கதைகள்

” கனகர் கிராமம் ” … தொடர் நாவல் …. அங்கம் – 11 …. செங்கதிரோன்.

மடத்திலே வைத்து இராச்சாப்பாட்டை முடித்துக்கொண்டபின் பெண்களெல்லாம் மடத்தின் திண்ணையிலே பாயினை விரித்துப் படுக்கைகளைத் தயார் செய்யக் கோகுலனும் கதிரவேலும் தத்தம் படுக்கை விரிப்புகளை எடுத்துக்கொண்டு உகந்தை மலையின் மேல் ஏறி அதன் உச்சிப் பகுதியில் சமதரையாக – தட்டையாகக் காணப்பட்ட பகுதியைப் பிடித்துப்படுக்கைக்கான இடத்தை வசதியாக அருகருகே அமைத்துக் கொண்டார்கள் .

கதிர்காம நடை யாத்திரையில் கோகுலனும் கதிரவேலும் இணைந்து கொண்டது உண்மையிலேயே இருவருக்குமே அதிர்ஷ்டம்தான் பயணம் அலுப்பில்லாமல் சுவாரசியமாக அமைவதற்கும் அதே வேளை பயனுள்ள பல சமூக – வரலாற்றுத் தகவல்களையெல்லாம் பரிமாறிக் கொள்வதற்குரிய சந்தர்ப்பமாகவும் அவ்விருவருமுடைய இணைவு உதவிற்று .

பாணமைப் பெரியதம்பிப் போடியாரினதும் கோகுலனின் பெற்றோரினதும் குடும்பங்களின் உறவும் நெருக்கமும் இன்று நேற்று ஏற்பட்டதல்ல .

கோகுலனின் பெற்றோர் காரைதீவிலிருந்து 1951 ஆம் ஆண்டு வாக்கில் பொத்துவில் பிரதேசத்திற்குக் குடியமரச் சென்றபோது முதலில் பாணமையில்தான் குடியமர்ந்தார்கள் . அப்போதிருந்தே பெரியதம்பிப்போடியாரும் கோகுலனின் தந்தையும் கூட்டாளிகளாக இணைந்து கொண்டதில் இருவருடைய குடும்பங்களும் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டன . அதனால் சிறுவயதிலிருந்தே கோகுலனும் கதிரவேனும் பால்ய நட்புப் பூண்டிருந்தனர் . கோகுலனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவனது பெற்றோர் பாணமையிருந்து வெளிக்கிட்டு பொத்துவிலில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டனர் . அதனால் கோகுலனும் கதிரவேலும் பிரிந்து வெவ்வேறு ஊர்களில் வசிக்க வேண்டியதாயிற்று .

கோகுலனின் பெற்றோர் பொத்துவிலில் ‘ பாக்கியவத்தை ‘ என்றழைக்கப்படும் இடத்தில் முஸ்லீம் ஒரு வருக்குச் சொந்தமான பரந்த தென்னங்காணியொன்றில் குத்தகைக்குக் குடியமர்ந்தனர் . தரையிலே செங்கல் அடுக்கிச் ‘ சீமெந்து’த் தளம் அமைத்து அதன் மேல் காட்டுக் கம்புகளாலும் கிடுகுகளாலும் நிலைக்குத்தாகச் சுவர் எழுப்பிக் கூரையும் அவ்வாறே காட்டுகம்புகளால் கோப்பிசம் போடபட்டும் கிடுகு வேய்ந்த வீடு . அந்நாட்களில் அதனைச் ‘ செத்தை வீடு ‘ என அழைப்பர் .

பொத்துவில் பிரதான வீதியிலிருந்து பிரிந்து கோகுலனின் பெற்றோர் குடியிருந்த வீட்டுக்குச் செல்லும் ‘ கிறவல் ‘ வீதி நேரே ‘ விக்ரர்ர தோட்டம் ‘ என அழைக்கபட்ட தென்னந்தோட்டத்திற்குச் செல்கிறது . இவ்வீதியின் வலதுபுறப்பகுதி ‘ வட்டிவெளி ‘ என்றும் இடது புறமிருந்த பரந்த தென்னந்தோட்டப் பகுதி ‘ பாக்கியவத்தை ‘ எனவும் அழைக்கப்பட்டன .

பாக்கியவத்தைக் காணி முழுவதும் முன்னொரு காலத்தில் திருக்கோவிலில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய திருகோணமலையுடன் தொடர்புடைய ஒருவருக்குச் சொந்தமானதாக இருந்ததென்றும் அந்த வைத்திய அதிகாரியின் மனைவியின் பெயர் பாக்கியவதி என்றும் அவரது மனைவியின் பெயரில் அக்காணி ‘பாக்கியவத்தை ‘ எனப் பெயர் பெற்றதென்றும் ஊரார் பேசி கொள்வார்கள் .

இப் பாக்கியவத்தைக் காணியைப் பின்னாளில் மௌலானா என அழைக்கப்பட்ட முஸ்லீம் ஒருவர் வாங்கியபின் மௌலானா தோட்டம் ‘ என அழைக்கப்படலாயிற்று . மௌலானா அதனைத் துண்டு துண்டாகப் பிரித்துப் பல பேருக்கு விற்றுள்ளார் .

கோகுலனின் பெற்றோர் ‘ செத்தைவீடு ‘ கட்டிக் குடியேறிய வளவு மௌலானாவின் உறவினர் ஒருவருக்குக் கைமாறியதாகும் . கோகுலனின் தந்தை உயிரோடிருந்தபோதே மௌலானா தோட்டத்தில் முட்டாசுக்காரர் ‘ என அழைக்கப்பட்ட முஸ்லீம் ஒருவருக்குச் சொந்தமான வேறொரு காணித்துண்டை விலை கொடுத்து வாங்கிப் போட்டிருந்தார் . விலைகொடுத்து வாங்கிய அக்காணித் துண்டு குத்தகைக்குக் குடியிருந்த காணிக்குக் கிட்டடியில்தான் அமைந்தது . கோகுலனின் தந்தை நோய்வாய்ப் பட்டு 1962 ல் இறந்த பின்னர்தான் தாய் தற்போது குடியிருக்கும் இக்காணியில் இரண்டறையும் மண்டபமும் ‘ கல் வீடு கட்டிக்கொண்டுத் தன் பிள்ளைகளுடன் குடியேறினார் . இத்தென்னந்தோட்டப்பகுதி இடையில் மெளலானா தோட்டம் என அழைக்கப்பட்டாலும்கூட காலப்போக்கில் அதன் ஆரம்பப் பெயரான பாக்கியவத்தையே நிரந்தரமாக ஒட்டிக்கொண்டது .

கோகுலனின் பெற்றோரின் பாணமையிலிருந்து பொத்துவிலுக்கான இடப்பெயர்வு கோகுலன்- கதிரவேல் பால்ய வயது நட்பைப் பிரித்திருந்தாலும் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய விடுதி வாசம் அவர்களிருவரையும் மீண்டும் பிணைத்துவிட்டிருந்தது . அப் பிணைப்பை இப்போது இறுக்கி விட்டிருந்தது கதிர்காம நடை யாத்திரை .

உகந்தை மலையின் உச்சிப்பகுதியில் கண்விழித்த படியே படுக்கை விரிப்பில் வானத்தைப் பார்த்த படி மல்லாக்கப்படுத்து இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்துத் தலைமாட்டின் கீழ் தலையணை -யாக வைத்துக்கொண்டு இருவரும் கதைக்கத் தொடங்கினார்கள் .

கோகுலன் கதிரவேலிடம் பாணமையிலிருந்து உகந்தைக்கு வரும் வழியில் இடையில் இறங்கிக் கும்பிட்ட பிள்ளையார் கோவிலடிச் ‘ சன்னாசி மலை ‘ பற்றித் துருவிக் கேட்டான் .

கதிரவேல் பதிலுக்கு ” நீங்க பிறதர் , மட்டக்களப்பில வித்துவான் எப்.எக்ஸ்.சி நடராசா பதிப்பிச்ச மட்ட க்களப்பு மான்மியம் எண்ட புத்தகத்தயும் மற்றது பண்டிதர் வி.சீ. கந்தையா எழுதின மட்டக்களப்புத் தமிழகம் ‘ எண்ட புத்தகத்தயும் வாசிச்சிரிக்கியள்தானே ” என்று கேட்டான் .

ஓம் . இரண்டயும் வாசிச்ச நான்தான் ” என்றான் கோகுலன் .

அதில வாற ஆடகசவுந்தரி எண்ட பொம்புள அரசிஆண்ட உன்னரசுகிரி எண்ட நாட்டிர அரசமாளிக சன்னாசிமலயிலதான் இருந்த ” என்றான் கதிரவேல் .

” ஆனா , ரெண்டு புத்தகத்திலயும் சன்னாசிமலதான் உன்னரசுகிரியெண்டு திட்டவட்டமாகச் சொல்லப்படல்லயே . அப்படி இரிக்கலாம் எண்டுதானே இரிக்கி ” என்று தனது சந்தேகத்தை இறக்கி வைத்தான் கோகுலன் .

” பண்டிதர் வி.சீ.கந்தையாட பொஞ்சாதி ஆரெண்டு தெரியுமா ? ” என்று கேட்டான் கதிரவேல் .

” இல்ல . சொல்லண்டாப்பா ” என்றான் கோகுலன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே .

” அவ அப்பாக்கு ஒண்டுவிட்ட அக்கா . எங்களுக்கு மாமி . அவட பேர் கங்கேஸ்வரி கந்தையா . அவ அரசின் ஆணையும் ஆடக சவுந்தரியும் ‘ எண்ட புத்தகம் எழுதினவ . எனக்குப் பதினாலு வயசா இரிக்கக்கொள்ள இந்தா உனக்கு கொண்டுபோய் வாசியெண்டு சொல்லி எனக்கும் ஒரு புத்தகம்தந்தவ . ஆடகசவுந்தரிர அரண்மன சன்னாசிமலயிலதான் இரிந்ததெண்டு அவவும் சொன்ன ஞாபகம் . அத வச்சித்தான் நானும் சொன்ன என்று பெருமைபடப் பேசினான் கதிரவேல் .

” பண்டிதர் வி.சீ.கந்தையாட ஊர் மண்டூர் எலுவா ” என்று கோகுலன் சொல்ல , ” ஓம் . அவர் வந்து மட்டக்களப்புச் சிங்களவாடியிலதான் கலியாணம் கட்டினவர் . எங்கட அப்பா சிங்களவாடிதானே ” என்றான் கதிரவேல் .

” பண்டிதர் வி.சீ.கந்தையாவ எனக்குத் தெரியும் . ஒரு தரம் வந்தாறுமூலைப் பள்ளிக்கு வந்து ‘ அசெம்பிளி ‘ யில பேசினவர் ” . என்றான் கோகுலன் .

” ஓம் . நீங்க சொல்லிற சரிதான் பிறதர் ” என்று கதிரவேலும் ஆமோதித்தான் .

கால்களை நன்கு நீட்டி மல்லாக்கப்படுத்துக் கொண்டிருந்த கதிரவேல் எழும்பிக் கால்களை மடித்துச் சம்மாணம் கட்டி அமர்ந்துகொண்டு கதைக்கத் தொடங்கினான் .

வானம் சலனமற்று வெள்ளி பூத்திருந்தது . அளவாக வீசிய குளிர் காற்று உடலைத் தழுவியபோது இதமாக இருந்தது . கதிரவேலிடம் கதை கேட்கும் ஆர்வத்தில் கோகுலனும் எழுந்து கால்களை மடக் கிக் கதிரவேலைப் போலவே சம்மாணம் இட்டு இருந்து கொண்டான் .

பண்டிதர் வி.சீ. கந்தையாவைப் பற்றி மீண்டும் பேச்சு வந்ததால் அவர் எழுதிய மட்டக்கிளப்புத் தமிழகம் புத்தகத்தில் ,

ஆடக சவுந்தரி உன்னரசுகிரியிலிருந்து பண்டைய மட்டக்களப்பு நாடுமுழுவதையும் கலி பிறந்த வருடம் 3180 ( கி.பி .78 யிலிருந்து ) தொடக்கம் நூற்றிப்பதின்மூன்று ஆண்டுகள் ஆண்டாளென்றும் அவளை மகாசேனன் என்ற மன்னன் மணம்புரிந்து ‘ மீனேரிக் ‘ ( மின்னேரி குளத்தைக்கட்டி ` தட்சணாபதி ‘ க் ( திருகோணமலை ) கோயிலையும் செப்னிட்டுக் கோயிலுக்கு மானியமாக ‘ காந்தளை ஏரி யைக் ( கந்தளாய்க் குளம் ) கட்டுவித்தானென்றும் – இவர்களிருவருக்கும் பிறந்த மகன் சிங்க குமாரன் உகந்தை மலை உச்சியில் சிவனாலயமொன்றைக் கட்டினானென்றும் – இவ்வாலயத்தை சுற்றி எட்டுத்திக்குகளிலும் எட்டுத் தீர்த்தக் கிணறுகள் அமைத்தானென்றும்- அவன் கட்டிய சிவன் கோயில் இப்போது அழிந்து விட்டதென்றும் , ஆனால் மலையில் பொழியப்பெற்ற தீர்த்தக்கிணறுகள் இப்போதும் உள்ளனவென்றும் எழுதியுள்ள விடயங்களை நினைவில் கோர்த்து கோகுலன் கதிரவேலிடம் எடுத்துச் சொன்னபோது அவன் அவற்றை ஆமோதித்தவனாக ,

” ஆடக சவுந்தரியக் கலியாணம் செய்தது குளக்கோட்டன் எண்ட அரசன்தான் ” என்றான் .

” பண்டிதர் வி . சீ . கந்தையாவும் அவரிட புத்தகத்தில ஆடக சவுந்தரிய முடிச்ச மகாசேனன் எண்ட அரசன் குளக்கோட்ட மன்னனாக இரிக்கலாம் எண்டுதான் எழுதியிரிக்கார் ” . என்று கோகுலனும் கதிரவேலுடன் ஒத்தூதினான் .

இருவரும் கதைத்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை . நடுநிசியாகி விட்டிருந்தது மலை உச்சியில் உறங்கியவர்களும் கீழே கோயில் வளவுக்குள்ளும் வெளியிலும் படுத்துக் கிடந்த அனைவரும் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள் . கோயிலின் சுற்றுப்புறச் சூழலைச் சுற்றி ஆங் காங்கே காட்டு விறகுகளைக் கொண்டு மூட்டிய தீனாக்கள் விட்டுவிட்டுத் தீ நாக்குகளை உமிழ்ந்து கொண்டிருந்தன . கடல் இரையும் சத்தம் காதில் நன்றாகவே விழுந்து கொண்டிருந்தது . இரவின் அ மைதியைக் கிழித்துக் கொண்டு காட்டுக்குள்ளே நரியொன்று ஊளையிடும் சத்தம் எழுந்து பின் அடங்கியது . பின்னர் சிறிது நேரத்தில் தூரத்தில் யானை பிளிறும் சத்தமும் கேட்டது .

சம்மாணம் கட்டி அமர்ந்திருந்த கோகுலனும் கதிரவேலும் மீண்டும் கால்களை நீட்டி வானத்தைப் பார்த்தபடி மல்லாக்கப்படுத்துக்கொண்டு பலதையும் பத்தையும் பரிமாறிக் கொண்டார்கள் .

பாணமையிலிருந்து உகந்தைக்கு உழவு இயந்திரத்தில் வந்தது . குலுங்கிக் குலுங்கியும் பள்ளங்க ளில் விழுந்தெழும்பியும் ஏதோ குதிரையில் ஏறிச் சவாரிவந்தமாதிரி உடம்பு அலுத்தும் களைத்தும் போயிருந்ததால் கதைத்துக்கொண்டிருக்கும்போதே இருவரும் தங்களை அறியாமலே கண்ணயர்ந்து போனார்கள் .

கடல் மட்டும் தூங்காது அலகளையெழுப்பி ஆரவாரித்துத் தனது கடமையை ஓய்வு ஒழிச்சலின்றி ஆற்றிக்கொண்டிருந்தது .

( தொடரும்….. அங்கம்: 12 )

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.