500 விமானங்களை வாங்குவதற்கு கட்டளை கொடுத்து இண்டிகோ சாதனை படைத்தது
இந்தியாவின் இண்டிகோ (IndiGo) விமான சேவைகள் நிறுவனம், எயார்பஸ் ஏ320 ரகத்தலான 500 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு கட்டளை கொடுத்துள்ளது.
பாரிஸ் நகரில் நடைபெறும் பரீஸ் எயார்ஷோ கண்காட்சியின் முதல்நாளான நேற்று திங்கட்கிழமை இந்த ஒப்பந்தம் குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்தியாவின் எயார் இந்தியா நிறுவனம் கடந்த வருடம் பெப்ரவரியில் எயார்பஸ், மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை கொள்வனவு செய்வதற்கு கட்டளை கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வணிக விமான சேவைகள் வரலாற்றில் பயணிகள் விமான சேவைகள் நிறுவனமொன்றினால் ஒரே தடவையில் கொடுக்கப்பட்ட, மிக அதிக எண்ணிக்கையான விமானங்களுக்கான கட்டளை இதுவாகும்.
விசேட விற்பனைக் கழிவுகள் முதலானவற்றுக்கு முன்னர் இவ்விமானங்களின் பெறுமதி சுமார் 55 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எயார் பஸ் நிறுவனத்திடமிருந்து ஏற்கெனவே 830 விமானங்களை வாங்குவதற்கு கடந்த சில வருடங்களில் இண்டிகோ நிறுவனம் கட்டளை கொடுத்திருந்தது. இதனால், எயார்பஸ் நிறுவனத்திடமிருந்து இண்டிகோ வாங்கும் விமானங்களின் எண்ணிக்கை 1330 ஆக அதிகரித்துள்ளது.
இவ்விமானங்கள் 2030 மற்றும் 2035 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![]()