உலகம்

4 பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

“காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் அக்டோபர்-7 தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கவும், அவர்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளை மீட்கவும் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

பணயக் கைதிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்களை மீட்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், மத்திய காசாவின் நூசிரத் அகதிகள் முகாம் பகுதியில் நேற்று ஒரே சமயத்தில் இரண்டு குடியிருப்பு கட்டிடங்களில் இஸ்ரேல் படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த தாக்குதலின் முடிவில், 4 பணயக் கைதிகளை இஸ்ரேல் படையினர் உயிருடன் மீட்டனர்.மீட்கப்பட்ட நோவா அர்கமாணி (25), அல்மோக் (21), ஆன்ட்ரே கோஸ்லோவ் (27), ஷ்லோமி (40) ஆகிய நான்கு பேரும் நாடு திரும்பியதை இஸ்ரேலியர்கள் கொண்டாடிவருகின்றனர்.

இன்னும் ஏராளமான பணயக்கைதிகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அல்லது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சுரங்கப்பாதைக்குள் அடைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவர்களை மீட்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் மிகவும் சிக்கலானதாகவும் ஆபத்தானதாகவும் உள்ளன. பிப்ரவரி மாதம் இதேபோன்ற ஒரு நடவடிக்கையில் 74 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில் 2 பணயக்கைதிகளை மீட்டனர்.

இந்நிலையில், 4 பணயக் கைதிகளை மீட்பதற்காக பகல் நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 700 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் எத்தனை பேர் பெண்கள், எத்தனை பேர் குழந்தைகள்? என்பதுபோன்ற விவரங்களை தெரிவிக்கவில்லை.

காயமடைந்தவர்கள் அருளில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். தாக்குதலுக்குப் பிறகு அருகிலுள்ள டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள அல்-அக்சா தியாகிகள் மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெறுவதை பார்த்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர்கள் கூறி உள்ளனர்.

இஸ்ரேல் படைகளின் தாக்குதலால் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே வந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க ஏற்கனவே போராடிக்கொண்டிருக்கும் நிலையில், மேலும் நோயாளிகள் வந்ததால் நிலைமை மோசமாகியிருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

மீட்பு பணியின்போது இஸ்ரேல் படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் மிகப்பெரிய அளவில் பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.