ஐ.நா.,வில் சர்வதேச யோகா தின கொண்டாட்டம்: திருப்பூரில் இருந்து 4,150 ‘டி-சர்ட்’ அனுப்பி வைப்பு
ஐ.நா., தலைமையகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், திருப்பூரில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் அணியப்படுகின்றன.
அமெரிக்க தலைநகர் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில், ஆண்டுதோறும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா உட்பட அனைத்து நாட்டு துாதரக அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பது வழக்கம்.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஐ.நா.,வில் இன்று நடைபெறும் யோகா தினத்தில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்போர் அணிய, சிறப்பு, ‘டி-சர்ட்’ வழங்கப்படுகிறது.
திருப்பூரைச் சேர்ந்த, ‘தாய் எக்ஸ்போர்ட்ஸ்’ என்ற ஏற்றுமதி நிறுவனம், ஆண்டுதோறும் சர்வதேச யோகா தின டி – சர்ட்டுகளை தயாரித்து, நியூயார்க்கிற்கு அனுப்பி வருகிறது.
அவ்வகையில், நடப்பாண்டு 4,150 டி-சர்ட் நியூயார்க்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் யோகா தின விழாவில் பங்கேற்போர், திருப்பூரில் தயாரான டி – சர்ட்டுகளை அணிகின்றனர்.
ஏற்றுமதியாளர் நல்லசிவம் கூறியதாவது:
ஸ்டேட் வங்கி நியூயார்க் கிளை, 2016 முதல், சர்வதேச யோகா கொண்டாட்டத்துக்கான டி-சர்ட் தயாரிப்பு ஆர்டர்களை எங்களுக்கு வழங்கி வருகிறது. கடந்தாண்டு, 1,800 டி-சர்ட் தயாரித்து அனுப்பினோம். நியூயார்க்கில் உள்ள ஐ.நா., தலைமையகத்தில் நடைபெறும் யோகா கொண்டாட்டத்துக்காக, 4,150 டி-சர்ட் தயாரித்து அனுப்பி உள்ளோம். இந்த டி-சர்ட்களில், எஸ்.பி.ஐ.,ன் லோகோ மற்றும் யோகா தின லோகோ பொறிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில், பெங்களூரு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவிடமிருந்து, 500, நெய்வேலி நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி.,யிடம் இருந்து, 1,450 யோகா டி-சர்ட் ஆர்டர்கள் இந்தாண்டு புதிதாக கிடைத்தன.
அந்நிறுவனங்களின் லோகோ பொறித்து, டி-சர்ட் தயாரித்து வழங்கியுள்ளோம். சர்வதேச அளவிலான நிகழ்ச்சிக்கு தொடர்ந்து டி-சர்ட் தயாரிக்கும் வாய்ப்பு கிடைப்பதை பெருமையாக கருதுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()