கட்டுரைகள்
பாரிஸில் காசா போர் நிறுத்த உடன்பாடு : இரு நாட்டு தீர்வு இனியும் சாத்தியமா? …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.
(இரு நாட்டுத் தீர்வு என்பது மேற்குலகின் பிரதான கொள்கையாக இருந்து வந்தபோதும் 1994இல்
ஒஸ்லோ ஒப்பந்தம் கைச்சாத்தானது தொடக்கம் பலஸ்தீன நாடு ஒன்றை அடைவதற்கான முயற்சியில் சிறிய அளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது)
எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி இஸ்லாமியர்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகளும் தீவிரம் அடைந்துள்ளன.
தற்போது காசா போரில் இஸ்ரேலின் கவனம் இறுதியாக ரஃபாவின் பக்கம் திரும்பியுள்ளது. எகிப்தின் எல்லையான ரஃபாவில் ஹமாஷ் போராளிகளைகளை அழிக்கப் போவதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.
பாரிஸில் புதிய ‘போர் நிறுத்த’ (Ceasefire In Gaza) உடன்படிக்கை எட்டப்பட்ட
நிலையிலும், இஸ்ரேல் எகிப்திய எல்லையில் உள்ள ரஃபாவில் அதிகவனம் செலுத்துகிறது. காசாவில் மார்ச் 4 ஆம் திகதிக்குள் போர் நிறுத்தம் வர சாத்தியம் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய உடன்பாடு ஏற்பட்டால், 40 நாள் போர் நிறுத்தம் அமலுக்கு வரலாம். காசாவில் ஹமாஸ் பிடித்து வைத்திருக்கும் பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உள்ள மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் தீவிர தாக்குதல்:
காசாவில் போர் நிறுத்தத்தைக் கொண்டுவர அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் ஹமாசின் கோரிக்கைகளை ஏற்க இஸ்ரேல் மறுத்தது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், மார்ச் 4 ஆம் திகதிக்குள் நிறுத்தம் ஏற்படும் என எதிர்பார்கப்படுகிறது. அதேவேளை இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
பாரிஸில் புதிய ‘போர் நிறுத்த’ முயற்சி:
பாரிஸில் புதிய ‘போர் நிறுத்த’ முயற்சிக்கு இடையே மத்திய காசாவில் இஸ்ரேல் பயங்கர வான் தாக்குதலை தொடர்கிறது. காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான புதிய சுற்று பேச்சுவார்த்தை பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பெப்ரவரி 23 ஆரம்பமானது.
காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது மற்றும் அங்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா, கட்டார் மற்றும் எகிப்து பங்கேற்றுள்ளன.
எனினும் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக எகிப்து தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் காண தவறின. இதில் ஹமாஸ் அமைப்பின் முன்மொழிவுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “மாயையானது” என்று நிராகரித்திருந்தார்.
இந்நிலையில் இஸ்ரேலிய உளவுப் பிரிவு தலைவர் டேவிட் பார்னீ தலைமையில் பேச்சுவார்த்தை குழு ஒன்றை பாரிஸ் அனுப்ப இஸ்ரேல் போர் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி பலஸ்தீன போராளிகளால் பிடிக்கப்பட்டு இன்னும் அவர்களின் பிடியில் இருப்பதாக நம்பப்படும் 100க்கும் அதிகமான பணயக்கைதிகளை விடுவிக்கும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு பாரிஸ் பேச்சுவார்த்தையில் முயற்சி மேற்கொள்ளப்படவிருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தப் பேச்சுவார்த்தையில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ், கட்டார் பிரதமர் ஷெய்க் முஹமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி மற்றும் எகிப்து உளவுப் பிரிவுத் தலைவர் அப்பாஸ் பமால் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக பேச்சு வார்த்தையாளர்களுக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் கூறி இருந்தார்.
மறுபுறம் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே மூன்று நாள் நீடித்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின் எகிப்தில் இருந்து புறப்பட்டுச் சென்றதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹனியே தலைமையிலான இந்த தூதுக்குழு எகிப்து உளவுப் பிரிவு தலைவர் அப்பாஸுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக அந்த அமைப்பு கூறியது.
மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் நீட்டிக்கப்பட்ட மனிதாபிமான போர்நிறுத்தத்தை உருவாக்கும் ஒப்பந்தத்தைப் பெற முயற்சிப்பதில் நாங்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளோம் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எனினும் பேச்சுவார்த்தையில் போதிய முன்னேற்றம் எட்டப்படாததற்கு இஸ்ரேலே காரணம் என்று ஹமாஸ் மூத்த அதிகாரியான சமி அபூ சுஹ்ரி குற்றம்சாட்டினார். இஸ்ரேல் முந்தைய போர் நிறுத்த முன்மொழிவில் சில வாரங்களுக்கு முன் ஒப்புக்கொண்ட விதிகளில் இருந்து பின்வாங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேல், எந்த ஓர் உடன்பாட்டையும் எட்டுவதற்கு ஆர்வம் காட்டவில்லை” என்றார்.
காசாவின் எதிர்காலம்?
இதேவேளை போருக்குப் பின்னர் காசாவுக்கான திட்டம் ஒன்றை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் காசாவில் இயங்கும் ஹமாஸ் அரசுக்கு பதில் துறைசார் நிபுணர்களை கொண்ட சிவில் நிர்வாகம் ஒன்றை அமைப்பதற்கும் காசாவுக்குள் பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்குவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ரபா எல்லைக்கடவை உட்பட எகிப்து மற்றும் காசா எல்லையை இஸ்ரேல் கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தை மூடுவதும் நெதன்யாகுவின் திட்டத்தில் உள்ளது.
இந்தத் திட்டத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நிராகரித்துள்ளார். அவரது உத்தியோகபூர் பேச்சாளர் நபில் அபூ ருதைனி விடுத்திருக்கும் அறிவிப்பில் கூறியதாவது, ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன நாட்டின் அங்கமாக மாத்திரமே காசா இருப்பதோடு அது அல்லாத எந்தத் திட்டமும் தோல்வியில் முடியும். பூகோள யதார்த்தத்தை மாற்றுவற்கான இஸ்ரேலின் முயற்சி வெற்றி பெறாது தஎன கூறப்பட்டுள்ளார்.
இரு நாட்டு திட்டம் :
பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உலகம் விரும்புவதாக இருந்தால் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவந்து சுதந்திர பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காசா போர், பல தசாப்தங்களாக நீடிக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக இரு நாட்டு திட்டத்திற்கான அழைப்பை சர்வதேச அளவில் புதுப்பித்துள்ளது. இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்காவும் இந்த அழைப்பை விடுத்து வருகிறது.
இரு நாட்டுத் தீர்வு என்பது மேற்குலகின் பிரதான கொள்கையாக இருந்து வந்தபோதும் 1990களின் ஆரம்பத்தில் ஒஸ்லோ ஒப்பந்தம் கைச்சாத்தானது தொடக்கம் பலஸ்தீன நாடு ஒன்றை அடைவதற்கான முயற்சியில் சிறிய அளவே முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.