கட்டுரைகள்

பிழிந்த தேங்காய்ப்பூ அரசியலும் அரசமர அரசியலும்!…. ஏலையா க.முருகதாசன்.

 இலங்கையின் அரசியல் என்பது வீம்பு அரசியலாகவே அரசியலாளர்களால் கணிக்கப்படுகின்றது.

இந்த வீம்பு அரசியல்வாதிகள் அரசியல் என்றால் என்ன என்பதை தெளிவற அறிந்து அதை எவ்வாறு மக்களுக்கான தொண்டாகக் கருதி அவர்களுக்கான மகிழ்ச்சியான வாழ்வை அமைத்துக் கொடுக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் என எம்மை நினைக்க வைத்து வருகிறார்கள்.

வீம்புக்கு புத்தர் சிலைகளை தமிழ்ப் பகுதிகளில் வைப்பதும்,அரச மரங்கள் எங்கெல்லாம் இருக்கின்றதோ அந்த இடமெல்லாம் சங்கமித்தை கொண்டு வந்த அரச மரக்கிளையின் வழித்தோன்றல் என்று சொல்வதுடன் சிங்கள மக்கள் வாழ்ந்த இடம் என்று சொல்வதுமாக இலங்கை அரசு தனது தேய்ந்து போன அரசுச் சில்லுகளின் பலத்தை நம்பி தள்ளுவண்டி கரம்சுண்டல் அரசியலைச் செய்து வருகின்றது.

இலங்கை அரசியல்வாதிகள் நாட்டை வழிப்படுத்துகின்ற அரசியல்வாதிகள்தானா எனச் சந்தேகம் கொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.அரசியலைப் பொழுது போக்காகக் கருதி மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கி நாடாளுமன்றத்திற்குப் போய் அங்கு கதிரைகளில் இருந்து கொண்டு,நாடாளுமன்றச் சலுகைகள் வரப்பிரசாதங்களை அனுபவித்துக் கொண்டு இடைவேளை நேரங்களில் சிரித்துக் கும்மாளமடித்துக் கொண்டும், சபை நேரங்களில் புத்தர் சிலை,விகாரை,அரசமரம் என்பவற்றை,அவையே நாட்டின் தலையாய பொருளாதார பிரச்சினை அதைப் பற்றிப் பேசினால் நாட்டு மக்கள் பசியின்றி, நோயின்றி வாழ்க்கைச் செலவு குறைந்து முன்பு இருந்தது போல ஐந்து சதத்திற்கு தேநீர் கிடைக்கும் சூழ்நிலை உருவாகும் என்று நினைத்துக் கொண்டுதானோ என்னவோ சிங்கள அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள்.

இனவாதத்தை மத வாதத்தை பேசினால்தான் இந்தத் தமிழர் நம்மை அழிப்பதைத் தடுக்கலாம்,புத்தர் சிலையை கண்டபடி கண்ட இடத்திலை வைத்தால்தான் நமக்கு அது காவலரணாகும்,அரசமரம்: எம்முடையது எம்முடையது மட்டுமே எனச் சிங்கள மக்களை உசுப்பேத்தி அவர்களும் விடிஞ்சது இருண்டது தெரியாதவாறு இனவாத இருளுக்குள்ளேயே வைத்திருந்தால்தான் தமது பருப்பு வேகும் என நினைத்து அவர்கள் அரசியல் செய்கிறார்கள்.

இது இப்படியிருக்க எமது தமிழ் அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்திலும் அளந்து விடுகிறார்கள்,கதைப்பதில் விண்ணாதி விண்ணர்கள.; வெளியிலும் பத்திரிகையாளர் சந்திப்புகளிலும் அதாகப்பட்டது என்று சொல்லி இலங்கையின் சுதந்திரத்திறகு முன்னர் வரை போய் பிறகு இப்பொழுது வரை அங்கை போய் இங்கை போய் எதையெல்லாமோ சொல்லி இறுதியில் எல்லாரையும் துரோகி என்று சொல்லி தமது இலட்சிய நோக்கை முடித்துக் கொள்வதாகச் சொல்கிறார்கள்.சொல்லப் போனால் அரரைத்த மாவையே அரைப்பதும் பிழிந்து பிழிந்து அடியொற்ற பாலே வராவிட்டாலம் பிழிந்த

பூவைNயு பிழிந்து கொண்டிருப்பது போன்ற அரசியலை தமிழ் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழர்களால்; நகர்த்தப்பட்டு வந்த கடந்தகால அரசியலைக் கவனித்து அதுசார்ந்த காத்திரமான கருத்துக்கள் என்று சொல்லி அன்றிலிருந்து இன்று வரை தமிழர்களின் அரசியல் மீதான பார்வைகளை வெளிக் கொணர்ந்த ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் ஒரே விடயத்தையே சொல்லி வருகின்றனர்.

எடுத்தாழுகின்ற சொற்கள் அதனைத் தெளிவுபடுத்தகின்ற வார்த்தைகள் வேறு படுகின்றனவே தவிர எல்லாமே ஒரே கருத்தையே பிரதிபலித்து நிற்கின்றன.

உதாரணமாக இப்படிச் சொல்லலாம் ஐந்து சக மூன்று எட்டு என்று ஒரு ஊடகவியலாளர் எட்டு வரத்தக்கதாக ஒரு விடையைச் சொல்வது போல அவரது கருத்தைச் சொன்னால்,இன்னொரு ஊடகவியலாளர் நான்கு சக நான்கு எட்டு என எட்டு வரத்தக்கதாகச் சொல்வார்.

இதனை குறுக்கெழுத்து அரசியல் என்றும் சொல்லலாம்.இது ஒரு புறமிருக்க தமிழ் அரசியல்வாதிகளில் சண்டமாருதக் கதைகளைச் சொன்னவர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்கள் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலமும்,நீதியரசரும் முன்னாள் வடக்கு மாகாண சபையின் முதல்வருமான திரு.சி.வி.விக்னேஸ்வரனுமே ஆவார்கள்.

இவர்கள் இருவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் குறை சொல்வதே தமது இலட்சியம,; தலையாய கடமை என்பது போல குறை சொல்லும் அரசியல் பிரசாரத்திற்கூடாக இப்பொழுது தமது நாடாளுமன்ற ஆசன அபிலாசை நிறைவேறி அங்கே இப்பொழுது இருக்கிறார்கள்.

எல்லாப் பதவிகளிலும் இருந்துவிட்டேன் ஒருக்கா நாடாளுமன்றத்திலும் இருந்தால் தனது ஆசை நிறைவேறிவிடும் என்பதை ஒரு இலக்காக வைத்தவர்தான் மதிப்புக்குரிய முன்னாள் வடமாகாண முதல்வர் திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள்.

பதவிகளில் இல்லாத போதும் முன்னாள் என்ற விளித்தலைக்கூட விரும்புபவர்கள் இவர்கள்.

தமிழ்ப் பொதுசனங்களுக்கு அரசியல் என்னவென்று தெரியாது என்பது போலவும்,கடந்தகாலத்தில் இலங்கையில் என்ன நடந்தது என்பதே தெரியாதவர்கள் என்பது போலவுமே திரும்பத் திரும்ப அவர்களுக்கு ஒரே கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் முட்டாள்கள் அல்ல என்பதை அவர்கள் நினைக்கிறார்கள் இல்லை.என்னதான் நாங்கள் பொய் புரட்டுச் சொல்லிப் புழுகினாலும் அதை அவர்கள் நம்பித்தானே வாக்குப் போடுகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிறீதரன் நினைக்கிறார்.

உண்மையில் அது அப்படியல்ல.இவர்கள் இலங்கை அரசுடன் இணக்க அரசியல் செய்தால்தான் ஏதாவது தீர்வை எட்டலாம் என்ற ஞானம்கூட தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையென்றாலும் ஏதோ வாக்கைப் போட்டுவிடுவம் என்று மக்கள் வாக்குப் போட அதை எமது

அரசியல்வாதிகள் தாங்கள் சொன்ன புருடாக் கதைகளை அவர்கள் நம்பிவிட்டார்கள் என்று நினைக்கிறார்கள்.

சிங்கள அரசியல்வாதிகளில் பலர், ஒரு நாடு பொருளாதாரக் கட்டமைப்பில் அதிக கவனம் மட்டுமல்ல அதீத கவனம் செலுத்த வேண்டும் என்பது சரியான அரசியலின் ஒரு பகுதி என்று நினைக்காமல் புத்தர் சிலைகளை வைப்பது,விகாரைகளைக் கட்டுவது அரசமரங்களை சொந்தம் கொண்டாடுவது,இனவாதம் பேசுவது போன்று கவ்வைக்கும் உதவாத அரசியலைச் செய்து கொண்டிருக்க,தமிழ் அரசியல்வாதிகள் பிழிஞ்ச தேங்காய்ப்பூவை பிழியும் அரசியயைலச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் இரண்டு பகுதியினரும் இதையே செய்து கொண்டிருங்கள் நாங்கள் எங்களுடைய வேலையைப் பார்க்கிறம் என இந்தியா தனது வேலையை அவர்களின் புலனாய்வுப் பிரிவான றோவைக் கொண்டு செய்து கொண்டிருக்கிறது.

சீனாவும் தனது பங்கிற்கு அபிவிருத்தி,நவீனம் என்ற பெயரில் நிலப்பகுதிகளில் காலூன்றிவிட்டது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *