவே வழங்கியுள்ளது.

பொது வேட்பாளர் தொடர்பான கலந்துரையாடல்கள் வட மாகாணத்தில் பல்வேறு இடங்களில் இடம் பெற்று வரும் நிலையில் அண்மையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் அமைப்புகளை ஒன்றிணைத்து கலந்துரையாடல் இடம் பெற்றது.

இந்த கலந்துரையாடலில் 40க்கும் மேற்பட்ட சிவில் அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்து பிரதிநிதிகள் கலந்து கொண்டமை தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்தியா மற்றும் மேற்கத்தேய வல்லரசுகளின் அழுத்தங்கள் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் பிரயோகிக்கப்படவில்லை. இந்த நாடுகளே பின்னனியில் இருப்பதாக பொய் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது காலத்தின் தேவையாக உள்ள நிலையில் தமிழ் மக்களோடு பயணிக்கின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்தின் பிரகாரம் வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான பேச்சு வார்த்தைகள் இடம் பெற்று வருகின்றது.

அண்மையில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது ஒரு கேலிக் கூத்தான விடயம் என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

சுமந்திரனின் கருத்து, அவரது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் பொது வெளியில் கருத்து தெரிவிக்கும் போது அரசியல் நாகரீகத்துடன் கருத்து தெரிவிக்க வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் ஒவ்வொருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் கருத்துக்களை வெளியிடும்போது அரசியல் நாகரீகமாகப் பேச வேண்டும்.

ஆகவே தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தமிழ் கட்சிகள் சிவில் அமைப்புகள் ஒன்று இணைந்து முடிவுகளை எடுப்பது காலத்தின் தேவையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் யாழ் மாநகர துணை முதல்வர் துரைராஜா ஈசன், வட மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபாகுகதாஸ், மற்றும் வலி கிழக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.