யாழில்…. புகைத்தலுக்கு எதிராக போராட்டம்!
சர்வதேச புகைத்தல் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான போராட்டம் ஒன்று இன்று (31) சங்கானை பஸ் நிலையத்துக்கு முன்னால் இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘அழகான இளைஞர்களின் உடல் அழகையும் முகத்தின் வசீகரத்தையும் சிதைக்கும் போதைப்பொருள் பாவனைக்கு ஏமாறமாட்டோம்’, ‘எமது பிள்ளைகளை புகையிலைக் கம்பனிகளிடமிருந்து பாதுகாக்க அனைவரும் அணிதிரள்வோம்’, ‘புகைப்பதால் உன் அழகு புன்னகை இழக்கும்’, ‘உடலை உருக்கும் சிகரெட் பாவனை எதற்கு?’, ‘சினிமாவில் புகைப்பதை பார்த்து உன் கல்வியை அழிக்காதே’ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கோஷம் எழுப்பினர்.
வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தின் நிர்வாகத்தினர், அங்கத்தவர்கள், சங்கானை பிரதேச செயலக பிரதேச செயலர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
போதைப் பொருளுக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணியொன்று “போதைக்கும் புகைத்தலுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம். வலுவான தேசம் ஒன்றினை நிதமும் கட்டியெழுப்புவோம் ” எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணத்திலும் முன்னெடுக்கப்பட்டது.
நல்லை ஆதீனத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணியானது அங்கிருந்து நல்லூர் பிரதேச செயலகம் வரை சென்று நிறைவடைந்த்து.
இதன் போது மகிழ்ச்சியான குடும்பத்திற்கு புகைத்தலே முதல் எதிரி, இளைஞர்களின் ஆண்மையை இல்லாது செய்யும் புகைத்தல் எதற்கு, புகைத்தலை கைவிடு உனது வாழ்வில் மகிழ்ச்சி இருமடங்காகும், மானிடத்தின் உயிர்கொல்லி மதுவே நீ ஒழிக, அதிகரித்த இளவயது விவாகாரத்திற்கு காரணம் போதைப்பொருளே, போதைபொருளை கைவிடு வாழ்வு வளமாகும், போதையில்லாத வாழ்வே எப்போதும் மகிழ்ச்சியை தரும் உட்பட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி பேரணியாக சென்றனர்.
இப் பேரணியில் சமுர்த்தி அதிகாரிகள், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்திப் பயனாளிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()