பாடகி பல்குனியுடன் இணைந்து பிரதமர் எழுதிய பாடல் வெளியானது
சிறுதானியங்களின் பலன்கள் மற்றும் உலக அளவிலான பசியை போக்கக்கூடிய அதன் ஆற்றல் குறித்து விவரிக்கும் சிறப்பு பாடல் நேற்று வெளியானது. இதை, பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து, ‘கிராமி’ விருது வென்ற பாடகி பல்குனி ஷா எழுதி, பாடியுள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பாடகி பல்குனி ஷா. இவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த, ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் பாடல் பாடியுள்ளார்.
கடந்த 2000ம் ஆண்டு இவர் அமெரிக்கா சென்று குடியேறினார்.
அங்கு சர்வதேச இசையை கற்றவர், பல்வேறு பிரபல பாடகர்களின் இசை தொகுப்பில் பாடியுள்ளார். இவர் சொந்தமாகவும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகர் கவுரவ் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவரது, ‘ஏ கலர்புல் வேர்ல்ட்’ என்ற இசை ஆல்பம், குழந்தைகளுக்கான சிறந்த இசை ஆல்பம் பிரிவில் கடந்த ஆண்டு கிராமி விருது வென்றது.
இவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து, சிறுதானியங்களின் பலன்கள் மற்றும் உலக அளவிலான பசியை போக்கக்கூடிய அதன் ஆற்றல் குறித்து விவரிக்கும், ‘அபண்டன்ஸ் இன் மில்லட்ஸ்’ என்ற பாடலை தயாரித்துள்ளார்.
இது குறித்து பல்குனி ஷா கூறியதாவது:
கடந்த ஆண்டு கிராமி விருது வென்றதும், பிரதமர் மோடியை புதுடில்லியில் சந்தித்து ஆசி பெற்றேன்.
அப்போது, சிறுதானியங்களின் பலன்களை விவரிக்கும் பாடல் ஒன்றை நான் பாடி வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தை பிரதமர் வெளிப்படுத்தினார்.
அபரிமிதமான ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து உடைய சிறுதானியங்களை ஊக்குவிக்க இந்தியா விரும்புவதாக பிரதமர் தெரிவித்தார்.
அப்போது, எங்களுடன் இணைந்து அந்த பாடலை எழுத முடியுமா என, பிரதமரிடம் தயங்கியபடி கேட்டேன். அவர் உற்சாகமாக ஒப்புக்கொண்டார்.
பாடலின் நடுவே, பிரதமர் மோடியின் பேச்சு இடம் பெறும். அதையும் அவரே எழுதி பேசியுள்ளார்.
இந்தியாவின் பரிந்துரையை ஏற்று, 2023ம் ஆண்டை, சிறுதானிய ஆண்டாக ஐ.நா., சபை அறிவித்துள்ள நேரத்தில் இந்த பாடலை தயாரித்ததில் பெருமை அடைகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் வெளியாகி உள்ள இந்த பாடல், நேற்று வெளியிடப்பட்டது.
![]()