ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தல்: ஆட்சியமைக்கப்போவது யார்?
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய நாடாளுமன்றம் யார் தலைமையில் அமையும் என்ற அறிவிப்புகள் இன்று திங்கட்கிழமை (10.06.) வெளியாகவுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்திற்கு ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.அந்த வகையில் 2024 அம் ஆண்டு தேர்தல் இடம்பெற்றது.
ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் நேரடி உலகளாவிய வாக்குரிமை மூலம் ஐந்தாண்டு காலத்திற்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.
இதன்படி, வியாழக்கிழமை (06.06.24) நெதர்லாந்திலும் ஏனைய நாடுகளில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தேர்தல் இடம்பெற்றது.
பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய வாக்குகள் நேற்று பதிவாகின. பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் வாக்குப்பதிவுகளின் பின்னர் இத்தாலி வாக்கெடுப்பை நடத்தியது.
இதன்படி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் கடந்த வியாழக்கிழமை (06.06) முதல் நேற்று (09.06) ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி வரை இடம்பெற்றன.
இதன்பின்னர் வாக்கெண்ணும் பணிகள் தீவிரமாக இடம்பெற்றன.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உள்ள 720 இடங்களில் பெரும்பான்மையை பெறுவதற்கு 361 இடங்கள் தேவைப்படுகின்றன.
பிரதான கட்சிகள் மற்றும் ஐரோப்பிய சார்பு கட்சிகள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்ளும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நெதர்லாந்தின் கீர்ட் வில்டர்ஸ் மற்றும் பிரான்சின் மரைன் லு பென் போன்றவர்கள் தலைமையிலான கட்சிகள் உள்ளிட்ட வலதுசாரி கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த வெற்றி ஐரோப்பாவிற்கு புதிய சட்டத்தை இயற்றுவதையும் முடிவுகளை எடுப்பதையும் கடினமாக்கும்.