கட்டுரைகள்

உலக ஊடக சுதந்திர தினம் -2024 ஈழத்தில் ஊடகங்கள் மீதான அடக்குமுறை!…. நவீனன்.

(ஒவ்வொரு ஆண்டும், மே 3 ஆம் திகதி உலக ஊடக சுதந்திர தினம் -World Press Freedom Day – அனுசரிக்கப்படுகிறது)
ஒவ்வொரு ஆண்டும், பத்திரிகையாளர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தகவல் பரிமாற்றம் சீராக இருப்பதை உறுதி செய்ய அவர்கள் ஆற்றும் கடமைகளை நினைவூட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஊடக சுதந்திர தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஈழத்தில் ஊடக அடக்குமுறை:
ஈழத்தில் சுயாதீன ஊடகங்களை அடக்குவதற்கு வன்முறையைப் பயன்படுத்துவதிலும், அரச படைகளின் கொடூர தாக்குதல்களும் நீண்ட வரலாற்றைக் கொண்டிருக்கின்றது.
1981இல் ஈழநாடு எரிப்புமுதல், பின்னர் இந்திய இராணுவத்தால் முரசொலி, ஈழமுரசு, நிதர்சனம் தகர்க்கப்பட்டதில் இருந்து தமிழ் ஊடகங்களின் மீதான அடக்குமுறை பல்வேறு காலங்களில் ஆதிக்க சக்திகளினால் பிரயோகிக்கப்பட்டது.
தமிழ் ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
அதுபோன்று சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, ஊடகவியலாளர்களான நிமலராஜன், ஐயாத்துரை நடேசன், தர்மரட்னம் சிவராம், சுப்பிரமணியம் சுகிர்தராஜன், செல்வராஜா ரஜீவர்மன், லசந்த விக்கிரமதுங்க, பரணிரூபசிங்கம் தேவகுமார், என சுதந்திர ஊடகத்துறையை காக்கவென அயராது உழைத்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
அத்துடன் சுப்பிரமணியம் ராமச்சந்திரன், பிரகித் எக்னலிய கொட என எத்தனையோ ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
ஊடக சுதந்திர தினம் 2024:
பத்திரிகை சுதந்திரம் அல்லது ஊடக சுதந்திரம் என்பது, அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்கள் மூலம் தகவல் தொடர்பு மற்றும் வெளிப்பாடு சுதந்திரமாக பயன்படுத்தப்படும் உரிமையாக கருதப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையாகும்.
இத்தகைய சுதந்திரம் என்பது ஒரு மிகையான நிலையில் இருந்து குறுக்கீடு இல்லாததைக் குறிக்கிறது. அதன் பாதுகாப்பு அரசியலமைப்பு அல்லது பிற சட்டப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு மூலம் கோரப்படலாம்
உண்மையை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் பொறுப்பு. இருப்பினும், அச்சுறுத்தல்கள், வன்முறை மற்றும் தணிக்கை போன்ற தங்கள் கடமைகளைச் செய்வதில் அவர்கள் பெரும்பாலும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.
பத்திரிகைகளும் ஊடகவியலாளர்களும் தங்கள் கடமைகளை மிகவும் நேர்மையான வழியில் மேற்கொள்வதற்கு ஏற்ற சூழலை அரசும் பொதுமக்களும் புரிந்துகொண்டு உருவாக்குவது முக்கியம்.
சிங்கள ஊடகர்கள் படுகொலை :
சிறிலங்காவிலும் 1990ம் ஆண்டு இன்ரர் பிறஸ் சேர்வீஸ் நிறுவனத்தின் ஊடகவியலாளன் ரிச்சேட் டி சொய்சா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதோடு இந்த நீண்ட கறைபடைந்த வரலாறு தொடர்ந்தது எனலாம்.
28 ஏப்ரல் 1990 ஆம் ஆண்டு நிச்சட் டி சொய்சாவின் உடல் கண்டெடுக்கப்படுகிறது. அவரது உடலை அடையாளங்கண்டு கொண்டவர் தராகி என்ற தர்மரட்ணம் சிவராம் தமிழ் நெற் இணையத்தினுடய ஆசிரியரான இருந்தவர். பின்னர் 28 ஏப்பரல் 2005 அன்று சிவராம் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்தக் கொலைப்பட்டியல் பின்னர் நீண்டு அதிகரித்து வந்துள்ளது. தமிழ் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளார்கள். உண்மைத்தகவல்களை வெளிக் கொண்டுவந்தார்கள் என்பதற்காக இவர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் 1948 மனித உரிமைகள் உலகளாவிய பிரகடனம் இவ்வாறு கூறுகிறது: “ஒவ்வொருவருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. இந்த உரிமையில் குறுக்கீடு இல்லாமல் கருத்துகளை வைத்திருப்பதற்கும், எந்த ஊடகத்தின் மூலம் தகவல் மற்றும் யோசனைகளைத் தேடுவதற்கும், பெறுவதற்கும் மற்றும் வழங்குவதற்கும் சுதந்திரம் உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுளளது.
தமிழ் ஊடக படுகொலை:
பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி வந்த நிமலராஜன் 2000 ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி கொல்லப்பட்டார்.
ஈழப் போரின் மையப்புள்ளியாக இருந்த யாழ்ப்பாணத்திலிருந்து செய்திகளை வழங்கி கொண்டிருந்த மயில்வாகனம் நிமலராஜன் 24 வருடங்களுக்கு முன்பு அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
கொடூரமான போரால் இலங்கையில் பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருந்த வேளையில் பலத்த ஆபத்துகளுக்கு மத்தியில் தொடர்ந்து போர் குறித்தும், மனித உரிமை மீறல்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பிபிசி தமிழ் உட்பட பல ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கி கொண்டிருந்தவர் நிமலராஜன்.
அதன்பின் 2004 மே 31இல் நடேசன் படுகொலை செய்யப்பட்ட துயர நாளாகும். தான் வாழ்ந்த சமூகத்தின் நீதிக்காக அரசியல் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளன் ஒருவனுக்கு அதற்கு பரிசாக நடு வீதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்.
தமிழர்களின் போராட்டம் ஒரு நியாயமற்ற, காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதம் எனச் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் சிங்கள மக்களுக்குப் போதித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழர்களின் போராட்ட நியாயத்தையும், அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்படுவதால் மாத்திரமே இலங்கைத் தீவில் அமைதி நிலவும் என்ற யதார்த்தத்தையும் தர்க்க நியாயங்களோடு சிங்களவர்களுக்கும் புரியக் கூடியவாறு ஊடகர் சிவராம் ஆங்கிலத்தில விளக்கினார்.
பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளுக்கு அப்பால் சிங்களத் தேசியம் பேசிய ஊடகவியலாளர்களுடனும் அவர் திரைமறைவில் தர்க்கிக்க வேண்டியிருந்தது. எவருமே துணிந்து செய்ய முன்வராத ஒரு காரியத்தை கொழும்பில் இருந்து கொண்டே செய்ய முன்வந்த சிவராமின் துணிச்சல் பாராட்டப்பட வேண்டியது.
மறுபுறம், தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கிய பல பிரச்சினைகள் சிங்கள ஊடக அமைப்புக்களால் கண்டு கொள்ளாமல் விடப்பட்டபோது ‘இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்’ என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னோடியாக நின்றும் செயற்பட்டார். பின்னர் 28 ஏப்பரல் 2005 அன்று சிவராம் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார்.
உதயன் மிதான தாக்குதல் :
2006இல்்திருகோணமலையில் ஆறு மாணவர்களின் கொலையை வெளிப்படுத்தியதற்காக உதயன், சுடர் ஒளி நிருபர் சுப்பிரணியம் சுஜிதராஜ் கொல்லப்பட்டார். 2006ம் ஆண்டு ஈழத்தின் மிகப்பெரும் ஊடகப்படுகொலையென வர்ணிக்கப்படுகின்ற உதயன் பத்திரிகை நிறுவனத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் அங்கு பணியில் இருந்த இருவரை சுட்டக் கொன்றார்கள். இது ஊடக நிறுவனத்தக்குள் புகுந்து நடத்தப்பட்ட மிகப்பெரியதும் முக்கியமானதுமான தாக்குதலாகும்.
புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நன்கு அறியப்பட்ட வன்னியைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமுற்று இறந்தார்.
2003 ஆம் ஆண்டு தொடக்கம் தாயகத்தில் இருந்து ஈழத்து நிலைமைகளை புலம்பெயர் ஊடகங்களுக்கு தொலைக்காட்சிகள், மற்றும் வானொலிகள் வழியாகவும் அச்சு ஊடகங்கள் வழியாகவும் இணைய ஊடகங்கள் வழியாகவும் வெளியிட்டு வந்தவர் சத்தியமூர்த்தி.
நீதி மறுக்கப்பட்ட பத்திரிகையாளர்கள்:
அமெரிக்காவிலிருந்து பத்திரிகையாளர்களுக்காக செயல்படும் ‘கமிட்டி டு ப்ரொடக்ட் ஜர்னலிஸ்ட்ஸ்’ என்ற அமைப்பு இலங்கையில் 1992ஆம் ஆண்டு காலத்திலிருந்து 2023ஆம் ஆண்டு காலம் வரை 25 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கிறது.
ஆனால் இந்த எண்ணிக்கை 39க்கும் அதிகம் என்பதே உண்மையாகும். நிமலராஜனின் மரணத்திற்கு பிறகு வட கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் மட்டும் 39க்கும் மேற்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
இந்த படுகொலை செய்யப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஊடக பணியாளர்கள் அல்லது ஊடகவியலாளர்கள் தொடர்பாக இதுவரை சொல்லிக் கொள்ளத் தக்க வகையில் இலங்கை சார்பாக எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதே வரலாற்று உண்மையாகும்.
ஊடகர்களுக்கு யுனெஸ்கோ பரிந்துரை:
1991 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் பரிந்துரைக்குப் பிறகு, 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஒவ்வொரு ஆண்டும் மே 3 அன்று பத்திரிகை சுதந்திர தினத்தை அனுசரிக்க நிறுவியது.
முதல் ஊடப சுதந்திர தினம் 1994 இல் அனுசரிக்கப்பட்டது. பத்திரிகைகளின் சுதந்திரத்தை உறுதி செய்யும் நோக்கத்துடனும், கடமையின் போது உயிர் நீத்த பத்திரிகையாளர்களை நினைவுகூர்ந்து கௌரவிக்கவும் இந்த நாள் நிறுவப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எப்போதும் அனைத்து வகையான தகவல்களையும் அணுக வேண்டும் என்பதையும், பத்திரிகையாளர்கள் தங்கள் பணிகளைச் செய்ய பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதில் அரசாங்கம் அதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதையும் மீண்டும் வலியுறுத்த இந்த நாள் உதவுகிறது.
உண்மை சொல்லப்படுவதையும், பத்திரிகை சுதந்திரம் எல்லா நேரங்களிலும் மதிக்கப்படுவதையும் உறுதி செய்வதில் ஊடக நிறுவனங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆற்றிய பணிகளுக்காக இந்த நாள் கௌரவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.