கதைகள்

கருக்குவாள் – சிறுகதை – 47 ….. அண்டனூர் சுரா

இப்பெல்லாம் யார் சார் சாதிப்பார்க்குறாங்க, நீங்க கேட்கலாம். நான் பார்ப்பேன் சார். பெரியஎடத்து பிள்ளை நானு. என்னால் சாதிப் பார்க்காம இருக்க முடியுங்களா? இன்னைக்கும் என்குடும்பம் ஊர் உலகத்தால மதிக்கப்படுதுனா அதுக்குக் காரணம் என்னோடத் தோட்டத்தொறவோ, வசதி வாய்ப்போ இல்லைங்க. என் சாதிக்காகத்தான். என் சொந்தம்பந்தம் பத்திஉங்களுக்குத் தெரியாது. பத்துத்தலைமுற சொந்தத்தக் கட்டிக் காத்துக்கிட்டிருக்கேன்.என்னையில்லாம என் சொந்தத்துக்குள்ளே யாரு பொண்ணு எடுக்க முடியாது, கொடுக்கமுடியாது. அப்பேர்ப்பட்ட குடியானச் சாதியச் சேர்ந்தவன் நான். சுத்துவட்டார ஊர்கள்ல முதமச்சுவீடு என் தாத்தா கட்டின வீடுதே. அதிலதான் குடி இருக்கேன். இன்னைக்கும் அந்தவீடுதே சுத்துவட்ட பத்துப்பட்டி கிராமத்துக்கும் பெரிய வீடு. அடித்தளம் ரெண்டாளு உசரம்.கருங்கல் சுவரு. தேக்குச்சட்டம். ஏ வீட்டுக் கதவச் சாத்தத் திறக்க அஞ்சு பேரு வேணும்.ஆமாங்க, வீட்டுக் கதவ இழுத்துச் சாத்தி வருசம் முப்பது ஆவுது. எப்பவும் வீட்டுல அடுப்புஎரிஞ்சிக்கிட்டேயிருக்கும். யாரு வந்தாலும் வாசல்லதான் சோறு.

ஏ வீட்டுத் திண்ணையில நாலூரு பஞ்சாயத்து நடத்தலாம். அவ்ளோ பெரிய திண்ணை.சுத்து வட்டக் கிராமங்க எங்களச் சொல்றது பெரிய வீட்டு ஆளுங்கனு. சில பேருங்கமச்சுவீட்டுக்காரங்கனுச் சொல்வாங்க. கீச்சாதி சனங்க எங்களச் சொல்றது ஆண்டே வீடுனு.ஏஞ்சாதி என்னென்னு தெரியுதுங்களா? அதெ ஏ மீசை சொல்லும். அதெ நான் ஏ வாயாலசொல்ல வேண்டியதில்லைனு நெனைக்கிறேன்.

எங்க குடிக்கு மவுசு இந்த மீசதான். இது என்ன மீச, ஏ அய்யாவோட, பெரியஅய்யாவோட மீசய நீங்கப் பார்த்திருக்கணும். அவங்க வச்சிருந்த மீசையில பாதிதான் என்மீசை. புலி வாலப் பார்த்திருக்கீங்களா, அப்படியிருக்கும். அய்யானு நான் சொல்றது என்னைப்பெத்த அப்பனை. பெரியய்யா ஏந்தாத்தா. ஊர் அவங்கள இப்படிதான் சொல்லும் அய்யா,பெரியய்யானு. ஆண்டப்பரம்பரைங்க நாங்க. எங்கக் குடும்பத்துக்கும் பாண்டிய வம்சத்தும்கொடுக்கல் வாங்கல் ஒறவு. அவங்கக் கூட பொண்ணு கொடுக்க, எடுக்க இருந்தவங்க நாங்க.இதெயெல்லாம் இப்பச் சொன்னா கேட்கிற உங்களுக்கு நாழியாகிடும். அதுக்காக எங்கக் குடிப்பெருமய உங்கக்கிட்டச் சொல்லாம இருக்க முடியுங்களா?

ஊர்லப் பாதி எங்களோடது. ஊர்க் கோயிலு எங்களுக்குத்தே சொந்தம். ஊருக்குப் பாதைநாங்க விட்டது. நாங்க விட்ட பாதையிலதான் இன்னைக்கும் பஸ், லாரினு ஓடித் திரியுது.இன்னைக்கும் அந்த எடங்களெல்லாம் ஏ பெரியய்யா பேரிலதான் இருக்கு. நான் நினைச்ச பஸ்,லாரிகளத் தேக்க முடியும். ஆனா நான் மாட்டேன். ஏன்னா, எனக்குச் சாதி சனம் முக்கியம்.ஊர்ப் பாதைக்காக நாங்க விட்டப் பாதை பல ஏக்கருங்க. ஏன் விட்டோம்? ஊர் வேணும், சாதிவேணும், சனம் வேணுமென விட்டோம்.

ஊர்ல முதல் கரை எங்கக்குடிதான். தலையில கும்பம் எடுக்கிற குடி. கோயிலுக்குக்கூச்சல் கூட்டுறப்ப மொதத் திருணூறு எனக்குத்தேன். நான் திருணூறு வாங்கி நெத்தியிலப்பட்டைப் போட்டப் பிற்பாடுதான் மத்தச் சாதிச்சனங்க திருணூறு வாங்கிக்கும். இன்னைக்கும்அப்படித்தான். பொங்கலுக்குப் பொங்ற மொதப் பானை எங்கப் பானைதே. மாட்டுப்பொங்கலன்னைக்கு அவுத்து விடுற மொத மாடு எங்க மாடுதெ. பொங்கலுக்காகவே வீட்லநாலு காளைங்க விதை அடிக்காம கொம்பச் சிலுப்பிக்கிட்டுத் திரியுது.

ஊர்ல அம்பது வேலி நெலம் எங்களோடது. மேலாத்துத் தண்ணீயத் தொறந்துவிட்டா,சேரி குடிக ஏ அய்யா காலுல விழுற மாதிரி தலைக்குப்புற பாயும். ஏ வேலில தண்ணிப்பாஞ்சிதான் மத்த சாதிக்கார வயல்களுக்குப் பாயும். பொண்ணு விளையுற பூமி. வயல், காடு,தோட்டத் துறவு பாதிய ஏ பெரிய அய்யா ஊருக்கு எழுதிவச்சிட்டாரு. அவரு எழுதிவச்சநிலத்தில விளையுறததான் ஊர் அவிச்சி ஆக்கித் திங்குது.

ஏ அய்யா நடந்துபோனா ஊர் துண்ட எடுத்து கமுக்கட்டுல வச்சிக்கும். ஏ வீட்டுவாசல்ல இதுநா வரைக்கும் ஆளாளுபட்ட யாரும் செருப்பு போட்டு நடந்ததில்ல. அதிர்ந்துபேசினதில்ல. காறித்துப்பினதில்ல. தடித்தச் சொல்லு சொன்னதில்ல. அப்பேர்ப்பட்ட குடும்பத்தச்சேர்ந்தவனுங்க நானு.

ஏ அய்யா முடியாத வயசும் அதுவுமா படுக்கையில படுத்தப் படுக்கையானப் பிறகுஊருக்குப் பெரியத் தல நான்தே. எந்த கீழ்ச்சாதி சனங்களும் எங்க வீட்டு வாசல மிதிச்சதுகிடையாது. மிதிக்க விட்டதும் கிடையாது. கீழ்ச்சாதிகள கீழ்ச்சாதியாகத்தான் இன்னைக்கும்நான் நடத்துறேன். ஏ அய்யாக்கூட அப்படினு இப்படினு திண்ணை வரைக்கும் விடுவாரு. ஆனாநான் மட்டேன். அந்த விசயத்தில ரொம்பக் கறாரா இருப்பேன். தோளுக்குத் துண்டு போலமனுசனுக்குச் சாதி.

நீங்க நினைக்கலாம், இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலேயும் இப்படி இருக்கேனெனு.உலகம் கம்ப்யூட்டர்க்குள்ள சுத்துதுங்கிறதுக்காக எனக்குக் கிடைத்தாக வேண்டிய மரியாதையவேண்டானு உதறித் தள்ளிட்டு போக முடியுங்களா? சாதி விசயத்தில உடும்புப்பிடி நானு. ஊரேசொல்லும், எந்தக் காலத்திலே இவன் இருக்கானு? சொன்னாச் சொல்லிட்டு போகட்டும்.எனக்கு அதைப்பத்தி கவலைக் கிடையாது. எனக்கு நெருங்கமானவங்க உலகம் அப்டி, இப்டிஇருக்கெனச் சொல்லி என்னை மாத்தப் பார்ப்பாங்க. யார் யார மாத்துறது?, என்க்கிட்ட அவங்கபாச்சாப் பழிக்காது. நான் அவங்கச் சொல்றதுக்குக் காதக் கொடுப்பேனே தவிர தலையக்கொடுக்கிறதில்ல.

ஏ தோட்டத் துறவுல ஏ ஊர் சாதிச்சனங்க எப்பவும் மண்ண மிதிச்சிக்கிட்டேஇருப்பாங்க. இப்ப போனாலும் பார்க்கலாம் அஞ்சுப்பத்து பேரு வரப்பு வெட்ட, கொத்த, அரிக்க,ஆயனு இருப்பாங்க. உங்க அரசாங்கத்தினாலே நூறு நாளு வேலய நூறு நாளைக்கு கொடுக்கமுடியுறதில்ல. கஜானாவில காசில்லேனு கைய வரிச்சிடுறீங்க. நான் இன்னைக்கும் வருசம்முந்நூத்து சொச்சம் நாளும் வேலைக்கொடுத்துக்கிட்டிருக்கேன்.

என்னடா சொல்ல வேண்டியச் சொல்லாம, எதெஎதெயோ சொல்லிக்கிட்ட இருக்கேனுநிறுத்திச் சொல்லிறாதீங்க. நேரா விசயத்துக்கு வாறேன். இதுநாளு வரைக்கும் சேரி குடிஆளுங்க ஏங்குடிப்பக்கம் வந்தது கிடையாது. ஏந்தோட்டத் துறவுக்குள்ள எறங்குனதுகிடையாது. இத்தனெக்கும் சேரிய ஊர்ல கொண்டுவந்து வச்சது ஏ பெரிய அய்யாவோடஅய்யாதான். அதாவது ஏ எள்ளுத்தாத்தா. உங்களுக்குத் தெரியுமென நினைக்கிறேன்.எள்ளுத்தாத்தானா கொல்லுத் தாத்தாவோட அப்பா. மேலச்சீமையிலேருந்து நாலு குடியக்கொண்டு வந்து வச்சாரு. அதுதான் இன்னைக்கு நாற்பது குடியாயிருக்கு. தெருவாயிருக்கு.

ஒவ்வொரு ஊர்லயும் சேரிப்புள்ளைங்க படிக்குதுங்க. பட்டணம் போகுதுங்க.தாட்,பூட்டென இங்கிலீசு பேசுதுங்க. குழாச்சட்டைகள மாட்டிக்கிட்டு சரட்,புரட்டெனநடக்குதுங்க. ஆனா ஏ ஊர்ல நான் அப்படியாக அனுமதிச்சதில்ல. ஏ ஊரும் சேரியும் அப்படியாமாறிடவுமில்ல.

ஏ ஊரு சேரி சனத்த நான் நிமிர்ந்துப் பார்த்தது கூட கிடையாது. பார்த்தாலும்சகிக்காது. அவங்களப் பார்த்தா ரெண்டு நாளைக்கு என்னால சோத்துல கை நனைக்கமுடியாது. குடலோட வாய் குமட்டிக்கிட்டு வந்திடும். வாந்தி வரும். அவங்களப் பார்க்கவேஅருவறுப்பா இருக்கும். குளிக்கிறதில்ல, துணியத் துவைச்சி கட்டுறதில்ல. பல்லுவிளக்குறதில்ல. தலையில எண்ணெ வக்கிறதில்ல. மழைக்கால செம்மறி ஆடாட்டம்தான்இன்னைக்கும் அவங்க.

எத்தனையோ நாளு அவங்க பிள்ளைங்கக் கல்யாணத்துக்குத் தாலி எடுத்துக்கொடுக்கச்சொல்லி கூப்பிட்டிருக்காங்க. ஆசி வழங்க அழைச்சிருக்காங்க. மத்த சாதி சனம் போகும்.அவங்களோட குலாவும். மாமன் மச்சானு உறவாடும், கொண்டாடும். அள்ளி முடியும். ஆனாநான் மட்டேனே.

சேரி சனத்த விடுங்க. மத்த சாதிச் சனத்துக்கே நான் கூலி கொடுக்கிறப்ப, என் கைஅவங்களத் தீண்டியதில்ல. அப்பேர்ப்பட்ட நான் போய், சேரிப்பொண்ணத் தொடுவேனா?தொட்டாத் தீட்டுங்க. எந்தக் குளத்துல போய் நான் குளிச்சு, தீட்டக் கழுவிக்கிறதாம்?சொல்லுங்க. சேரித் தீட்ட குளிச்சிப் போக்கிக்கிற தண்ணீ எங்கே இருக்கு?. கங்கைக்குப்போகணும். இல்ல, தீயில எறங்கி என்னையே எரிச்சிக்கிறணும்.

நா விரல் நீட்டி அழைச்சா ஓடி வந்து முந்தி விரிக்க ஆயிரம் பொம்பளைங்கஇருக்காங்க. ஊருக்கு ரெண்டென்ன, பத்து சின்னவீடு வச்சிருக்கேன். அத்தனயும்கிளிப்பிள்ளைங்க. சுண்டிவிட்டா ரத்தம் வரும்.

நான் வச்சிருக்கிற பொம்பளைகள உங்களுக்குத் தெரியாது. சும்மா தங்கக் கட்டிங்கமாதிரி இருப்பாள்வ. பல்லு என்ன, மூக்கென்ன, வாய் என்ன. அப்பேர்ப்பட்ட என்னைப் போய்உங்கப் போலீஸ்க்காரங்க?

என்னெ வெளியே விட்டுப்பாருங்க. எத்தன பொம்பளைங்க ஏங்கால்ல வந்துவிழுறாங்கனு. அப்பறம் சொல்வீங்க. இதெயெல்லாம் நான் ஏன் சொல்றேன்னா, என்னையநீங்க முழுசா புரிஞ்சிக்கிறணும். அதுக்காகச் சொல்றேன்.

நீங்க நினைக்கிற மாதிரி கண்டக்கண்ட கழனிப் பானைக்குள்ளே கைய விடுறவன் நான்இல்ல. ஏஞ்சாதிக்கென ஒரு பெருமையிருக்கு. கவரிமான் பரம்பரை நாங்க. என்னைய நீங்கவீணா சந்தேகத்தின் பேர்ல பிடிச்சு வந்து அடைச்சிருக்கீங்க. ஏஞ்சொத்து என்ன,ஏஞ்செல்வாக்கு என்ன? நீங்க என்னெ ஜாமீன்ல வெளியே விட்டுப் பாருங்க. அப்பறம் தெரியும்.நான் யாரென!

இப்பவும் சொல்றேன்ங்க, நான் சேரித் தெருவுக்குள்ளே போனதுகூட கிடையாது.அதுக்கான தேவையும் எனக்குக் கிடையாது. அவங்கக் கண்டத்தச் சுட்டு, உரிச்சி, அவிச்சி,வெந்தும் வேமாகத் திங்கிறவள்ங்க. அவள்வ நாத்தம் பெரு நாத்தம். அவள்வ எட்ட வந்தாலேநாத்தம் மூக்க அறுக்கும். இந்தக் காலத்திலயும் ஏன் இப்டி இருக்கீங்கனு அவங்கக்கிட்டேயேநான் கேட்கிறவன். அப்பேற்ப்ட்ட நானா அதைச் செஞ்சிருப்பேன்.

நான் சொல்றத நீதிபதி நம்பல. எனக்காக வாதாடுன வக்கீலும் நம்பல. அந்தாளுஒழுங்கா வாதாடியிருந்தா, நான் ஏன் இந்த ஜெயிலுக்குள்ளே அடைஞ்சிருக்கப் போறேன். நான்தெரியாமக் கேட்கிறேன். உங்கச் சட்டம் எவனோ கொடுத்தச் செல்போன நம்புது. அதிலஇருக்கிற படத்த நம்புது. அதில பதிவாகியிருக்கிற குரலை நம்புது. என்னைப் போல ஒருத்தன்அதில இருக்கான். அவன் நான்தான்ங்குது உங்கப் போலீஸ். வாய் பேச முடியாத செல்போன,போட்டோவ, குரலை நம்புற உங்கச் சட்டம்,. வசதி வாய்ப்பா, ஊர்லப் பெருந்தலையா இருக்கிறநான் சொல்றத நம்ப மாட்டேங்குது.

செல்போன்ல ஒரு குட்டி இருக்காளே, நீங்கக் கூட பார்த்திருப்பீங்களே, அதுலஇருக்கிறது நானாங்க?, என்னெப் போல முகத்தில தழும்பு இருந்தா, முடி இருந்தா, மூக்குமொகற இருந்தா அது நானாகி விடுவேனா?

நான் குடியானவன்க, ஆண்டப் பரம்பரை சாதிங்க. ஆனா அவள் சேரிங்க. அவளப்போயிநான், அவக்கிட்ட நான், நெனைக்கவே குடல பிறட்டுதுங்க. மூக்கு, நாசி இல்லாத வெறும்பிண்டமாங்க நானு…?.

சேரியத் தொடுறதே பாவமுனு சொல்றவன் நானு. அவங்களத் தொடுறது பச்சத்தீட்டுங்க. பார்த்தாத் தீட்டு. பேசினாத் தீட்டு. சேரி நிழல் ஏ மேலப் பட்டுறக்கூடாதுனுநினைக்கிற நான்போய் அவளை,..

நான் என்ன, காஞ்சிப்போன கருவாடாகவா இருக்கேன். கார் வச்சிருக்கேன். தோட்டம்,துறவு வேலிக் கணக்கில வச்சிருக்கேன். மாசத்துக்கு லட்சம் கணக்கிலே வரவுசெலவுசெய்றவன். அப்பேர்ப்பட்ட நானா, அர்த்தராத்திரியில சேரிக் குடிக்குள்ளே தனியா இருக்கிறகுடிசைக்குள்ளே நுழைஞ்சிருப்பேன்? நுழைஞ்சு அப்பன், ஆயி இல்லாத வீட்டுப் புள்ளையத்தூக்கிருப்பேன்? நானா அவ மொகம், அங்கே, இங்கேயென கண்டக் கண்ட கண்றாவி எடத்திலகாயம்படுற மாதிரி கடிச்சி வச்சிருப்பேன்?. பதினெட்டு வயசு ஆகாதப் பிள்ளையாம் அவள்.அவளை என்னால பலாத்காரம் செய்திருக்க முடியும்ங்களா? அவளைக் கொன்னுப்புதைச்சிருப்பேனு நீங்க நம்புறீங்களா? என்னோட ஒத்தச் செருப்பு, அவளைப் புதைச்சிருந்தக்குழிக்குள்ளாகக் கிடந்தா, புதைச்சது நானாகிவிடுமா? என்னைப் பார்த்து சொல்லுங்க சார்,ஏங்கலரப் பார்த்துச் சொல்லுங்க? என்க்கிட்ட இருக்கிற கார்வசதி, சொத்துச் சுகத்தைப் பார்த்துச்சொல்லுங்க? என்னைப் பார்த்தா அப்படியாத் தெரியுது? நான் செய்திருப்பேனு நீங்கநினைக்கிறீங்களா, இதை நம்புறீங்களா? சொல்லுங்க சார், சொல்லுங்க….?

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.