பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; பொது தேர்தலுக்கு அழைப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ள நிலையில், பொது தேர்தலுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்களில் தனது கட்சி பேரழிவுகரமான முடிவுகளை சந்தித்ததை அடுத்து ஒரு விரைவான தேர்தலுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மரைன் லு பென்னின் தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சி பிரான்சில் ஐரோப்பிய நாடாளுமன்ற வாக்குகளில் சுமார் 32 வீதம் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இது மக்ரோனின் மையவாத, ஐரோப்பிய சார்பு மறுமலர்ச்சிக் கட்சி பெற்றுக்கொண்ட 15 வீதத்திற்கும் குறைவான வாக்குகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
“எதுவும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்ய முடியாது” என்று கூறிய மக்ரோன் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் தனது அரசாங்கத்திற்கு “நல்லதல்ல” என்றும் ஒப்புக்கொண்டார்.
மேலும், “தேசியவாதிகளின் எழுச்சி” பிரான்சிற்கும் ஐரோப்பாவிற்கும் ஆபத்தானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், மக்ரோன் ஒரு “பலவீனமடைந்த ஜனாதிபதி” என்று தேசிய பேரணியின் முன்னணி வேட்பாளர் ஜோர்டான் பார்டெல்லா தெரிவித்துள்ளார்.
இதன்படி, பிரான்சில் ஜூன் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய திகதிகளில் இரண்டு சுற்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரான்ஸ் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பெரும் ஆச்சரியம் அளிப்பதாக அந்நாட்டின் அரசியல் விஞ்ஞானி டொமினிக் மொய்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
“பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதற்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைக்க முடிவு செய்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.” என அவர் மேலும் கூறியுள்ளார்.