இந்தியா

பிரதமர் மோடியின் தமிழக வருகை தள்ளிவைப்பு

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க, பிரதமர் மோடி சென்னைக்கு 20-ம் தேதி வர இருந்த நிலையில், அவரது பயணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பிரதமராக 3-வது முறையாக மோடி பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு முதல்முறையாக வரும் 20-ம்தேதி வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை அவர் தொடங்கி வைக்க உள்ளதாகவும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்திவந்தனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சென்னை பயணம் தள்ளிவைக்கப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே தரப்பில் கூறப்படுவதாவது:

பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி சென்னைக்கு வந்து, சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க இருந்தார். பேசின்பாலம் யார்டில் வந்தே பாரத் ரயில் பராமரிப்பு பணிமனைக்கு அடிக்கல் நாட்டுதல், ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம் – திருநெல்வேலி இடையேயும் நாகர்கோவில் டவுன் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி இடையேயும் நிறைவடைந்த இரட்டை பாதை திட்டங்களை காணொலி வாயிலாக நாட்டுக்கு அர்ப்பணிக்க இருந்தார்.

இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக பிரதமரின் சென்னை வருகை தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி பின்னர் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக பாஜகவும் இதை உறுதிப்படுத்தியுள்ளது. மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கு தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜன் எழுதியுள்ள கடிதத்தில், ‘பிரதமர் மோடி வரும் 20-ம் தேதி வருகை தர இருந்த நிகழ்ச்சி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மறு தேதி அறிவித்த பிறகு, திட்டமிட்டபடி சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *