2001 ஆம் ஆண்டு யாழில் நடந்த வன்முறை; லண்டனில் ஒருவர் கைது!
யாழ்ப்பாணத்தில் 2001ம் ஆண்டு அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் லண்டனில் ஒருவர் கைது- தமிழ் மக்களிடமிருந்து மேலதிக தகவல்களை மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் கோரியுள்ளனர்.
2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஒருவரை கைதுசெய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்துடன் தொடர்புடைய யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாத எதிர்ப்பு துப்பறியும் பிரிவினரின் விசாரணைகளிற்கு உதவக்கூடிய தகவல்கள் உள்ளவர்களை விசாரணைக்கு உதவுமாறு லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த இரண்டாவது நபரை கைதுசெய்துள்ள நிலையிலேயே இந்த வேண்டுகோள் வெளியாகின்றது.
இந்த குற்றங்கள், பாதிக்கப்பட்டவர்களிற்கும் சாட்சிகளிற்கும் நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோ பொலிஸ் தளபதி டொமினிக் மேர்பி, இது குறித்த விசாரணைகளின் ஒரு பகுதியாக இருவரை இதுவரை கைதுசெய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பாரதூரமான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரிகள் தங்கள் நடவடிக்கைகளில் முன்னேற்றங்களை சந்தித்துள்ளனர் என்பதற்கான அறிகுறி இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய பாரதூரமான சம்பவங்களை போல இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேலும் முன்னெடுப்பதற்கு கண்ணால் கண்ட சாட்சியங்கள் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இந்தச் சம்பவம் குறித்து தகவல்கள் தெரிந்தவர்கள் உள்ளனர் என்பது எங்களிற்கு தெரியும். அவர்கள் இன்னமும் விபரங்களை தெரிவிக்க முன்வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த விபரங்கள் உள்ளவர்கள் பொலிஸாருடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் நாங்கள் உங்களிற்கு ஆதரவளிப்போம். நீங்கள் வழங்கும் தகவல்கள் இரகசியமாகப் பேணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைக்கு உதவக் கூடிய நேரடித் தகவல்கள் உள்ளவர்களை சந்திப்பதற்கு அதிகாரிகள் ஆர்வமாக உள்ளனர் குறிப்பாக 2000ம் ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள டொமினிக் மேர்பி, இலங்கையில் அந்த நாட்களில் உறவினர்கள் வசித்தவர்கள் – பின்னர் அந்த உறவினர்கள் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர்களும் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2001 சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டத்தின்படி 2023ம் ஆண்டு நவம்பர் 21ம் திகதி, லண்டனின் தென்பகுதியில் வசித்த 60 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ள லண்டன் மெட்ரோ பொலிட்டன் பொலிஸார், அவர் பொலிஸாரின் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு பிணையின் கீழ் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.
இது 2001 இன் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பானது. இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.
2022 இல் பெப்ரவரியில் இதே குற்றத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 48 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.இது 2000ம் ஆண்டு ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடையது.
விசாரணைகளின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டார் விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன 2017 இல் பயங்கரவாத பொலிஸின் யுத்த குற்ற பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பானவையே இந்த குற்றங்கள்.