பதவி விலகல் கடிதத்தை கையளித்த இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பதவி விலகல் கடிதத்தை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் கையளித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிரதமர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளார்.

அதனை ஏற்றுக்கொண்ட இந்திய ஜனாதிபதி, புதிய அரசாங்கம் அமையும் வரை நரேந்திர மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கோரியுள்ளார்.

இதேவேளை டில்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவை நேரில் சந்தித்த நரேந்திர மோடி, 17ஆவது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் கையளித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி மூன்றாவது முறையாகவும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அங்கத்துவம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களையும், ராஹூல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் அங்கத்துவம் வகிக்கும் இந்தியா கூட்டணி 232 இடங்களையும் கைப்பற்றின.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதற்கு 272 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில், பாரதிய ஜனதா கட்சி 240 ஆசனங்களையே பெற்றிருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button