பாஜக தேர்தல் அறிக்கையில் தவிர்க்கப்பட்ட கச்சத்தீவு: கேள்வியெழுப்பினார் ப.சிதம்பரம்
பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்
“காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 4 மாதங்களாகத் தயாரிக்கப்பட்டது. பாஜக தேர்தல் அறிக்கையை 14 நாட்களில் தயாரித்துள்ளனர். இந்த 14 நாட்களில் 15 இலட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக கூறுகின்றனர். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவர்களுக்கு இடம்தர வேண்டும்.
புல்லட் தொடருந்து திட்டம்
பாஜக தேர்தல் அறிக்கையில் புதியபாதை, புதிய அறிவிப்புகள் இல்லை.5 கோடி பேர் தான் வறுமைக்கோட்டுக்கு கீழே இருப்பதாக இருந்தால் 80 கோடி பேருக்கு ஏன் 5 ஆண்டுகளுக்கு இலவச ரேஷன் அரிசி, கோதுமை தர வேண்டும், சாதிவாரி, பொருளாதாரக் கணக்கெடுப்பு நடத்தினால்தான் உண்மையைக் கண்டறிய முடியும்.
4 கோடி இலவச வீடுகள் கட்டியதாகவும், 3 கோடி வீடுகள் கட்டப் போவதாகவும் கூறுகின்றனர். அப்படியென்றால் ஒரு மாவட்டத்துக்கு சராசரியாக 52 ஆயிரம் வீடுகள் கட்டியிருக்க வேண்டும்.
ஒரு புல்லட் தொடருந்து இயக்கவே 1.10 இலட்சம் கோடி ரூபாய் செலவானது. இதனால் புதிதாக அறிவித்த புல்லட் தொடருந்து திட்டத்துக்கு பணம் உள்ளதா, கடன் வாங்க போகிறார்களா?
பண மதிப்பிழப்பாலும், கொரோனா காலத்திலும் சிறு, குறு தொழில்கள் மூடப்பட்டன. ஆனால், அவர்களுக்கு கடன் தருவதாக அறிவித்ததில் வட்டி, கடன் அளவை கூறவில்லை.
கச்சத்தீவு விவகாரம்
கல்விக்கடனை ரத்து செய்ய முடியாது என பாஜக கூறுகிறது. ஆனால் கடந்த 9 ஆண்டுகளில் பெரும் முதலாளிகளுக்கு மட்டும் 10 இலட்சத்து 41 ஆயிரத்து 974 ரூபாய் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு நாடு; ஒரு தேர்தல், பொது சிவில் சட்டம் இவை பேராபத்துகள். மக்களை பிளவுபடுத்தி, சர்வாதிகார பாதைக்கு அழைத்துசெல்லும்.
கச்சத்தீவு குறித்து பிரதமர் முதல் எல்லோரும் பேசினார்கள். ஆனால்,தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு குறித்து ஏன் குறிப்பிடவில்லை?
10 ஆண்டாக அரைத்த மாவையே தேர்தல் அறிக்கையில் அரைத்துள்ளனர். அதைமக்கள் நிராகரிப்பார்கள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் அமோக வரவேற்பு உள்ளது.“ என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.