சிறுகதை -42 அமில பரிசோதனை – அண்டனூர் சுரா
வாரத்தின் முதல்நாள், ஞாயிற்றுக்கிழமை வந்தால் போதும். உங்கள், எமது, நமதுதொலைக்காட்சிகளுக்கு படுகொண்டாட்டம்தான். அதிலும் செய்தி தொலைக்காட்சிகளுக்குச் சொல்லவேண்டியதில்லை. செய்தியோடு விளையாடி, செய்தியோடு உறவாடி, செய்தியோடு மல்லுக்கட்டும்செய்தி, செய்தி, செய்திகள்.
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தொடங்கும் செய்திகள் இரவு பனிரெண்டு மணியானால் ‘குட்நைட்’ அவர்களின் வாயிலிருந்து வர வேணுமே?
மணி ஐந்துக்கு திரைச்செய்திகள்.
ஆறுக்கு வரிச்செய்திகள்.
ஏழு மணிக்குத் தலைப்பு செய்திகளுடன் கூடிய அரசியல், விளையாட்டு, உலக செய்திகள்.மணி எட்டுக்கு அரை வட்ட அமர்வுகள். மணி ஒன்பதுக்கு நேர்காணல்.
நேர்காணல், விவாதங்கள் நடத்திடாத தொலைக்காட்சி ஒரு தொலைக்காட்சியா, எனச்சொல்லுமளவிற்கு எல்லா தொலைக்காட்சிகளும் நேர்காணல் நிகழ்ச்சியை நடத்தத் தொடங்கிவிட்டன.கேள்விகளைக் கேட்கிறோம் என்கிற பெயரில் கேள்விகளைக் கழுவிக்கழுவி ஊற்றுகின்றன. சிலதொலைக்காட்சிகள் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்காமல் கேள்வி இல்லாத ஒன்றைப்பிடித்துவைத்துகொண்டு கேட்கின்றன. சில தொலைக்காட்சிகள் அவர்களுக்கு நெருக்கமான அரசியல்புலிகளைக் கூடவைத்துகொண்டு வலிக்காமல் கேள்விகளைக் கேட்டு நிகழ்ச்சிகளைக் கடத்துகின்றன.எத்தனை நேர்காணல் நிகழ்ச்சிகள் இருந்தென்ன, நடந்தென்ன திவாகர் நடத்தும் நேர்காணல் நிகழ்ச்சியைப்போல் இன்னொரு நிகழ்ச்சி வருமா…?
திவாகர் விட்டெறியும் கேள்விகளில் விக்கெட் பறிக்கொடுக்காத பிரபலங்கள் யாருண்டு? சீவிகூர்மையாக கொடுக்கும் கேள்வி, எதிர் தரப்பினரைப் பதில் கூற வைக்க முடியாமல் திணறடிக்கவைக்கும் சாதூரியம், முக்கல், முணங்களுடன் வார்த்தைகளில் கரைய வைக்கும் திருப்பம்,…எனஇத்தனையும் ஒரு சேர கையாளும் உத்தி அவரைத் தவிர வேறு யாருக்கு உண்டு?
ஒரு கேள்வி. அதற்குள் இன்னொரு கேள்வி. அதைத் துளைத்து மறு,மறுகேள்விகள்,..எனவெங்காயத்தை உரிப்பதைப் போலல்லவா அவர் கேள்விகளை உரிப்பார். கேள்விகளை ஊற்றெடுப்பதில்அவர் மணற்கேணி.
நேர்காணலில் அவர் உட்கார்ந்திருக்கும் கம்பீரமே தனி அழகுதான். கேள்விகளுக்கிடையில்தாடியைத் தடவிக்கொள்வதும், பேட்டி அளிப்பவரைக் குறுகுறுவென பார்ப்பதும், சிரிப்பதும், முகத்தைக்கோபத்துடன் காட்டுவதும், விழிப்பதும், கண்களை மூடித் திறப்பதும்…என அவர் செய்யும் அத்தனையும்பாமர மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும். காமிக்ஸ் சித்திரம் அவருடைய முகப்பாவணையில்நெழியும். மக்கள் கேட்க நினைக்கும் அத்தனை கேள்விகளையும் கொடுத்தக் கடனை தட்டிக்கேட்பதைப்போல ‘பட்’டெனக் கேட்டுவிடுவார். அவர் கேட்கும் தொணியிலும் தொடுப்பிலும் தொலைக்காட்சிபார்வையாளர்களின் கண்கள் சின்னத்திரையில் ‘சப்’பென ஒட்டிக்கொள்ளும்.
“இம், அதற்காக.?”
“ஓகோ…”
“அப்படியா!”
“இது சரி….?” எனக் கேள்விகளின் ஊடே நுழைவார், குடைவார். கடைந்தெடுப்பார். அவரது கேள்வித்தொடுப்பில் எதிர்தரப்பினர் ரன் அவுட் ஆவார்கள். அல்லது யானை, ராணி நகர்வுகளுக்கிடையில்மாட்டிக்கொள்ளும் சதுரங்க ராஜாவைப் போல ஒரு வழியுமின்றி முழிப்பார்கள்.
இது திவாகர் பங்கு பெறும் கடைசி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவர் வேறொருதொலைக்காட்சி நிறுவனத்தை நோக்கி இடம் பெயரப்போவதை பத்திரிகைகள் கிசுகிசுப்பாக எழுதியதுசந்தைக்கும் சந்திக்கும் வந்தது.
நிழல் தொலைக்காட்சியைப் பொறுத்த வரைக்கும் அவர் பங்கு பெறும் கடைசி நிகழ்ச்சி இதுதான்.இது அவருக்கும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தெரிந்த ஒருவழி உண்மை. திவாகர் பங்கு பெறும்கடைசி நிகழ்ச்சியில் ஒரு பிரபலமான ஒரு நபரை பேட்டி எடுக்க வைத்துவிட வேணும் என்றுஅத்தொலைக்காட்சி நிறுவனம் விரும்பியது. அதன் மூலம் இத்தொலைக்காட்சியின் டிஆர்பி மதிப்பைக்கூட்டிக்கொள்ள வேண்டுமென தாயம் உருட்டியது.
இன்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் திவாகர் சந்திக்க இருக்கும் நபர் சல்மாபானு.
சல்மாபானு , இதுநாள் வரை எந்தத் தொலைக்காட்சியிலும் தன் முகத்தைக் காட்டியவரில்லை.வெளிஉலகிற்கும் அவரது ரசிகர், ரசிகைகளுக்கும் தன் வரலாற்றை விளக்கப்போவது இதுவே முதன்முறை. இதற்கும் முன் எத்தனையோ தொலைக்காட்சிகள் அவரது அலுவலகக் கதவைத் தட்டியும்,ஒற்றை காலில் நின்று காத்திருந்தும் அவரது சம்மதத்தை எந்த நிறுவனத்தாலும் பெற முடிந்ததில்லை.நிழல் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளிக்க முன் வந்தது “ உலகத் தொலைக்காட்சி வரலாற்றில்முதன் முறையாக…..” என நீட்டி, விளிக்குமளவிற்குப் பரபரப்பைக் கூட்டியிருந்தது.
சல்மாபானு சாதி,மதம் மறுப்பாளர். சாதி மறுப்புத் திருமணத்தைத் தன் ஆதரவாளர்களின்துணையோடு நடத்திவைப்பவர். கலப்பு மணம் தம்பதிகளுக்காக நீதிமன்றம் முற்றத்து வரைக்கும் சென்றுநீதியையும் நிதிஉதவிகளையும் பெற்றுக்கொடுப்பவர்.
சாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக நடைபெறும் ஆணவப் படுகொலைக்கு முதல் கண்டனஅறிக்கை அவரிடமிருந்துதான் வரும். படுகொலைகள் நடக்கும் பொழுது வாய் பொத்திய, கண் மூடிய,காது அடைத்த குரங்குகளாகிவிடும் ஆளும் எதிர்க்கட்சிகளின் செய்கைகளை முச்சந்தி வரைக்கும்கொண்டுப்போய் முகத்திரையைக் கிழித்தவர். இதையெல்லாம் தாண்டி அவரொரு நல்ல எழுத்தாளர்.ஆதரவற்ற மக்களுக்கான போராளி. சர்வதேச அளவில் நிறைய விருதுகளைப் பெற்றவர். விருதுதொகைகளைக் கலப்புமணத் திருமணங்களுக்குச் செலவு செய்தவர்….
நமது நிழல் தொலைக்காட்சியில் சல்மாபானு கொடுக்கும் பிரத்யேகமானப் பேட்டி, இன்று இரவுஒன்பது மணிக்கு, நேரடி ஒளிப்பரப்பில், காணத் தவறாதீர்கள்…அறிவிப்புகள் சோப்பு, பற்பசை, பனியன்விளம்பரங்களுக்கிடையிலும் வரி செய்திகளாகவும் முன்அறிவிப்புகளாகவும் ஓடிக்கொண்டிருந்தன.
சல்மாபானு எதையும், எப்பொழுதும் எதிர்தரப்பினரின் முகம் முறிய தன் எழுத்துகளால்விமர்சனம் செய்துவிடக்கூடியவர். சரியானதை சரி என்றும் தவறை தவறென்றும் ‘பொட்’டென போட்டுஉடைப்பவர். ஒரு வார இதழில் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் அவர்களின்கேள்விகளையே பதிலாக சொல்லி அசத்தியவர். அவருடைய எழுத்து மட்டுமல்ல அவருடையமாற்றுக்கோணச் சிந்தனைகளும் சாதி மறுப்புத் திருமணங்களுக்கான ஆதரவும், போராட்டமும் பலநேரங்களில் மெய்ச்சிலிர்க்க வைத்திருக்கிறது. அவர் உதிர்த்த சில வாசகங்கள் சமுதாயத்தையும் தனிநபரையும் நாசிவிடைக்க கோபமூட்டியிருக்கின்றன. சல்மாபானு தன் குரலைப் பத்திரிக்கைகளில்எழுத்துகளாகவும் தொலைக்காட்சிகளில் முகம் காட்டாக் குரலாகவும் மட்டுமே பதிவு செய்து வந்தார்.இதுநாள் வரை பத்திரிக்கை புகைப்படக் கலைஞர்களிடம் அவர் தன் முகத்தைக் காட்டியதில்லை.
சல்மாபானுவின் நலம் விரும்பிகள் அவரை ஒரு புரியாத புதிராகவே பார்த்து வந்தார்கள்.அவருடைய முகத்தை வெளி உலகிற்கு காட்டாமல் ஆமையைப் போல உள் இழுத்துக்கொள்வதற்கானகாரணத்தைப் பலவாறு கயிறு திரித்தார்கள். அவல் தின்றார்கள். அத்தனை யூக, உத்தேசபுரிதல்களுக்கான பதில்கள் இந்த நேர்காணலில் கிடைத்துவிடும் என பலரும் பேசிக்கொண்டார்கள்.
நிழல் தொலைக்காட்சி நிறுவனத்தார்கள் படப்பிடிப்பு அரங்கத்தை இதுவரைக்குமில்லாத ஒருமாறுபட்ட கோணத்தில் வடிவமைத்திருந்தார்கள். யூ டியூப்களில் எத்தனையோ பேர்கள் பார்க்கவும்புலனம் வழியே உடனுக்குடன் பகிரப்படவிருக்கின்ற நிகழ்ச்சிக்கான உள்ளரங்கத்தை அதிக சிரத்தைஎடுத்து அலங்கரித்தார்கள். பேட்டி கொடுப்பவர், எடுப்பவர் இருவருக்கும் சுழலும் நாற்காலிகளைக்கிடத்திருந்தார்கள். சல்மாபானுவின் ரசணையை அறிந்து அவருக்குப் பிடித்தமான நிறத்தில் தளத்தையும்சுவர்களையும் வடிவமைத்தார்கள்.
திவாகர் நேர்காணல் நிகழ்ச்சிக்குத் தயாரானார். வழக்கம் போல கோட், சூட்., ஷீஅணிந்துகொண்டார். நேர்காணல் இரவு நேர நிகழ்ச்சி என்பதால் கண்களைப் பறிக்கும் வெளிச்சத்திற்கேற்பஆடைகளை அணிந்துகொண்டார். ஒரு ஆளுயர கண்ணாடி முன் நின்றுகொண்டு அலங்கரித்துகொண்டார்.சிரிக்க, கைகளை நேர்த்தியாக அசைக்க, கழுத்தில் கட்டிக்கொள்ளும் “டையைஇழுத்துவிட்டுக்கொள்ள,..என கைகள் அனிச்சையாக இயங்கின.
ஒரு முறைக்குப் பல முறை கேட்கப்போகும் கேள்விகளை மனதில் நிறுத்தி ஓடவிட்டார்.கேட்கப்போகிற கேள்விகளையும், கேட்கும் தொனிகளையும் மெறுகேற்றினார். மெல்லிய குரலுடையஅவர் வார்த்தைகள் பிசிறு இல்லாமல் சரியான மீட்டரில் வந்து விழ முன்னோட்டம் பார்த்துகொண்டார்.
திவாகர் எதிர்தரப்பிலிருந்து வரக்கூடிய கேள்விகளையும் பதில்களையும் புத்திசாலித்தனத்துடன்கையாளக்கூடியவர். பிரிட்டிஷ் ஆங்கிலம் தேர்ந்தவர். தென்னிந்திய மொழிகள் அத்தனையும் அவருக்குஉள்ளங்கை நெல்லிக்கனி. பேட்டிக்கொடுக்க வருபவர்களின் விருப்பு, வெறுப்புகளைத் தெரிந்துவைத்துகொண்டு அதற்குத் தகுந்தவாறு பௌலிங் செய்பவர். விக்கெட் எடுப்பவர். வாதத்தை முடிப்பவர்.
நிழல் தொலைக்காட்சியில் நான் நிகழ்த்தும் கடைசி நேர்காணல் இது என்பதால் கூடுதலாக சிரத்தைஎடுத்துக்கொண்டார்.
சல்மாபானு இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அவர் நிலைய அரங்கிற்கு வந்திருந்தார்.நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பூச்செண்டு கொடுத்து நிலைய ஊழியர்கள்அவருக்கு வரவேற்பளித்தார்கள். அந்நிகழ்ச்சியைத் தயாரிப்பாளர் சம்பத்குமார் அவரை இன்முகத்துடன்வரவேற்றார். அவருக்கு வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்தார்.
சல்மாபானு அமைதியாக அவருக்குரிய இருக்கையில் அமர்ந்தார். சுழலும் நாற்காலியில் அவர்அமர்ந்தாலும் அமர்கையில் நாற்காலி சுழலாமல், நகராமல் பார்த்துக்கொண்டார். அவரைச் சுற்றிலும்கழுகுப் பார்வைகளாக வீடியோ லென்சுகள். நிகழ்ச்சிகளில் கேட்கப்போகும் கேள்விகளை ஒரு வாரத்திற்குமுன்பே அவருக்கு கொடுத்திருந்தார்கள். அக்கேள்விகளுக்கு அவர் தயாரித்து வைத்திருந்த பதில்களைஒரு முறை எடுத்து பார்த்துக்கொண்டார். கேள்விகளும் கேள்விகளுக்குத் தயாரித்து வைத்திருந்தபதில்களையும் பார்க்கையில் அவருக்குச் சிரிப்பு வந்தது. உள்ளூரச் சிரித்துகொண்டார். ஓரிருகேள்விகளின் பக்கம் கண்கள் செல்கையில் அவருடைய கண்கள் சிவந்தன. சில கேள்விகள் ஒரிருவார்த்தைகளிலும், பல கேள்விகள் சுருக்கமான பதில்களாகவும், ஓரிரு கேள்விகளுக்கு வலியுடன் கூடியபதிலாகவும் தயாரித்திருந்தார். கேள்விகளுக்குத் தகுந்த பதில்களை அவர் தயாரித்து வைத்திருந்தாலும்இந்த நேர்காணலில் பங்கேற்று தன் முகத்தைக் காட்ட அவருக்கு தயக்கம் இருக்கவே செய்தது.
அவருடைய வாகன ஓட்டியும் காப்பாளினியுமான லதாவைக் கூப்பிட்டார். லதா ஓடிவந்தார்.
“ இந்த நேர்காணலுக்கு நான் ஒப்புக்கொண்டது சரிதானா?”
“ நூறு சதவீதம் சரி. உங்களைப் பற்றிய பல்வேறு யூக, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கஇதுவொரு வாய்ப்பு. இந்நிகழ்ச்சியின் வாயிலாக உங்களைப் பற்றிய நீண்டகாலப் புதிர்கள்அவிழவிருக்கிறது….” என சொன்னவர், சல்மாபானு கைகளைப் பற்றிக்கொண்டு குலுக்கினார்.
சல்மாபானு, திவாகர் முன் முகத்தை கறுப்புத் துணியால் மூடிக்கொண்டு ஒரு சௌதி அரேபியாபெண்ணைப் போல உட்கார்ந்திருந்தார். நிகழ்ச்சி தயாரிப்பாளர் சம்பத்குமார் நேரடி ஒளிபரப்புவேலைகளில் தயாரானார். போக்கஸ் விளக்குகளை ஒளிரவிட்டார். கட்டை விரலை உயர்த்தி சமிஞ்கைகாட்டினார். திவாகர் பக்கமாக கேமரா திரும்பியது.
“ நிகழ் தொலைக்காட்சி பார்வையாளர்களுக்கு வணக்கம், இன்றைய நிகழ்ச்சியில் நேரடிஒளிப்பரப்பில் விளிம்பு நிலை மக்களுக்காகப் போராடுபவரும், சாதி மறுப்பு திருமணத்தி்ற்கு ஆதரவுஅளிப்பவருமான சமூகச் சேவகி, எழுத்தாளர் சல்மாபானு அவர்களிடம் உரையாடவிருக்கிறோம். செல்விசல்மாபானு அவர்களை நமது நிழல் தொலைக்காட்சியின் சார்பில் வரவேற்கிறோம்……”
“ வணக்கம் சல்மாபானு”
“ வணக்கம்” என்றவர் இன்முகத்துடன் கேமராவைப் பார்த்து கும்பிட்டார்.
நேர் முகம் தொடங்கியது.
“சல்மாபானு, உங்கள் குழந்தை பருவத்தைப் பற்றி சொல்லுங்கள்?”
“ நான் குழந்தை பருவத்தில் மிகவும் அழகாக இருந்தவள். என்னுடைய அப்பா தோல் வியாபாரம்செய்தவர். ஆகவே நாங்கள் ஒரே இடத்தில் நிரந்தரமாக வாழ்வதற்கான சூழல் ஏற்படவில்லை. இடம்பெயர்ந்தோம். அதற்கேற்ப என்னுடைய பள்ளிச்சூழல் மாறிக்கொண்டிருந்தது. இதன்மூலம் எனக்கு நிறையதோழிகள் கிடைத்தார்கள்.”
“ நீங்கள் ஒரு எழுத்தாளர். அதற்காக நிறைய பரிசுகளும், விருதுகளும் வாங்கியிருக்கிறீர்கள்.இந்த எழுத்து எப்பொழுது தொடங்கியது?”
“ பள்ளியில்”
திவாகர் மீட்டர் அளவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் மில்லி மீட்டர் அளவில் பதில்சொல்லியிருந்தார். அவரது குறுகத் தறித்தப் பதில் அவருக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஒரு பந்துக்குநான்கு ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்த ஏமாற்றத்தைத் தந்தது.ஓரிரு நொடிகள் நீளும் பதிலுக்காகக் காத்திருந்து அடுத்தக் கேள்விக்குத் தாவினார்.
“நீங்கள் எத்தனையோ சாதி மறுப்புத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறீர்கள். உங்களை அதைநோக்கித் தூண்டியது எது?”
“சமுதாயம், மக்கள். சில ரகசிய மனிதர்கள் அவ்வளவே. அதற்கு மேல் நான் எதையும்சொல்லவோ, யாரையும் சுட்டிக்காட்டவோ விரும்பவில்லை.”
“ நீங்கள் சிடுசிடு பேர் வழியா?”
“ கிடையாது. நான் இயல்பானவள். எப்பொழுதும் சாந்த மனநிலையில் இயங்கக் கூடியவள்”
“ உங்கள் படைப்புகளையும், உங்களது பேட்டிகளையும் வாசிக்கையில் நீங்கள் ஆண்களிடமிருந்து
முரண்பட்டவரைப் போலவும், ஆண்களின் மீது பகைமை கொள்கிறவர் போலவும் தெரிகிறதே?”
“நானொரு பெண் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அவ்வளவே…” திவாகர் அவருடையகடிகாரத்தைப் பார்த்தார். ஒரு மணி நேர நிகழ்ச்சி கால் மணி நேரத்திற்குள் முடிந்து விடுமோ எனநினைக்கையில் அவருக்குள் அட்ரீனல் சுரந்தது.
“ அப்படியானால் உங்களுக்கு ஆண் நண்பர்களே இல்லை. அப்படித்தானே?”
சல்மாபானு வசைபாடுவதைப் போல பெரிதாகச் சிரித்தார். சுழல் நாற்காலியில் அரைவட்டமடித்தார். “ஏன் இல்லை, எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் உண்டு. என் அப்பா என்னுடையஆகச்சிறந்த நண்பர். இப்பொழுது அந்த இடத்தில் என் தம்பி இருக்கிறான்”
“ இவர்களை விடுத்து பிற நண்பர்களைக் கேட்கிறேன்?”
சல்மாபானு சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். கேள்வித் தொடுக்கும் திவாகரை ஊடுறுவிப்பார்த்தார்.
“ ஆம், எனக்கொரு ஆண் நண்பன் இருந்தான். அவனை நான் காதல் கூட செய்திருக்கிறேன்”அவரது பதில் தன் கூட்டை தானே உடைத்துக் கொள்வதைப் போன்றிருந்தது. பெண்கள் தான்பழகிய ஆண் நண்பர்களைப் பற்றியும், காதலனைப் பற்றியும், காதலின் தோல்வியைப் பற்றியும் பேசுவதுஐயப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைய முயற்சிப்பதைப் போன்றது. எத்தனை பெண்கள் இப்படி தன்காதலைப் பகீரங்கப்படுத்த முன் வந்திருக்கிறார்கள்? தான் கேட்கும் கேள்வியால்தான் இதுநிகழ்ந்திருக்கிறது. தன்னை ஒருமுறை மெச்சிக்கொண்ட திவாகர் ‘டை’யை ஒரு முறைஇழுத்துவிட்டுகொண்டார்.
திவாகர் அடுத்தடுத்தக் கேள்விகளுக்குள் நுழைய தயங்கினார். கேள்விகள் அவரது அந்தரங்கம்பற்றியதாக இருந்தது.
“நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை?”
“நீங்கள் உங்கள் காதலருடன் படுக்கையில் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்களா?”
“உங்களது பால்ய கால காதலனை நினைக்கையில் உங்களுக்குள் இப்பொழுது என்னநிகழ்கிறது?” இப்படியான கேள்விகள் அவரிடம் கேட்க வேண்டியிருந்தது. பெண்களின் அந்தரங்கத்திற்குள்ஆண்கள் நுழைவது அவனுக்கு அவனே வளை விரித்துக்கொள்வதைப் போன்றது. ஏன்தான்இந்நிகழ்ச்சிக்கு ஒப்புக்கொண்டேனோ என்றிருந்தது திவாகருக்கு. கடைசி மாத ஊதியக் காசோலையில்கூடுதலாக கிடைக்கப்போகும் பூச்சியங்களுக்காக இப்படியொரு இந்நிகழ்ச்சியில் ஒப்புக்கொண்டிருக்கிறேன்,என்பதை நினைத்து மனதிற்குள் புழுங்கினார்.
திவாகர் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் பணியாற்றியவர். எதையும்செய்திகளாக பார்க்கும் நுணுக்கம், செய்தியாக்கும் திறமையால் அப்பத்திரிக்கையின் வளர்ச்சிக்குபெரியதொரு அர்ப்பணிப்பைச் செய்தவர். ஊதியப் பிரச்சனை, பணி அனுபவம், தினசரியின் வளர்ச்சிஇவற்றை கோடிட்டு அப்பத்திரிக்கையிலிருந்து விலகி இந்தத் தொலைக்காட்சியில் சேர்ந்திருந்தார். அதேபிரச்சனையால் இங்கேயிருந்து வேறொரு தொலைக்காட்சிக்கு போகவிருக்கிறார்.
“ சல்மாபானு, உங்களைக் கவர்ந்த அந்த ஆண் நண்பர் யாரென்று சொல்ல இயலுமா?”
சல்மாபானு திவாகரை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தார். ஒரு நிமிடம் பதிலற்று நிசப்தமாகஇருந்தார்.
“ ஆம், சொல்கிறேன். அவனது பெயர் யுவராஜ். அவன்தான் என் நண்பன். அவனைத்தான் நான்காதலித்தேன்”
“ எத்தனை வருடங்கள் காதலித்தீர்கள்?.”
“ கல்லூரியில் படித்த ஐந்து ஆண்டுகள்”
“ உங்கள் காதல் எப்படி முறிந்தது…?”
“யுவராஜ்விற்கு ஒரு தங்கை இருந்தாள். அவள் மாற்றுச் சாதிப்பையனைக் காதலித்தாள். அவளதுகாதலைத் தெரிந்துகொண்ட நான் அவர்கள் இருவருக்கும் பதிவுத் திருமணம் செய்துவைத்தேன்.அவர்களுக்கு என் வீட்டில் அடைக்கலம் கொடுத்தேன். இந்த விடயம் என் யுவராஜ்விற்குத் தெரியவந்தது.அவனது ஜாதி கௌரவத்தில் கீறல் விழுந்துவிட்டதாக என்னுடன் சண்டை பிடித்தான்….”
“ அத்துடன் உங்களுடைய காதல் முறிந்து விட்டதா?”
“ இல்லை, அதன் பிறகும் எங்கள் காதல் நீடித்தது. நான் என் படுக்கையில் இடம் கொடுக்கும்வரை”
இருவருக்குமிடையில் சற்றுநேரம் அமைதி நிலவியது. இருவரும் ஒருவரையொருவர்பார்த்துகொண்டார்கள். அவர்கள் இருவரையும் கேமரா பார்த்தது. மக்கள் பார்த்தார்கள்.
“ பிறகு காதல் எப்படி முறிந்தது?”
“ என்னைத் திருமணம் செய்து கொள் என்றேன். அவன் என் ஜாதியைக் கேட்டான். சாதி மறுப்புத்திருமணம் செய்துகொள்ளலாம் என்றேன். அவன் மறுத்தான். நான் அடம் பிடித்தேன். அவன் பேண்ட்பாக்கெட்டிற்குள் கையை விட்டான். ஒரு சீசாவை எடுத்தான். திறந்தான். என் முகத்தில் அடித்தான். அதுஆசிட்…”
கேமரா சல்மாபானு பக்கம் முழுவதுமாகத் திரும்பியிருந்தது. அவர் தன் முகத்தை மூடியிருந்தகறுப்புத் துணியை மெல்ல அகற்றினார்.
அவருடைய முகம் அழகு இழந்திருந்தது. முகம் பார்க்க அகோரமாகவும் விகற்பமாகவும்இருந்தது. கன்னங்களில் மடிப்பு விழுந்து, கருத்தும் சுருங்கியும் இருந்தது. அவருடைய மூக்கு அறுவைசிகிச்சைக்கு உள்ளாகி சிதைந்துப் போயிருந்தது. அவளுடைய கன்னங்களிலிருந்து கண்ணீர் தாரையாகவழிந்தது.
“ அதன்பிறகு அவன் என்னானான்?”
“ காவல்த் துறையினரால் தேடப்படும் குற்றவாளியானான்.”
“ அவனைக் காவல் துறையினர் கைது செய்தார்களா?”
“ இல்லை. பதினைந்து வருடங்கள் அவர்களின் கண்களில் சிக்காமல் ஒழிந்திருந்தான். ஜாதிஆதிக்கத்தால் கடைசி வரை அவனைக் காவல் துறையினரால் நெருங்க முடியவில்லை”
“ அவனைச் சமீபத்தில் பார்த்திருக்கிறீர்களா?”
“ ஆம், அவன் தற்போது வாழ்க்கை தரத்தில் உயர்ந்தவனைப் போல் காட்டிக்கொண்டிருக்கிறான்.யோக்கியன் போல நடந்துகொண்டிருக்கிறான். இன்றைய பிரபல நபர்களில் அவனும் ஒருவன்….”
திவாகர் திடுக்கிட்டார். அவருடைய முகம் இறுக்கத்திற்கு உள்ளானது. உட்கார்ந்திருந்தஇருக்கையை விட்டு சட்டென எழுந்தார். அவருடைய உதடுகள் பரிதவித்தன.
“ நீ, நீ..நீங்கள் சல்மாபானு அல்ல. ச, ச,சகுந்தலா…?” வார்த்தைகள் குழறின.
“ஆமாம், நான் சகுந்தலா. நீ மட்டும் திவாகரா என்ன? நீ யுவராஜ். என் வாழ்க்கையைச்சீரழித்தவன். காவலர்களால் தேடப்படும் குற்றவாளி….”
கேமரா நிழல் தொலைக்காட்சியின் டிஆர்பி புள்ளியை வர்க்கத்தில் உயர்த்திக்கொண்டிருந்தது.