கவிதைகள்

குருவுக்கே மிஞ்சிய சீடனாய் எழுந்தார்!… கவிதை… ஜெயராமசர்மா

எட்டய புரத்தைத் தொட்டாள் தமிழன்னை
எல்லோரும் வியக்கப் பிறந்திட்டார் பாரதி
மட்டில்லா மகிழ்வை எய்தினாள் தமிழன்னை
மாபெரும் சொத்தாய் வாய்திட்டார் தமிழுக்கு

பாரதி ஆவேசம் பாரதி சிந்தனை
பாரதி பார்வை பற்றியது ஒருவரை
பாரதி பின்னாலே சுற்றியே திரிந்தார்
பாரதி ஆசியைப் பெற்றிடவே துடித்தார்

கனக சுப்புரத்தினம் என்றதன் பெயரை
கவி பாரதியின் தாசனாய் மாற்றினார்
கனக சுப்புரத்தினம் காணாமல் போனார்
பாரதி தாசனாய் பவனியவர் வந்தார்

பாரதி தாசனும் பக்தியுடன் இருந்தார்
ஆரம்ப காலத்தில் ஆத்தீகம் பாடினார்
முருகனைப் பாடினார் அருமையாய் பாடினார்
அதன்பின்னர் ஆத்தீகம் அவரைவிட் டகன்றது

அதன்பின்னர் நாத்தீகம் அவரகத்தில் அமர்ந்தது
சடங்குகளைச் சாடினார் சாதிகளை எதிர்த்தார்
சமத்துவத்தை தத்துவமாய் தன்மனதில் ஏற்றினார்
அதைப்பற்றி எழுதினார் அதைப்பற்றிப் பேசினார்

குருவான பாரதி தொடாதவற்றைத் தொட்டார்
குருவுக்கே மிஞ்சிய சீடனாய் எழுந்தார்
பெண்மையை பலநிலையில் மக்களுக்குக் காட்டினார்
ஏழ்மையை எதிர்த்தார் உழைப்பினை உயர்த்தினார்

பாரதி பெண்மையை பார்த்தவிதம் வேறு
பாரதி தாசனோ பார்த்தவிதம் வேறு
பாரதி தாசனோ புதுப்பாதை கண்டார்
அப்பாதை அவருக்கு அடையாள மீந்தது

கற்பனையில் புதுமை கருத்தினிலும் புதுமை
எழுத்திலும் புதுமை இயல்பிலும் புதுமை
இன்னமுதத் தமிழை உயிராக எண்ணிய
எங்கள் தமிழ்க்கவியாய் எழுந்துமே நிற்கிறார் !

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *