உலகை ஆளப்போகும் செயற்கை நுண்ணறிவு படிப்புகள்…
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், ‘தினமலர்’ நாளிதழ் சார்பில், ‘வழிகாட்டி’ நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பெற்றோருடன் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, தமிழக அரசின் சார்பில், ‘ஆன்லைன்’ கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இதற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்று, இடங்களை தேர்வு செய்வது தொடர்பாக, மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ‘தினமலர்’ நாளிதழ் சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி, சென்னை தி.நகரில் உள்ள, சர் பிட்டி தியாகராயர் அரங்கம் மற்றும் தாம்பரம், டி.ஜி.பி., கல்யாண மண்டப வளாகத்தில் நடந்தது. நுாற்றுக்கணக்கான மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் பங்கேற்று, கவுன்சிலிங் குறித்த வழிமுறைகளை தெரிந்து கொண்டனர்.
தமிழக இன்ஜினியரிங் கமிட்டி செயலர் பேராசிரியர் புருஷோத்தமன், உயர் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன தலைவர் ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்று, கவுன்சிலிங் வழிமுறைகள், வேலைவாய்ப்புள்ள பாடப் பிரிவுகள், மாணவர்களின் தனித்திறன் வளர்ப்பு ஆகியவை குறித்து பேசினர்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் ஆன்லைனில் தங்களுக்கு பிடித்தமான பாடப்பிரிவுகளை எப்படி தேர்வு செய்வது, ஒதுக்கப்பட்ட இடங்களை ஆன்லைனில் உறுதி செய்யும் முறை, கல்லுாரிகளில் சேர வேண்டிய காலக்கெடு உள்ளிட்டவை குறித்து, இன்ஜினியரிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன், ‘லைவ் டெமோ’ முறையில் விரிவாக விளக்கினார்.
மாணவர்களும், பெற்றோரும் தங்களது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு, நிபுணர்களிடம் நேரடி விளக்கம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் வழியாக, கவுன்சிலிங் நடைமுறைகளை எளிதாக தெரிந்து கொண்டதாகவும், கவுன்சிலிங் நடைமுறை எப்படி இருக்கும் என்ற அச்சம் விலகியதாகவும் தெரிவித்தனர்.
கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியில் கூறப்பட்ட கூடுதல் தகவல்களை, www.kalvimalar.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை, ‘தினமலர்’ நாளிதழுடன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனமும், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு ரிசர்ச் நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன.
பாடப்பிரிவு முன்னுரிமை வரிசை முக்கியம்
”இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் விருப்ப பாடப்பிரிவுகளை குறிப்பிடும்போது, முன்னுரிமை அடிப்படையில் அதிக பாடப்பிரிவு, கல்லுாரிகளை குறிப்பிட வேண்டும்,” என, இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன் கூறினார்.
அவர் பேசியதாவது:
மாணவர்கள் தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதற்கு, மிகவும் எளிமையான ஆன்லைன் கவுன்சிலிங் முறை செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நடைமுறையும், மாணவர்களுக்கு மிகவும் எளிதாகவும், அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லாத வகையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் விருப்ப பாடங்கள், கல்லுாரிகள் பட்டியலை, ஆன்லைனில் எளிதாக பதிவு செய்யவும், கவுன்சிலிங்கில் அவர்களுக்கு உதவவும், 110 இடங்களில் சேவை மையங்கள் செயல்படுகின்றன. அனைத்து அதிகாரப்பூர்வ தகவல்களையும், இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கான, www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
தங்களது மதிப்பெண்ணுக்கு ஏற்ப விருப்பமான கல்லுாரிகளில், விரும்பிய பாடப்பிரிவுகள் கிடைக்குமா என்பதை, கடந்த ஆண்டுகளின், ‘கட் ஆப்’ மதிப்பெண் அடிப்படையில் உத்தேசமாக கணக்கிடலாம்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான, ‘கட் ஆப்’ மதிப்பெண் விபரங்கள், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. அதை பார்த்து, முன்கூட்டியே கவுன்சிலிங்குக்கு தயாராகி கொள்ளவும்.
விருப்ப பதிவு மேற்கொள்ளும்போது, அதிக எண்ணிக்கையில் பாடங்கள் மற்றும் கல்லுாரிகளை பதிவு செய்ய வேண்டும். விருப்ப பாடப் பிரிவுகள் மற்றும் கல்லுாரிகளை, சரியான முன்னுரிமையுடன் வரிசைப்படுத்துவதிலும் கவனமாக இருக்க வேண்டும்.
வரிசைப்படுத்த தவறினால், மதிப்பெண் இருந்தும் சரியான பாடப்பிரிவு கிடைக்காத நிலை ஏற்படும். அதில் மாணவர்களும், பெற்றோரும் எச்சரிக்கையுடன் இருந்து, முன்கூட்டியே தங்களுக்கான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளை பட்டியலாக தயார் செய்து வைத்து கொள்வது மிகவும் உதவியாக இருக்கும்.
பதிவு செய்யப்பட்ட கல்லுாரிகள், பாடப்பிரிவு விபரங்களை பதிவிறக்கம் மற்றும் அச்செடுத்து வைத்து கொள்ளலாம்.
கல்லுாரிகளின் விபரங்கள், முந்தைய கட் ஆப் மதிப்பெண்கள், கல்லுாரிகளை பற்றிய தகவல்கள், கட்டண விபரம், பாடப்பிரிவுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும், கவுன்சிலிங் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
பாடப்பிரிவு தேர்வு செய்வதில் கவனம் தேவை
‘கம்ப்யூட்டர் சயின்ஸ்’ மட்டுமின்றி, ‘எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்’ படிப்புகளுக்கு, எதிர்கால வேலைவாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
இன்ஜினியரிங் படிப்பில் மாணவர்கள், தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. ஏனென்றால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு முடித்த மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது.
வரும் காலங்களில், ஏ.ஐ., என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முக்கிய இடத்தை பிடிக்க உள்ளது. அதற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்களுக்கு மட்டும்தான் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதில்லை. மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என, அடிப்படை பாடப்பிரிவு படித்த அனைவரும் இணைந்து தான், ஏ.ஐ., தொழில்நுட்பகங்களில் செயல்பட உள்ளனர்.
எனவே, சிறப்பு பாடங்களை தேர்வு செய்யாமல், அடிப்படை முக்கிய பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள்.
தேசிய அளவில், என்.பி.ஏ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரியின் பாடப்பிரிவில் சேருங்கள். வேலைவாய்ப்புக்கு ஏற்ற கூடுதல் பாடத்திட்டம் மற்றும் படிப்பை கற்றுத் தரும் தன்னாட்சி கல்லுாரிகளை தேர்வு செய்யுங்கள்.
கூடுதலாக, ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக் கொள்ளுங்கள். பாடத்திட்டத்தை தாண்டி, வேலைவாய்ப்பை அதிகரிக்கும் கூடுதல் பாடங்களை படிக்க வேண்டும். தற்போது, கவுன்சிலிங்கில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யும் முன், ஒரு வாரம் முன்பே திட்டமிட்டு கொள்ளுங்கள்.
எந்த பாடப்பிரிவு, எந்த கல்லுாரி, அதற்கான கவுன்சிலிங் குறியீட்டு எண்கள் என்னவென்று, பட்டியல் தயார் செய்து, கவுன்சிலிங்கில் ‘சாய்ஸ் பில்லிங்’ செய்தால், நினைத்த கல்லுாரி, நினைத்த பாடப்பிரிவில் சேர முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தனித்திறன் வளர்த்தால் எல்லா படிப்புக்கும் வேலை உண்டு!
”எந்த படிப்பை படித்தாலும், தனித்திறன்களை வளர்த்து கொண்டால், வேலைவாய்ப்புகள் உண்டு,” என, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவன தலைவர் ஸ்ரீராம் கூறினார்.
வழிகாட்டி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:
இன்ஜினியரிங் படிப்புகளில் மாணவர்கள் சேர்வது அதிகரித்துள்ளது. கிராமம் மற்றும் நகரம் என, எந்த பகுதியில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் படித்தாலும், அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உண்டு.
திறமையான இன்ஜினியரிங் பட்டதாரிகள் அனைவருக்கும், தொழில் நிறுவனங்கள் நல்ல சம்பளத்தில் வேலை தருகின்றன. டி.சி.எஸ்., போன்ற ‘கார்ப்பரேட்’ நிறுவனங்கள், நாடு முழுதும் ஒரே நாளில், ஆன்லைனில் நேர்முக தேர்வு நடத்தி, திறமையுள்ளவர்களை வேலைக்கு தேர்வு செய்கின்றன.
இன்ஜினியரிங் படிக்கும்போதே, சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, புதுமையான எண்ணங்களுடன் கண்டுபிடிப்புகளை உருவாக்குவது என, தனித்திறன்களை வளர்த்தால், அவர்களுக்கு அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தால் மட்டும் தான் வேலைவாய்ப்பு என்று நினைக்க வேண்டாம். மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் போன்ற படிப்புகளை படித்தாலும், அதிக சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
எதை படித்தாலும், தற்போதைய தொழில்நுட்பம், தொழிற்சாலையின் தேவைகளுக்கு ஏற்ற தனித்திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒதுக்கீட்டை உறுதி செய்வது கட்டாயம்
இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன் பேசியதாவது:
மாணவர்கள் தங்களுக்கான சுற்றில், ஆன்லைனில் விருப்ப பாடங்களை பதிவு செய்த பின், அவர்களது தரவரிசை மற்றும் கட் ஆப் மதிப்பெண்ணுக்கு ஏற்ப, தானியங்கி கணினி முறையில் இடங்கள் ஒதுக்கப்படும். ஒதுக்கப்பட்ட இடங்கள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே தெரிவிக்கப்படும்.
அதை பார்த்து, அந்த ஒதுக்கீடு வேண்டுமா அல்லது மாற்றம் உள்ளதா என்பதை, தங்களுக்கான பயனாளர் குறியீடு வழியே ஆன்லைனில், உறுதி செய்ய வேண்டியது கட்டாயம்.
இட ஒதுக்கீடு ஆணை கிடைத்ததும், கல்லுாரிகள் அல்லது சேவை மையங்களுக்கு சென்று, உரிய சான்றிதழ்களை தாக்கல் செய்து, கல்வி கட்டணம் செலுத்தி, ஐந்து நாட்களுக்குள் தங்கள் சேர்க்கையையும் உறுதி செய்ய வேண்டியது கட்டாயம். இல்லாவிட்டால், இடங்கள் உறுதியாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
![]()