‘கனகர் கிராமம்’ …. தொடர் நாவல் … அங்கம் 04 ….. செங்கதிரோன்.
சங்கமன்கண்டிப் பிள்ளையார் கோயிலடியில் இளைப்பாறிப் பொத்துவில் நோக்கிப் புறப்பட்ட பஸ் கடமையிலே கண்ணாகி கோமாரியையும் கடந்து முருகந்தனையையும் தாண்டி வேகமாக ஓடிக்கொண்டிருக்கையில் ஓரிடத்தில் திடீரென்று சாரதி அழுத்திய ‘பிரே’க்கினால் குலுங்கி நின்றது. அரைத் தூக்கத்திலிருந்த பயணிகள் சிலர் ஆடி அசைந்து விழித்துக் கொண்டனர்.
‘பஸ்’ சுக்குள் இருந்த பயணியொருவர், ‘அறுபதாம்கட்ட வந்திட்டது’ எனக் குரல் எழுப்பினார். ‘ஆனை’ என்ற அச்சக்குரலும் அடுத்து எழுந்தது.
அனுபவப்பட்ட பயணியொருவர், அலட்டிக்கொள்ளாமல் ‘அறுபதாம்கட்டயில ஆன மறிக்கிற வழமதானே. நெடுகத்தானே நடக்கிது’ என்றார்.
யானையைக் கண்டுவிட்ட மற்றொருவர், ‘தனியன் ஆன ஆபத்தானது’ என்றார்.
நடுவயதைத் தாண்டிய இன்னொரு பயணி, ‘இனிப் பொத்துவிலுக்குப் போய்ச் சேந்தாப் போலதான். இண்டைக்கு ராத்தங்கல் அறுபதாம் கட்டையடியில காட்டுக்குள்ள றோட்டிலதான். இனி விடிஞ்சாத்தான் பொத்துவில். இக்கணம் நாளைக்குப் பொஞ்சாதி ராவு எங்கபோன எண்டுகொம்பப்போறாள். ஆன மறிச்சகா எண்டா நம்பயா போறாள்?’ என்று சத்தமிட்டுக்கூறப் ‘பஸ்’சுக்குள் இருந்த மற்றப்பயணிகள் எல்லோரும் பெண்களும் ஆண்களுமாய்ச் சேர்ந்து சூழ்நிலையை மறந்து வாய்விட்டுச் சிரித்தார்கள்.
சாரதிக்கு இடப்புறத்தில் மிதிபலகையில் நின்று வீதியில் கண் புதைத்திருந்த ‘பஸ்’ நடத்துனர் பயணிகள் பக்கம் திரும்பித் தனது வாயைமூடி உதடுகளை மடித்துக் குறுக்கே சுட்டுவிரலை வைத்துச் சத்தம் போடவேண்டாமென்று உடல் மொழியால் சமிக்ஞை செய்தார். ‘பஸ்’சினுள் அமைதி ஆட்சியைப் பிடித்தது.
சாரதிக்குப் பின்னால் மதகுருமார்களுக்கென ஒதுக்கப்பட்ட வலதுபுற முன் ஆசனத்தில் மதகுருமார்கள் எவரும் பயணிக்காததால் இடம் பிடித்தமர்ந்து பயணித்து, இடையே உறக்கத்தில் ஆழ்ந்து, சங்கமன்கண்டியைப் பஸ் அடைந்ததும் கண்விழித்து, இனிக் கண்ணயர்வதில்லையென்று கோகுலன் தீர்மானித்துக்கொண்டாலும்கூட, தன் கட்டுப்பாட்டையும் மீறி அரைத்தூக்கம் போட்டவன், ‘பஸ்’ சுக்குள் எழுந்த ஆரவாரத்தில் தூக்கம் கலைந்தான். சத்தமில்லாமல் எழுந்து நின்று சாரதியின் தலைக்குமேலால் தனது தலையை நீட்டி ‘பஸ்’ சின் முன்பக்க விளக்கு வெளிச்சத்தில் பாதையில் பார்வையைப் படரவிட்டான்.
பாதையின் நடுவில் முன்பக்கத்தைக் காட்டியபடி தனியன் யானையொன்று நின்று கொண்டிருந்தது. தும்பிக்கை சுவர்க்கடிகாரத்தின் ‘பெண்டுயூலம்’ போல மெதுவாகப் பக்கவாட்டில் அப்படியும் இப்படியும் அசைந்து கொண்டிருந்தது. யானைக்கும் ‘பஸ்’ நின்றிருந்த இடத்திற்குமிடையில் ஐம்பதுயார் தூரமிருக்கும்.
யானை மறித்ததால் அந்த இடம் அறுபதாம்கட்டை என்பதைக் கோகுலன் தெரிந்துகொண்டான். அடிக்கடி அவன் பயணிக்கும் பாதைதானே. அப்பாதையில் வாகனங்களை யானை மறிப்;பது அந்த இளவயதிலும் அவனுக்குப் புதிய அனுபவமல்ல.
அந்த இடம் மட்டக்களப்பு – பொத்துவில் பிரதான வீதியில் மட்டக்களப்பிலிருந்து அறுபதுமைல் தூரத்தில் அமைந்திருந்ததால் அவனுக்கு அறிவு தெரிந்த நாளிலிருந்து அது ‘அறுபதாம் கட்டை’ என்றே அழைக்கப்பட்டுவந்தமையும் அவனுக்குத் தெரியும்.
‘அறுபதாம்கட்டை’யென அழைக்கப்பபெற்ற அந்தப் பிரதேசத்தில் பாதை ஏறி உயர்ந்து செல்லும் மேட்டுப்பாங்கான பகுதியில் பாதையின் இருமருங்கிலும் அடர்ந்த பற்றைக்காடுகள் நிறைந்திருந்தன. பற்றைக்காடுகளைத் தாண்டியதும் சமதரையாகச் செல்லும் பகுதியின் இடதுபுறமாக கடற்கரைப்பக்கமாகக் கண்ணுக்கெட்டிய தூரத்தில் சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தள்ளித்தள்ளிச் சிறுசிறு மலைக்குன்றுகள்போல ஓலைக்குடில்கள் பல ஆங்காங்கே சேனைப்பயிர்ச் செய்கைப் பிரதேசத்தில் முளைத்திருந்தன. ஓலைக்குடில்கள் இருந்த இடங்களிலே சிறுவெளிச்சம் மின்னிக் கொண்டிருந்தது. சமதரைப்பாதையின் வலதுபுறத்தில் இலங்கை அரசாங்கத்தின் வனபரிபாலனத் திணைக்களத்தினால் நீளப்பாட்டிலும் அகலப்பாட்டிலும் சம இடைவெளிவிட்டு வரிசையாக நடப்பெற்று வளர்ந்திருந்த
தேக்குமரக்கன்றுகள் பாடசாலை விளையாட்டுப் போட்டியொன்றில் மைதானத்தில் உடற்பயிற்சி நிகழ்ச்சிக்குத் தயாராக நிற்கும் மாணவர்களை நினைவூட்டுவன.
சேனைப்பயிர்ச் செய்கையின் பிரதான பயிராகக் ‘கச்சான்’ செய்யப்பட்டிருந்தது. இலங்கையின் வேறிடங்களில் ‘நிலக்கடலை’ யென்றும் இந்தியாவின் தமிழ்நாட்டில் ‘வேர்க்கடலை’ யென்றும் அழைப்பார்கள். இப்பிரதேசத்தில் சிலவருடங்களுக்கு முன்னர் ‘கச்சான்’ செய்கையை அறிமுகம் செய்தவர் ஓர் இந்தியர்தான் என்பது தகவல்.
இம் முறை தானும் அறுபதாம்கட்டையில் இரண்டு ஏக்கர்மட்டில் காடுவெட்டிச் சேனையுண்டாக்கிக கச்சான் நாட்டியிருப்பதாக அம்மா கடிதத்தில் எழுதியிருந்தது கோகுலனுக்கு ஞாபகம் வந்தது. அடுத்தநாள் அம்மாவின் சேனையைப் பார்க்க அம்மாவையும் கூட்டிக்கொண்டு தான் வர வேண்டுமென்று இந்த ‘ஆனை’ ஆரவாரத்திற்குமிடையிலும் ஆசையோடு எண்ணிக்கொண்டான் கோகுலன்.
இயற்கை எழில் ‘என்னைப்பார்’ என்று அழைக்கின்ற இடம் இந்த அறுபதாம்கட்டை. காடும்காடு சார்ந்த இடமும். பண்டைத் தமிழர்களின் திணைப்பண்பாட்டில் ‘முல்லை’ நிலம் என்று அழைக்கலாம்.
சாரதி ‘பஸ்’ சின் உள்ளும் புறமும் விளக்குகளைச் சிறிதுநேரம் அணைத்துவிட்டான். இயந்திரம் மட்டும் குளிர்காய்ச்சல் வந்து நடுங்குபவனைப் போல மெல்லிதாக முனகிக் கொண்டிருந்தது. நிலாக்காலமானதால் பாதையும் யானையும் நிலாவெளிச்சத்தில் நன்கு புலப்பட்டன.
நின்றிருந்த யானை பாதையின் நடுவழியே மெதுவாக நகர்ந்து ‘பஸ்’ சை நோக்கி முன்னேறத் தொடங்கியது. சட்டென்று சாரதி அணைத்த விளக்குகளை மீண்டும் போட்டுவிட்டு ‘பஸ்’ சை யானை நடந்துவரும் வேகத்தின் இருமடங்கு வேகத்தில் பின்னோக்கிச் செலுத்தத் தொடங்கினான். பயணிகள் அனைவரும் சத்தம் போடாமல் அச்ச உணர்வில் ஆளையாள் பார்த்துக்கொண்டு அமைதியாக ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.
ஒரு பத்துநிமிடங்கள் மட்டில் ‘பஸ்’ பின்னோக்கிப் பயணித்திருக்கும். முன்னால் ‘பஸ்’சை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்த யானை திடீரென்று ஓரிடத்தில் நின்று பாதையின் வலதுபுறம் திரும்பித் தேக்குமரக்கன்றுக் காட்டுக்குள் சென்று மறைந்தது.
சாரதி சற்றும் தாமதமின்றி ‘கியரை’ அடுத்தடுத்து மாற்றி ஆர்முடுகல் விசையை அழுத்தினான். ‘பஸ்’ குறவர்கள் காட்டுக்குள் கொண்டுசெல்லும் வேட்டைநாய் உடும்பு ஒன்று ஓடக்கண்டதும் கயிற்றுப்பிடியிலிருந்து பிய்த்துக்கொண்டு பாய்ந்துபோவதுபோல உறுமிக் கொண்டு பாய்ந்து ஒடியது. யானை பாதையைவிட்டு விலகி இறங்கிச் சென்ற இடத்தைப் ‘பஸ்’ வேகமாகக் கடந்து செல்கையில் ‘பஸ்’ சுக்குள் இருந்த பயணிகள் சிலர் ‘பொத்துவில் ஆலயடிப்பிள்ளயாருக்கு அரோகோரா’ எனக் கரங்களைக் கூப்பித் தலைமேல்வைத்துக் கும்பிட்டுக் குரல் எழுப்பினார்கள்.
வேகமாக ஒடிய பஸ் ஊறணியையும் தாண்டிப் பயணித்துப் பொத்துவில் பிரதான வீதியின் இடதுபுறமிருந்த கத்தோலிக்க தேவாலயத்தைக் கடக்கும்போது கோகுலன் எழுந்து இறங்குவதற்கான ‘பெல்’ லை இழுத்து அடித்தான்.
பொத்துவில் ‘பஸ்’ நிலையத்தை அடையும்முன் சிறிதுதூரம் இப்பால் பிரதானவீதியின் இடதுபுறத்தில் அமைந்திருந்த மெதடிஸ்த தேவாலயத்திற்கு எதிரே வலதுபுறமாகச் செல்லும் ‘கிறவல்’ வீதியில், பிரதானவீதியிலிருந்து இக் ‘கிறவல்’ வீதி ஆரம்பிக்கும் சந்தியிலிருந்து சுமார் இருநூறு யார் தூரத்திலேயே கோகுலனின் வீடு இருந்தது. இவ் வீதிக்குப் ‘போதிராஜராமய’ வீதி எனப் பெயர்ப்;பலகை நடப்பட்டிருந்தது. (தற்போது விபுலானந்த வீதி எனப் பெயரிடப்பட்டுள்ளது.)
கோகுலன் பொத்துவில் மெதடிஸ்த தேவாலயத்தின் முன்னால் ‘பஸ்’ சை விட்டு இறங்கும் போது நள்ளிரவைக்கடந்திருந்தது. அவன் ‘பஸ்’ சிலிருந்து இறங்குகின்ற நேரம் பொத்துவில் ‘மயிலன்’ சினிமாப் படக் கொட்டகையிலிருந்து இரவு இரண்டாம்காட்சி படம் பார்த்துவிட்டுச் சிலர் வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களிலொருவர் அன்று ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தின் பாடல்வரிகளைச் சத்தமிட்டுப் பாடிக்கொண்டுவந்தார். அதிலிருந்து அவர்கள் படம் முடிந்துதான் வருகிறார்களென்று கோகுலன் தெரிந்து கொண்டான்.
‘மயிலன்’ சினிமாக் கொட்டகை பொத்துவில் ‘பஸ்’ நிலையத்திலிருந்து தெற்கே பொத்துவில் – பாணமை பிரதானவீதியில் ‘அறுகம்பை’யை நோக்கிச் சுமார் ஒரு மைல் தூரத்தில் அமைந்திருந்தது. பொத்துவில் ஊரில் பிரபல தொழிலதிபராகவும் வர்த்தகராகவும் விளங்கிய மயில்வாகனம் கனகரட்ணம் அவர்களுக்குச் சொந்தமானதே ‘மயிலன்’ சினிமாப்படக் கொட்டகை – ‘தியேட்டர்’.
கட்டிடங்களாலான திரைப்படமாளிகைகள் புழக்கத்திற்கு வருமுன்னர் கிராமங்களிலே கூடாரமடித்துத் தரையிலே ஆசனங்கள் போட்டுக் கொட்டகைகளிலே திரைப்படங்கள் ஓடிய காலம் அது.
‘பஸ்’ சை விட்டு இறங்கிப் பிரதானவீதியிலிருந்து வீடு செல்லும் ‘கிறவல்’ வீதியில் நுழைந்த கோகுலன் படம் பார்த்துவிட்டு வருபவர்களில் யாராவது தனது வீட்டுப்பக்கம் வருபவர்கள் இருந்தால் அவர்களுடன் சேர்ந்து செல்வது இரவு வேளையில் பாதுகாப்பாகவிருக்கும் என எண்ணி அப்படி யாராவது வருகிறார்களா எனத் திரும்பிப் பார்த்தான்.
இடுப்புக்குக் கீழே முழங்கால்வரை மடித்துக்கட்டிய வெள்ளை வேட்டியுடனும் மேலுடம்பு முழுவதையும் வெள்ளைச்சால்வையால் போர்த்தியபடியும் வந்த ஒரு மனிதர் ‘கிறவல்’ வீதியில் நுழைவது தெரிந்தது. அவருடன் சேர்ந்து வீடு செல்லலாம் என்றெண்ணிய கோகுலன், சற்று நின்று தாமதித்தான். ஆனால், மீண்டும் திரும்பிப்பார்த்தபோது அந்த மனிதரைக் காணவில்லை. பிரதானவீதியில் நேரே சென்றுவிட்டாரோ என்று எண்ணிய கோகுலன் சிறிதுதூரம் சென்று திரும்பிப்பார்த்தபோது அந்த மனிதர், அவனுக்குப் பின்னால் இடைவெளிவிட்டு வந்து கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து வீடுசெல்லலாமென மீண்டும் எண்ணிய கோகுலன் மீண்டும் சற்று நின்று தாமதித்தான். ஆனால், பின்னால் வந்த மனிதர் மீண்டும் கண்ணிலிருந்து மறைந்து விட்டார். வீதியைவிட்டு இறங்கி அருகில் ஒரத்தில் எங்காவது சிறுநீர் கழிக்கச் சென்றிருக்கலாமென்று ஊகித்த கோகுலன் தொடர்ந்தும் சிறிது தூரம் மெல்ல நடந்துசென்று பின் திரும்பிப்பார்த்தபோது அந்த மனிதர் தன்னைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருப்பது தெரிந்தது. மீண்டும் சற்றுநின்று தாமதித்தபோது வந்தவரை மீண்டும் காணவில்லை. இப்படிப் பலதடவைகள் நிகழ்ந்து கோகுலன் தனது வீட்டை அண்மித்துவிட்டதால் பின்னால் வந்த மனிதரைப்பற்றிப் பின்பு கவனிக்காமல் வீட்டை விரைவாக அடைந்து ‘கேற்’றடியில் நின்று தனது தாயாரைக் கூவி அழைத்தான்.
நள்ளிரவையும் கடந்தநேரம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கோகுலனின் தாயார் கனகம் மகனின் ‘அம்மா’ என்ற குரல் கனவில் கேட்டதுபோலப் பதறித் துள்ளியெழுந்தவள், ‘அம்மா’ என்ற அழைப்பு மீண்டும் காதில்விழத் தலைமாட்டிலிருந்த ‘டோர்ச்லைற்’றை எடுத்து அடித்துக் கொண்டு ஓடிவந்து ‘கேற்’றைத் திறந்தாள்.
கோகுலனைக் கண்ட மாத்திரத்தில் தாய்மை உள்ளம் களிகொண்ட அதேவேளை நடுநிசியில் இப்படித் தனியாகச் சொல்லாமல் கொள்ளாமல்
வந்து நிற்கிறானே என்ற அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
‘என்னமனே! காரைதீவில இறங்கித் தங்கி நாளைக்கு வந்திருக்கலாம்தானே. இப்படி நடுராத்திரியில இறங்கித் தனியவரப் பயமில்லையா? ‘மெல்ரேஸ்’ செத்த உனக்குத் தெரியாதா?’ என்றாள்.
‘எப்பம்மா செத்தவர். என்னெண்டு செத்தவர். எனக்குத் தெரியாதம்மா’ என்றான் கோகுலன்.
‘போனகிழமதான். சாராயத்துக்குள்ள நஞ்சக் கலந்து குடிச்சுத் தற்கொலை செய்து கொண்டான்’ என்றாள் கனகம்.
‘மெல்ரேஸ்’ என்பவர் பிரதான வீதியிலிருந்து கோகுலனின் வீட்டுக்குவரும் வழியில் அதே ‘கிறவல்’ வீதியில் இரண்டு மூன்று வீடுகள் தள்ளி எதிர்ப்புறத்தில் குடியிருந்த பறங்கிக் குடும்பமொன்றின் தலைவன். கோகுலனின் தந்தையின் நெருங்கிய கூட்டாளி. இருவரும் இணைந்து அடிக்கடி ‘தண்ணி’ போடுவார்கள். கோகுலனுக்கு ‘மெல்ரேஸ்’ சைத் தனது சிறுவயதிலிருந்தே நன்கு தெரியும். ‘பாவம் என்னம்மா’ என்று பரிதாபப்பட்டான். கனகம் தொடர்ந்தாள்.
‘மெல்ரேஸ்’ செத்த நாளையிலிருந்து இரவில இந்த றோட்டால ஒருத்தரும் தனியா வாறல்ல. ‘மெல்ரேஸ்’சின் ஆவி றோட்டில பேயாக நிண்டு பயமுறுத்துதாம் என்று ஊருக்குள்ள பெரிய கத. அவன் செத்தது ‘பஞ்சமி’ யிலயாம்’
கனகம் சொன்ன கதையைக்கேட்ட கோகுலன் தான் வரும்போது பின்னால் வந்த மனிதரின் விவகாரத்தை விபரமாகச் சொல்லி, ‘நல்ல காலமம்மா! ‘மெல்ரேஸ்’ செத்தது எனக்குத் தெரியாம இருந்தது. இல்லாட்டி நானும் பயந்திருப்பன். பஞ்சமிப்பேய் என்னைப் பிடித்திருக்கும்’ என்று சொல்லி மெல்லிதாய்ச் சிரித்தான்.
கனகம் ‘உனக்குச் சிரிப்பாரிக்கி. நல்ல ஆவியொண்டு உன்ன அந்த மனிதர் வடிவத்தில உனக்குப் பின்னாலவந்து பாதுகாப்புத் தந்து காப்பாத்திரிக்கி’ என்றவள் தன் கணவனின் நினைவுவர ‘அப்பாட ஆவிதான் உனக்குப் பின்னால வந்து காப்பாத்திரிக்கி. எல்லாத்துக்கும் ஆண்டவன் ஒருவன் நமக்கெல்லாம் துணையா இரிக்கான். நாம ஆருக்குக் கொடும செய்த’
என்று கையெடுத்துத் தன் கணவனையும் கடவுளையும் நினைத்துக் கும்பிட்டாள்.
பறங்கியருக்கு என்ன பஞ்சமி. நம்மட சைவ ஆட்கள்தானே பேய், பிசாசு, பில்லி, சூனியத்தை நம்புகிறவர்கள் என்று கோகுலன் தனக்குள் எண்ணிக்கொண்டாலும் தாயின் கதைக்கு மாறுபட ஒன்றும் கூறாதிருந்தான்.
கோகுலன் தன் தந்தையைப்போலவே பேய், பிசாசு, பில்லி, சூனியத்திலெல்லாம் நம்பிக்கையில்லாதவன். தந்தையும் தான் மரணிக்கும்வரை அவ்வாறுதான் அவனை வளர்த்திருந்தார். குலவிழுது கல்லாமல் பாகம்படும் அல்லவா? தந்தையின் குணாம்சங்கள் அவனுக்குள் குடிபுகுந்திருந்தன.
‘சரி அதமறந்திட்டு உடுப்ப மாத்திட்டு கிணத்தடிக்குப் போய் கைகால் முகத்தக் கழுவிச் சாப்பிடவா. பசியோட வந்திருப்பாய்’ என்ற கனகம், ‘இருட்டுக்குள்ள கவனம். பாத்துப்போ’ என்று தன் கையிலிருந்த ‘டோர்ச்லைற்’றைக் கோகுலனிடம் கையளித்துவிட்டு மண்ணெண்ணைக் குப்பிவிளக்கொன்றைக் கொளுத்திக் கொண்டு குசினிக்குள் நுழைந்தாள்.
குழல்புட்டும் அவித்;து முட்டையும் பொரித்துக் கோகுலன் சாப்பிட்டபின் சிறிதுநேரம் தாயும்மகனும் கதைத்திருந்துவிட்டு நித்திரைக்குச் சென்றனர்.
கோகுலனுக்கு மூன்று அக்காமார்கள். கோகுலன் குடும்பத்தில் நான்காவது பிள்ளை. முதல் ஆண்பிள்ளை. தம்பியொன்றுண்டு. தம்பிதான் குடும்பத்தில் கடைக்குட்டி. கோகுலனுக்கு நான்கு வருடங்கள் பிந்திப் பிறந்தவன். கோகுலன் ஆரம்பக்கல்வி படித்து ஐந்தாம் ஆண்டுப் புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த அதே பொத்துவில் மெதடிஸ்த மிசன் பாடசாலையில் தான் அவனும் அரிவரியிலிருந்து ஆரம்பக்கல்வியைத் தொடங்கியவன், ஆறாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தான்.
ஒரு நீளமான வளவை அகலப்பாட்டில் மூன்று சமதுண்டுகளாகப் பிரித்து மூன்று வளவுகளிலும் கட்டுப்பட்டிருந்த இரண்டறையும் மண்டமும் என்று கிராமப் புறங்களிலே காணப்படும் மாதிரி வீடுகளில் கோகுலனது அக்காமார்கள் மூவரும் அடுத்தடுத்துத் தத்தம் குடும்பத்துடன் குடியிருந்தார்கள். கோகுலனின் தாயாருடன் கோகுலனும் அவனது தம்பியும் “இளையக்கா” என்று அழைக்கப்பெறும் மூன்றாவது அக்காவின் குடும்பத்துடன்தான் கூட்டுக்குடும்பமாக ஒட்டிக்கொண்டார்கள். இக்கூட்டுக்குடும்பம் கோகுலனின் இளையக்கா, அவரின் கணவர், தாயார், கோகுலன், தம்பி யோகன் என ஐந்து பேர் கொண்டது.
கோகுலன் நள்ளிரவில் பொத்துவிலில் வந்திறங்கியது அவனது தாயாருக்கு மட்டுமே தெரியும். நள்ளிரவு நேரம் மற்ற அனைவருமே ஆழ்ந்த உறக்கத்திலிருந்ததே காரணம். மறுநாள் விடிந்தபோதுதான் கோகுலனைக் கண்டுவிட்டு தம்பி வந்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் கோகுலனிடம் வந்து அக்காமார்கள் மூவரும் நலம் விசாரித்துக் கொண்டார்கள். தம்பி யோகன் கோகுலனைக் கண்ட மாத்திரத்தில் அவனோடு வந்து “சுவிங்கம்” போல் ஒட்டிக்கொண்டான்.
கோயிலிலே ஒருவர் கதாப்பிரசங்கம் செய்யச் சுற்றிவரப் பக்தர்கள் இருந்து அதனைக் காதுகொடுத்துக் கேட்பதுபோல, கோகுலன் தான்வரும்போது அறுபதாம் கட்டையில் பஸ்சை யானைமறித்த கதை – பஸ்சால இறங்கி இரவுநேரம் நடந்து வரும்போது தனக்குப் பின்னால் வந்த மர்ம மனிதரின் கதை எல்லாவற்றையும் சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துச் சொல்ல அக்காமார்களும் அவனது தம்பியும் நல்ல அவதானத்துடன் செவிமடுத்தார்கள். ஆனாலும் “பெரியக்கா” என அழைக்கப்பெறும் முதலாவது அக்கா – மூத்தஅக்கா இடையிலே காரைதீவில் இறங்கி மறுநாள் வராமல் நேரே பொத்துவிலுக்கு நள்ளிரவில் தனியே வந்து இறங்கியதற்காகக் கோகுலனைக் கடிந்து கொண்டாள். மற்ற இரு அக்காமார்களும் அதற்குப் பக்கவாத்தியம் வாசித்தார்கள்.
தனது பிள்ளைகளின் சம்பாஷணையைக் காதில் வாங்கிக்கொண்டே குசினி வேலைகளில் கவனத்தைச் செலுத்தியிருந்த கனகம் வெளியே வந்து முற்றத்தில் கூடியிருந்த தனது பிள்ளைகளில் கோகுலனுக்கு முந்திய மூத்த பெண்பிள்ளைகள் மூவரையும் பார்த்து “பார்த்தியளா பிள்ளைகாள்! தம்பிக்கு எத்தினதரம் சொல்லிருப்பன் நேரம் பிந்தினா காரதீவில இறங்கி அடுத்தநாள் வரச்சொல்லி. கேக்காம நடுராத்திரியில வந்து இறங்கியிருக்கான். காரதீவால வரக்கொள்ள கண்ணகியம்மன் கோயிலத் தாண்டக்குள்ள கண்ணகத்தாய நினைச்சிக் கும்பிடனும் என்று கனதரம் சொல்லியிருக்கன். காரதீவால வரக்கொள்ள பஸ்சுக்குள்ள நல்ல நித்திரயாம். அதனால கும்பிட ஏலாமப்போய்த்தாம் எண்டுறான். சங்கமன்கண்டியிலயும் இறங்கிப் பிள்ளையாரயும் கும்பிடாம வந்திருக்கான். அதுதான் அறுபதாம் கட்டயில ஆன மறிச்சிருக்கு” என்றாள்.
“என்னம்மா! சொல்றீங்க. யானை என்ன மட்டுமா மறிச்ச. பஸ்சுக்குள்ள இருந்த ‘றைவர்’ ‘கொண்டக்ரர்’ மற்ற ஆக்கள் எல்லாரையும் சேத்துத்தானே மறிச்ச. அதுக்குள்ள சங்கமன்கண்டியில இறங்கிப் பிள்ளையாரக் கும்பிட்ட ஆக்களும் இருந்தவங்கதானே” என்று சொல்லிச் சிரித்தான். அக்காமார்கள் மூவரும் அவனுடன் சேர்ந்து விழுந்துவிழுந்து சிரித்தார்கள். தம்பி யோகன் இக்கதைகளை அரைகுறையாக விளங்கிக்கொண்டு எல்லோரும் சிரிக்க அவனும் சேர்ந்து சிரித்தான். கனகம் எல்லோரையும் நோக்கி, “உங்க எல்லாருக்கும் நான் சொன்னது பகிடியாக் கிடக்கு” என்று கூறி முகத்தை ஒருவெட்டு வெட்டினாள்.
இந்த அமளிக்கிடையில், காலையில் பொத்துவில் ‘ரவுண்’ பக்கம் சாமான்கள் வாங்குவதற்காகச் சைக்கிளிலே போய்விட்டு அப்போதுதான் வந்திறங்கிய கோகுலனின் இளையக்காவின் கணவர் வந்து “அறுபதாம்கட்டச் சேனைக்குப் போறெண்டா சுணங்காம வெளிக்கிடுங்க. ‘பஸ் ஸ்ராண்டில’ அக்கரப்பத்து பஸ் கிடக்கு. கொஞ்ச நேரத்தால வெளிக்கிடப் போகுது” என்றார்.
அதனைக் கேட்ட அக்காமார்கள் மூவரும் கலைந்து அவரவர் வீட்டு வேலைகளைக் கவனிக்கச் செல்லக் கோகுலனும், தாயாரும், தம்பியோகனும் அவசரம் அவசரமாகக் குளித்துக் காலை உணவையும் முடித்துக் கொண்டு தேவையான சாமான்களைப் பைகளிலே இட்டுக் கைகளில் காவிக்கொண்டு பொத்துவில் பஸ் நிலையத்தை நோக்கி ஓட்டமும் நடையுமாக விரைந்தார்கள்.
அக்கரைப்பற்று “பஸ்” ஸில் ஏறி அறுபதாம்கட்டையில் வந்திறங்கிய கோகுலனும் தாயாரும் தம்பியும் பிரதான வீதியை ஓட்டினாற்போல் இருந்த சேனையின் கடப்புக்கு மேலால் கால்களை எட்டிவைத்துக் கடந்து உள்நுழைந்து சேனைகளுக்குள்ளால் சாரைப்பாம்புபோல நீண்டும் வளைந்து வளைந்தும் செல்லும் ஒற்றையடிப்பாதையிலே நடந்து பிரதான வீதியிலிருந்து சிறிது தொலைவிலிருந்த தமது சேனைக்கு வந்து சேர்ந்தார்கள். பொத்துவிலிருந்து அக்கரைப்பற்றுக்குச் செல்லும் பிரதான வீதியின் வலது புறத்தில் கடற்கரைப் பிரதேசத்தை நோக்கியதாய் அமைந்திருந்தது கோகுலனின் தாயாரின் சேனை. கடற்கரை அவ்விடத்திலிருந்து ஒரு கட்டைத் (மைல்) தூரமிருக்கும்.
சேனைப்பயிர்ச்செய்கைப் பிரதேசம் பச்சைக்கம்பளம் விரித்தாற்போல பரந்தும் விரிந்தும் பசுமையாகக்கிடந்தது. சேனையைச் சுற்றிவர அடர்த்தியான கொத்துவேலிமுள்வேலி போடப்பட்டிருந்தது. உள்நுழைவதற்கு ஓரிடத்தில் கடப்பு விடப்பட்டிருந்தது.
கொத்துவேலியின் மேல் பால்பீர்க்கங் கொடிகளும் காட்டில் தானாகவே முளைத்த மிரிபாகற்கொடிகளும் ஆங்காங்கே பூக்களுடனும் பிஞ்சுகளுடனும் முற்றிய காய்களுடனும் படர்ந்து கிடந்தன. பச்சைநிறப்பருத்திச் சோலையில் மஞ்சள் நிறப் பூ ‘டிசைன்’களைப் பதித்ததுபோல் அவற்றின் மஞ்சள் நிறப்பூக்கள் கண்ணைக் கவர்ந்தன. உருண்டையான மிரிபாகற்காய்கள் கொடியிலிருந்து காதில் கவசகுண்டலங்கள்போலத் தொங்கிக் கொண்டிருந்தன.
சேனையைச் சுற்றிக் கொத்துவேலியால் எல்லையிடப் பெற்றிருந்த உட்புறமாகப் போர்வீரர்கள் வரிசையாக நின்று காவல் புரிவதைப்போல சோளம் செடிகள் ஆளுயர வளர்ந்திருந்தன. சோளம் செடிகள் உச்சியிலே பாளை விரித்ததுபோலப் பூத்தும் பழுப்புநிற மீசையுடன் கணுக்களிலே குலைகள் தள்ளியும் கம்பீரமாக நின்றிருந்தன.
“கச்சான் இரண்டரமாதப் பயிராப் போய்த்து மனே!, பூக்கத் தொடங்கிட்டு. இனிக் கிழங்கு இறங்கும்” என்று கோகுலனின் தாயார் அவனிடம் கூறிவைத்தாள். நிலம் தெரியாமல் படர்ந்திருந்த கச்சான் செடிகளில் ஆங்காங்கே வானத்து நட்சத்திரங்கள்போல மஞ்சள்நிறப் பூக்கள் தலைகாட்டின.
சேனைப்பூமியில் புற்றுகள் இருந்த இடங்களில் அவை கொத்திக் கலைக்கப்பட்டுத் தரைமைட்டமாக்கப்பட்டுப் புற்றுமண் பரவிய இடங்களில் வெண்டி, கத்தரி, கொத்துஅவரை மற்றும் மிளகாய்ச் செடிகள் பூவும் பிஞ்சுமாய்க் காட்சியளித்தன. சில இடங்களில் பூசணி, வத்தக, வெள்ளரி மற்றும் கக்கரிக் கொடிகளும் நிலத்திலே படர்ந்து இருந்தன. அவற்றின் கொடிகளிலே இலைகளுக்குள்ளே ஒளிந்து கொண்டு தரையில் சாய்ந்து படுத்துக்கொண்டிருக்கும் தாய்நாயின் மடியிலிருந்து குட்டிகள் பால் குடிப்பதுபோல நீள் உருண்டையான பிஞ்சுக்காய்கள் தரையிலே படுத்துக்கிடந்தன.
சில இடங்களில் மிலாறுகள் நடப்பெற்று அவற்றில் பயற்றம்கொடிகளும், அவரைக் கொடிகளும் படர்ந்திருந்தன. பயற்றங்கொடிகளிலிருந்து மெல்லிய பச்சோலைப் பாம்புகள் போன்ற நீளமான காய்கள் நிலத்தை நோக்கித் தொங்கிக் கொண்டிருந்தன. அவரைக் கொடிகளில் ஊதாநிறப்பூக்களிடையே கொத்துக்கொத்தாய் பிறை நிலவு வடிவில் காய்கள் பிடித்திருந்தன.
சேனையின் பள்ளமான ஒரு சிறுபரப்பில் நெல்லும் செழித்துப் பயிராகியிருந்தது. ஒரு ஓரத்தில் சிறிதளவு குரக்கனும் பயிராகிக் கிடந்தது.
சேனையின் நடுவில் ஓலைக்குடிலொன்றும் கட்டப்பட்டிருந்தது. கிடுகுகளால் உட்பக்கம் வேயப்பட்டு அதற்குமேலால் வைக்கோலும் போடப்பட்டிருந்த அதன் கூரையில் நாடம் கொடியொன்று படர்ந்து அதிலும் பூவும் பிஞ்சுகளும் தோன்றியிருந்தன. மென்பச்சைநிறக் குடுவைகள்போல பிஞ்சுக் காய்களும் கதாயுதம்களைக் கிடத்தியதுபோல நீளமான முதிர்ந்த காய்களும் ஆங்காங்கே கூரைமேல் ஒய்யாரமாகக் கிடந்தன.
ஓலைக்குடிலுக்குள் காட்டுக்கம்புகளால் இரண்டடி உயரத்தில் கட்டில் போல் ‘தட்டி’ கட்டியிருந்தது. அதுதான் படுக்கை என்றும் கோகுலனுடைய தாயார் சொல்லி வைத்தாள். அருகில் மடித்துப் பயன்படுத்தக்கூடிய சாக்குக்கட்டில் ஒன்றும் மேலதிகமாக வைக்கப்பட்டிருந்தது. குடிலின் வாசல் இல்லாத நெற்றிமுட்டுப் பக்கத்தில் பாய் அடுக்கி வைக்கும் ‘அசவு’ம் ‘திருநீற்றுக் குடுக்கை’யும் தொங்கின.
குடிலுக்கு வெளியே முற்றத்தின் ஓரமாகக் களிமண்ணினால் சதுரவடிவில் இரண்டடி உயரத்தில் கட்டப்பட்டு அதன் மேற்பரப்பில் மூன்று செங்கற்கள் நடப்பட்ட அடுப்பும் இருந்தது. அதுதான் குசினி என்றாள் கோகுலனுடைய தாயார். அதற்குமேல் மழைநீர் விழாமல் சிறு ஓலைக்கூரையும் போடப்பட்டிருந்தது.
ஓலைக்குடிலின் முன்னால் முற்றத்தில் எரிந்து நூர்ந்த குறைக்கொள்ளிக் கட்டைகளும் சாம்பலுமாய்த் ‘தீனா’ தீய்ந்து போய்க் கிடந்தது. இரவில் ‘தீனா’வில் எரியும் நெருப்பில் குளிர்காயலாம் என்றும் ‘தீனா’ எரிந்து கொண்டிருந்தால் யானை உட்பட ஏனைய மிருகங்களும் கிட்டவராமல் தள்ளிப்போய்விடும் என்றும் அவனுடைய தாயார் விளக்கமளித்தாள். “அப்ப விடியவிடியத் ‘தீனா’ எரியுமா அம்மா?” என்று கோகுலன் கேட்ட கேள்விக்குக் கனகம் “ஓம் மனே!” என்றாள்.
ஓலைக்குடிலின் முற்றத்திலும் ஓரத்தில் இறுங்குச் சோளக்கன்றுகள் ஒட்டகச் சிவிங்கியின் உயரத்திற்கு ஓங்கி வளர்ந்திருந்தன. அவையும் சோளன்செடிகளைப்போல உச்சியில் பாளை விரித்ததுபோலப் பூத்திருந்தன. மிளகாய்க்கன்றுகளும் மரவெள்ளிச் செடிகளும் மேலதிகமாக அங்கே நின்றன.
பலவிதமான பறவையினங்கள் ஒலியெழுப்பிக்கொண்டு சேனைக்குள்ளே உலாவந்தன. பலநிற வண்ணாத்திப் பூச்சிகளும் ஆங்காங்கே பறந்துகொண்டிருந்தன. விமான நிலையத்தில் புறப்பட்டுச்செல்லுகின்றதும் தரையிறங்குவதுமான விமானங்களைப்போல அவ்வப்போது குளவிகளும், தேனீக்களும், பலசாதி வண்டுகளும் குறுக்கும் மறுக்கும் சேனையை ஊடறுத்தன.
இவை ஒவ்வொன்றையும் பார்க்கப்பார்க்க இயல்பாகவே இயற்கை எழிலில் ஈர்ப்புக்கொண்ட கோகுலன் களிபேருவகை கொண்டான். ஆனாலும், தனது தம்பியும் பன்னிரண்டு வயதுச் சிறுவன். மூத்த ஆண் பிள்ளையான தானும் வந்தாறுமூலையில் தூரத்தில். தந்தையுமில்லாமல் ஒரு கைஉதவியுமில்லாமல் தனித்துநின்று தன் தாய்படும் பிரயாசையையும், அவளது உழைப்பையும் குறித்துப் பெருமிதம் அடைந்தபோதும் தந்தையை இழந்த தன்னையும் தன் தம்பியையும் வளர்த்து ஆளாக்குவதற்குத் தனது தாய்படும் பாடெண்ணியபோது தாயின் மீது இரக்கம் ஏற்பட்டதில் அவனது கண்ணிமைகளின் ஓரத்தில் பனித்துளிபோல் கண்ணீர் கசிந்தது. அதனைத் தாயாருக்குக் காட்டாமல் தன்னைச் சுதாகரித்துக் கொண்டான் கோகுலன்.
இரவுக்காவலுக்குப் பொத்துவில் ஊரில் நல்ல வேட்டைக்காரன் எனப் பெயரெடுத்த செல்லத்தம்பியைக் கிழமைச் சம்பளத்திற்கு அமர்த்தியிருப்பதாகவும் அவன் மாலை 6.00 மணிக்கு இராச்சாப்பாடும் கட்டிக்கொண்டுவந்து காவல் புரிந்துவிட்டு மறுநாள் காலை 6.00 மணிக்குப் போய்விடுவதாகவும் இரவில் தேனீர் போட்டுக் குடிப்பதற்குக் குடிலுக்குள்ளே சீனி தேயிலை எல்லாம் வைத்திருப்பதாகவும் கதையோடு கதையாக அவனுடைய தாயார் கூறத்தவறவில்லை.
வளர்ந்து பெரியவனானபின் தானும் தனது தாயாரைப்போலத் தனியாகக் கச்சான் சேனை செய்யவேண்டுமென்ற ஆசையும் கோகுலனுக்கு அப்போது அந்தப்பதினாறு வயதில் உண்டாயிற்று. தம்பி யோகன் அவனோடேயே குட்டிநாய்போல ஒட்டிக்கொண்டு திரிந்தான். ஆண்பிள்ளைகள் இருவரையும் எண்ணிக் கனகம் அகம் பூரித்தாள். அதேவேளை இருவரினதும் எதிர்காலத்தைக் குறித்தும் சிந்தனைவயப்பட்டாள்.
(தொடரும் ……. அங்கம் 05)