கட்டுரைகள்

செல்வம் – ஸ்வீட் சிக்ஸ்டி… ச.சுந்தரதாஸ்

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகர்களுக்குள் வி .கே . ராமசாமியும் ஒருவர். 1926ம் வருடம் பிறந்த அவருக்கு இவ்வாண்டு நூற்றாண்டாகும். பால வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கி, தனது பத்தொன்பதாவது வயதிலேயே அறுபது வயதுக்காரராக நாம் இருவர் படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் இவர். நடிப்பதோடு நின்று விடாது படங்களையும் தயாரித்த வி .கே .ஆர் .1966ம் ஆண்டு செல்வம் தேடும் நோக்கோடு செல்வம் படத்தை தயாரித்தார் .

சிவாஜியுடன் நெருக்கமாக இருந்த வி கே ஆர் சொந்த படங்கள் எடுத்து அதனால் கையை சுட்டுக் கொண்ட நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருந்தார். இதனை தன் நண்பன் சிவாஜியிடம் அவர் சொல்லாத போதும் அவர் நிலை அறிந்த சிவாஜி அவருக்கு பொருளாதார மீட்சி கொடுக்கும் விதமாக துரித கதியில் ஒரு படம் நடித்து கொடுக்க முன் வந்தார். அந்தப் படம் தான் செல்வம்.

பிரபல கதாசிரியராக பி .எஸ் . ராமையா எழுதிய கதை செல்வம் என்று படமானது. சோதிடத்தில் தீவிரமான நம்பிக்கை வைத்திருக்கும் பணக்காரத் தாய் ஜாதகப் பொருத்தம் இல்லை என்று சோதிடர்கள் சொன்ன காரணத்தால் சிறு வயது முதல் காதலில் மூழ்கியிருந்த மகன் செல்வத்தின் காதலை நிராகரிக்கிறாள். ஆனால் விடாப் பிடியாக செல்வம் காதலியை திருமணம் செய்து கொள்கிறான். திருமணம் நடக்கும் வரை துணிந்து செயற்பட்டவன் அதன் பின் எங்கே தான் ஜாதகப் பலன் காரணமாக இறந்து விடுவேனோ என்று அஞ்சுகிறான். சோதிடம் பலித்ததா அல்லது காதல் ஜெயித்ததா என்பதே படத்தின் மீதி பகுதி.

சீரியஸான கதையை ஒரளவு நகைச்சுவை கலந்து படமாக்கியிருந்தார்கள். இவ்வளவுக்கும் படத்தில் முழு நேர காமெடியன் என்று யாருமில்லை. நாகேஷ் கூட ஒரு காட்சியில் மட்டும் வருகிறார். இதனால் தானோ என்னவோ சீரியஸ் நடிகர்களான சிவாஜி, ரங்காராவ் . நாகையா , சகஸ்ரநாமம் ஆகியோர் போகிற போக்கில் காமெடி செய்கிறார்கள்.

சிவாஜியின் படம் என்பதை காட்சிக்கு காட்சி உணரும் வண்ணம் படம் உருவாகி இருந்தது. இது வரை காட்டாத விரகத்தை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார் சிவாஜி. விஜயாவிடமும் , ரங்காராவிடமும் அவர் நெளிந்து வளைவதும், அசடு வழிவதும் புதுசு. இறுதி காட்சிகளில் மரண பீதியில் நடுங்குவதையும் ரசிக்கலாம். விஜயா அழகாக வந்து கவர்கிறார். ராஜம்மா அம்மாவாக வந்து சோதிட நம்பிக்கையில் புரண்டு , மிதந்து எல்லோரையும் குழப்புகிறார். ரங்காராவ் இதில் காமடி நடிகராகி விட்டார். நாகய்யா நடிப்பு அருமை.

எஸ் வி சகஸ்ரநாமம் ஏன் படத்தில் இருக்கிறார் என்பது கடைசியில் தான் தெரிகிறது.

சிவாஜி, பந்துலு நட்புக்கு பங்கம் ஏற்பட்ட போதும் இந்தப் படத்தில் பந்துலுவின் மனைவி எம் .வி . ராஜம்மா தன் தாயக நடிக்க சிவாஜி மறுப்பேதும் சொல்லவில்லை. அதே போல் பின் நாட்களில் பிரபலமான நகைச்சுவை நடிகையாக உருவான ராமபிரபாவுக்கு இந்த படத்தில் தான் விலாசம் கிடைத்தது. அவரின் பாத்திரமும் கவர்ந்தது. இவர்களுடன் டி. பாலசுப்ரமணியம், சுந்தரிபாய் , சாமிக்கண்ணு, ஆகியோரும் நடித்தனர்.

படத்தின் பாடல்களை வாலி, ஆலங்குடி சோமு இருவரும் எழுத கே வி மகாதேவன் இசையமைத்தார். புதுப் பாடகரான தாராபுரம் சுந்தரராஜன், ஜமுனாராணி பாடிய எனக்காக வா உனக்காக வா பாடலும், காட்சியும் கவரும் படி அமைந்தது. டீ எம் எஸ்ஸின் அவளா சொன்னால் பாடலில் சிவாஜியின் நடிப்பு டீ எம் எஸ்ஸுடன் போட்டி போடுகிறது.

ஆர் . சம்பத் படத்தை ஒளிப்பதிவு செய்தார். அன்றைய கால கட்டத்தில் பிஸி இயக்குனராக திகழ்ந்த கே . எஸ். கோபாலகிருஷ்ணன் படத்தின் கதை வசனங்களை எழுதி டைரக்ட் செய்திருந்தார். அவரின் ஸ்டைலில் வழக்கம் போல் மிகை வசனம், மிகை நடிப்பு, என்று படம் நகர்கிறது . ஆனாலும் தாய்ப் பாசம், சோதிட நம்பிக்கை, காதல், இல்லற சுகம், எல்லாவற்றையும் ஒருவிதமாக சமப் படுத்தியிருப்பதை பாராட்டலாம்.

நண்பனுக்காக துரித கதியில் சிவாஜி நடித்து, கே எஸ் ஜி இயக்கிய படம். சொந்தப் படம் என்ற போதும் வி கே ஆர் எனோ படத்தில் நடிக்கவில்லை . அது மட்டுமன்றி அடுத்து வந்த ஆறாண்டுகளுக்கு கே எஸ் ஜியின் இயக்கத்தில் வி கே ஆர் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை! ஆனாலும் செல்வத்துக்கு பிறகு மேலும் சில படங்களை தயாரித்து செல்வத்தை இழந்தார் வி கே ஆர்!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *