கட்டுரைகள்

வளரும் எழுத்தாளர்களுக்கு….. சிறுகதை எழுதுவது எப்படி?…. பா. ராகவன்… தமிழ்நாடு.

“பழைய பெட்டிகளைக் கொஞ்சம் குடைந்துகொண்டிருந்தேன். எழுத ஆரம்பித்து அதிசுமார் 20 கதைகள் வரை பிரசுரமாகியிருந்த தொண்ணூறுகளின் முற்பகுதியில் எனக்கான சிறுகதை இலக்கணம் என்று ஒரு பத்திருபது பாயிண்டுகள் எழுதிவைத்தேன். இப்போது தற்செயலாக அகப்பட்ட அந்தக் குறிப்புகளை இங்கே போடலாம் என்று தோன்றியது. காப்பிரைட் என்னுடையது அல்ல. யார்யாரோ சொன்னதன் தொகுப்பு அல்லது திரட்டு அல்லது திருட்டு.”

1. கையெழுத்துப்பிரதியாக 5 பக்கங்களுக்கு மேல் ஒரு சிறுகதை வளராமல் பார்த்துக்கொள்.(பெரும்பாலான சப் எடிட்டர்களுக்கு இது விஷயத்தில் பொறுமை இருப்பதில்லை)

2. தன்மை ஒருமையில் ஒரு டிராப்ட் எழுதிக்கொண்டு பிறகு அதை தேர்ட் பர்சனுக்கு மாற்றி எழுதுவது நல்லது. “நான்” என்று தொடங்கி எழுதும்போதுதான் கதையில் ஒரு உயிர்ப்பு வருகிறது.

ஆனால் கதைக்கு நான் கூடாது என்பதால் எழுதிவிட்டு அவனாக்கிக் கொள்வது பெட்டர்.

3. ஒரு செண்டன்ஸில் நாலைந்து சொற்களுக்கு மேல் கூடாது.

4. நாலு பேராவுக்கு ஒரு வர்ணனை வை. பெண்ணையோ, பேயையோ உன்னையோ எதையாவது ரெண்டு வரி வருணிப்பதன் மூலம் கொஞ்சம் வாசனை கூடுகிறது.

5. கதாபாத்திரம் ஒரு அலைவரிசையில் இயங்கிக்கொண்டிருக்கும்போது நீ குறுக்கே மூக்கு நுழைக்காதே. கதாபாத்திரத்தின் கருத்துடன் உன்னுடையது ஒத்துப்போகாவிட்டால் ஒன்றும் கொலைபாதகம் இல்லை.

6. கூடியவரை சிறுகதையில் காலம் காட்டாதே. அதாவது மணி, நாள், மாதம், வருஷமெல்லாம் வேண்டாம். உணர்ச்சிகளை முக்கியப்படுத்து. தேவையானபோது மட்டும் சம்பவங்கள்.

7. செகண்ட் பர்சனில் கதை எழுதிப்பழகு. அது தொழில்நுட்பத் தேர்ச்சி தரும்.

8. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கி.ரா., இவர்களெல்லாம் சிறுகதையில் மிகவும் சாதித்தவர்கள் என்பார்கள். ஆனால் உனக்கு உதவாது. ஆரம்பத்தில் நீ பின்பற்றவேண்டியவர்கள் ஜானகிராமன், சுஜாதா, ஆதவன், சுப்ரமணியராஜு, சுந்தரராமசாமி ஆகியோர் மட்டுமே.

9. ஒரு போதும் முழுக்கதையை முடிவு செய்துவிட்டு எழுதத் தொடங்காதே. உனக்கு அந்த உரிமை இல்லை. முதல் வரிக்கு மட்டும் முயற்சி செய். கதை தன்னை உற்பத்தி செய்துகொள்ளும்.

10.சிறு சிறு விவரங்கள் சிறுகதைக்கு முக்கியம். ஒரு கதையில் ஆள், உயரம்,வசனை,நடை, நாற்றம்,லே அவுட், மேனரிசம், கோபம், புன்னகை,அழுகை, துடிப்பு, வேகம்,சூழல், செயல், செயலின்மை, பேச்சு, மௌனம் இதெல்லாம் வரவேண்டும்; தெரியவேண்டும்.

11. வசனங்கள் கூடியவரை குறைவாக இருக்கவேண்டும். வசனம் என்பது நாடகத்தின் கருவி. சிறுகதைக்கு மௌனமே சிறப்பு.

12. ஒரு கதை எழுதுமுன் ஒரு நல்ல கதையைப் படி. உனக்கு உகந்தது, அசோகமித்திரனின் மகா ஒற்றன், ஆதவனின் கருப்பாக, உயரமாக…, லா.ச.ரா.வின் த்வனி. இந்த சமயத்தில் தி.ஜாவையோ சுஜாதாவையோ தொடாதே. வாசனை ஒட்டிக்கொள்ளும்.

(“திண்ணை”யில் இருந்து: சிவப்பாக, உயரமாக, மீசை வச்சுக்காமல் – 1 : ஆதவன்

13. எழுதி முடித்ததும் கடைசியிலிருந்து வெட்டிக்கொண்டு வா.(வரிவரியாக.)

14. மிரட்டும் சொற்கள் வேண்டாம். எளிமையே ஆபரணம்.

15. ஒவ்வொரு கதை எழுதி முடிக்க முடிந்ததும் கடவுளுக்கு நன்றி சொல்லு.

பி.கு: இவையெல்லாம் என்க்கு நானே சொல்லிக்கொண்டவை. இன்றுவரை, அநேகமாக அனைத்து ரூல்களையும் பின்பற்றுகிறேன்.யாருக்காவது உபயோகப்படுமானால் சந்தோஷம்.

சாண்டில்யன்

எழுதுவது எப்படி என்பதனைப் பற்றி சாண்டில்யன் கட்டுரை:

நல்ல எழுத்துக்கு வேண்டியது : முதலில் உணர்ச்சி வேகம். இரண்டாவது ஆழ்ந்த படிப்பு.

எழுத முற்படுவோர், தாங்கள் எழுதவேண்டியது அவசியந்தானா? அதற்கான வேட்கை, உணர்ச்சி வேகம் இயற்கையாக இருக்கின்றனவா என்பதை யோசித்துக்கொள்ளவேண்டும்.

இரண்டாவதாக, தங்களுக்கு ஆழ்ந்த படிப்பு இருக்கிறதா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இல்லையென்று தோன்றும் பட்சத்தில், படிக்கவும் முயலவேண்டும். கற்பனை தானாக ஊறிவிடுமென்பது வீண் பிரமை.

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி, மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் கல்வி”, என்று தெய்வத் திருவள்ளுவரே கூறியிருக்கிறார்.

நல்ல கதைக்கோப்பும், கதை வேகமும், சொல்லாட்சியுமுள்ள கதை எத்தனை பெரிதாயிருந்தாலும் மக்கள் அதனைப் படிப்பார்கள். இந்த அம்சங்கள் இல்லாத கதை, எத்தனைச் சிறியதாக இருந்தாலும் மக்களின் மனத்தை ஆட்கொள்ளமுடியாது.

கற்பனைச்செறிவும், இயற்கையையும் வாழ்க்கையையும் ஊன்றிப்பார்க்கும் திறனும் இருந்தால், உவமைகள் உங்கள் பேனாவின் மையில் தானாகப் பிரவாகமாகிவிடும்.

– சாண்டில்யனின் ‘நாவல் எழுதுவது எப்படி?’ (சில பகுதிகள்)

சுந்தர ராமசாமி

“திண்ணை”யில் இருந்து: “ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை: சுந்தர ராமசாமி”

என்னுடைய முதல்பட்சமான அக்கறைகள் வாழ்க்கையைப் பற்றியவை. இந்த அக்கறைகளைச் சார்ந்துதான் இலக்கியப் படைப்புக்கள் உருவாகின்றன. ஆக, ஒரு இலக்கியப் படைப்பாளி என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி, வாழ்க்கையைப் படைப்புக் கண்ணோடு பார்க்க விரும்புகிறவன் என்று எடுத்துக் கொள்ளும் போதும் சரி முதல்பட்சமாக நான் ஒரு வாசகனாக இருப்பதையே உணருகிறேன்.

நம்முடன் உரையாட வந்தவர்கள் ஏதோ சாதாரண விஷயங்களைப் பற்றி நம்மிடம் சொல்வதில்லை. அவர்களுடைய வாழ்க்கைக் கண்ணோட்டத்தில் மிகச் சாரமான பகுதியை – மிக மேலான பகுதியை – அதிக அளவிற்குப் பொருட்படுத்தத் தகுந்த பகுதியைப்பற்றியே நம்மிடம் பேசுகிறார்கள்…எல்லா சிறந்த எழுத்தாளரையும் நாம் இருக்குமிடத்திலிருந்தே சந்திக்க முடியும். இந்தப் பெரிய வாய்ப்பை எண்ணி எவன் புளகாங்கிதப்படுகிறானோ அவனைத்தான் நான் சிறந்த வாசகன் என்று கருதுகிறேன்.

துறை சார்ந்த சமாளிப்பு என்பது ஒன்று; இந்தத் துறை சார்ந்த வல்லமை என்பது மற்றொன்று. பெரும்பாலும் எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் – அது வைத்தியமாக இருக்கலாம், அல்லது பொறியியலாக இருக்கலாம் – அல்லது வணிகமாக இருக்கலாம் அல்லது சட்டமாக இருக்கலாம்.

“அந்த துறையைச் சேர்ந்தவர்கள் அதிக அளவுக்கு அந்தந்த துறையைச் சார்ந்த உத்திகள், பந்தாக்கள், சொற்றொடர்கள் ஆகியவற்றைக் கற்று, அதில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் போன்ற பாவனையைப் பிறரிடம் உருவாக்கி அதன் மூலம் வாழ்க்கையைச் சமாளித்துக் கொண்டிருக்கக்கூடிய கோலத்தைத்தான் அதிக அளவில் பார்க்க முடிகிறது.”

முக்கியமாக இன்று நான்கு விஷயங்களை நான் உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வர விரும்பினேன். ஒன்று வாசிப்பு சம்பந்தபட்ட விஷயம்; மற்றொன்று உங்களுக்கு உகந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்தத் துறையில் நீங்கள் போதிய திறமை பெற்று நம்பிக்கையுடன்

வாழ்க்கையை எதிர்கொள்ளக்கூடிய விஷயம். மூன்றாவது தாழ்வு மனப்பான்மை என்று நான் நம்பக்கூடிய நோயிலிருந்து முற்றாக விடுதலை பெறுவதற்கான வழிகள். நான்காவது இந்திய வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையைச் சார்ந்தோ, தமிழக வாழ்க்கையை எதிர்கொள்ளுவதன் மூலம் நமக்குச் சொந்தமான, சுயமான கண்ணோட்டங்களை நாம் உருவாக்கி கொள்ளக்கூடிய முயற்சி. இந்த நான்கு கருத்துக்களையும் விவாதத்திற்காக உங்கள் முன் வைக்கிறேன்.

மெலட்டூர்.இரா.நடராஜன்

முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன். தயவு செய்து நான் சொல்லுவதுதான் இலக்கணம் என்று எண்ணிவிட வேண்டாம். எனது அனுபவத்தில், நான் என்னை செம்மைப்படுத்திக் கொள்ள, முட்டி மோதி அறிந்து கொண்டதை, புரிந்து கொண்டதை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அவ்வளவே. ஒரு சிலருக்காவது பயண்பட்டால் அது என் பாக்கியமே.

எது நல்ல சிறுகதை என்று யாராலும் அறுதியிட்டு சொல்லமுடியாது. அதனால்தான் என்னவோ, முதல் பரிசு பெற்ற சிறுகதை நமக்கு மொக்கையாக தெரியலாம். ஆறுதல் பரிசு பெற்ற கதை முதல் பரிசுக்கு உரியதாக இருக்கலாம். ஆனால் ஒன்று. ஒரு சிறுகதை, நம் உள் வட்ட நண்பர்களை, உறவினர்களை தாண்டி, ஒரு சிலரையேனும் திருப்தி படுத்திவிட்டது என்றால் அது நமக்கு வெற்றியே. அந்த பெருவாரியான ரசிப்புத்தன்மையை நோக்கியே ஒரு எழுத்தாளன் இயங்க வேண்டும்.

1. சிறுகதை என்பது ஒரு சிறு நிகழ்வு. எனவே இதில் நாம் எடுத்துக் கொள்வது ஒரு சிறிய சம்பவமாக இருக்கட்டும். அதை மையமாக வைத்து முன்னே பிளாஷ்பேக் சேர்த்து, பின் பகுதியில் முடிவைச் சொல்லி கதை செய்யலாம். மாதங்கள், வருடங்கள் என்றெல்லாம் உருட்ட தேவையில்லை.

2. கதைக்கு தொடக்க வார்த்தைகள் மிக மிக அவசியம். இவைகள்தான் வாசகர்களை படிக்க தூண்டுபவை. எனவே நேரடியாக கதைக்கு சம்பந்தமான விஷயங்களை கொண்டுவந்துவிடுதல் நல்லது. ஒரு நல்ல தொடக்கம், பாதி முடிவை எட்டும் என்று ஒரு பேச்சு இருக்கிறது. இன்றைய உலகம் அவசர உலகம். கதையை படிப்பதற்கு முன்னால் எவ்வளவு பக்கம் என்று பார்க்கும் மனப்பாண்மை கொண்டது. எனவே குழப்பமில்லாமல், ஜெட் வேகத்தில் சுறு சுறுவென தொடங்கும் கதை நிச்சயம் படிக்கப்படும்.

3. சிறுகதையில் எந்தவித தேவையில்லாத வார்த்தைகள் இருக்கக் கூடாது. இந்த ஒரு வரியை எடுத்துவிடுவதால் கதை விழுந்துவிடும் என்ற அளவுக்கு வார்த்தை சிக்கனம் வேண்டும். கதையை எழுதியவுடன் ஒரு வெளி ஆசாமியாக இருந்து தானே படிக்கும் போது அதிகப்படியானவை பளிச்சென்று தெரிந்துவிடும்.

4. கதை சொல்லும் வார்த்தைகளில் ஒரு ரசிப்புத் தன்மை இருக்க வேண்டும். அந்த வார்த்தைகளை படிக்கும் வாசகனை அது எந்த விதத்திலாவது பாதிக்க வேண்டும். வார்த்தைகளில் உள்ள ஜாலம்தான் உங்களுக்கு ஒரு முத்திரையை அளிக்கிறது. எனவே மேம்போக்காக எழுதாமல், ஒரு சிற்பக் கலைஞன் சிற்பம் செதுக்குவது மாதிரி வார்த்தைகளை கையாளுங்கள்.

5. நடுநடுவே வரும் வசனங்கள் பளிச் பளிச் என்று ஆணித்தரமாக இருக்க வேண்டும். அது கதையின் ஓட்டத்தை தீர்மாணிப்பதாக இருக்க வேண்டும்.வெட்டியாக வரும் வசனங்கள் வாசகனை வெறுப்பேற்றும்.

6. முடிவு நெத்தியடியாக இருக்க வேண்டும். அந்த வரியை படித்ததும், வாசகன் ‘அட!’ என்று வியக்க வேண்டும். அவன் திருப்தியுடன் ஒரு புன்னகை செய்தால் அது உங்களுடைய வெற்றி.

7. கதை எழுதுவதற்கு முன்னால் அதை பகுதி பகுதியாக பிரித்து ஒவ்வொன்றிலும் என்ன சொல்லப் போகிறோம், அவைகள் சீராக இருக்கின்றனவா என்று மனசுக்குள் ஒரு காட்சி மாதிரி ஓடவிட்டு பார்த்துவிட்டு எழுத உட்கார்ந்தால் நல்லது.

8. ஒரு கதைக்கான கரு கிடைத்துவிட்டால், அதை மனசுக்குள் கொஞ்ச நாட்கள் உருட்டிக் கொண்டே இருங்கள். அது சம்பந்தமாக விவரங்கள், விவரனைகள், தர்க வாதங்கள், உங்களின் அனுமானங்கள் ஆகியனவற்றை அலசி செம்மை படுத்துங்கள்.

9. இன்றைய பத்திரிக்கை உலகில் சிறுகதைகள் என்பது A4 சைஸ் பேப்பரில் எழுத்துரு 10ல் இரண்டரை பக்கங்களுக்கு மிக கூடாது. புதிய எழுத்தாளர்கள், தங்களின் கையெழுத்து மிக தெளிவாக இருந்தால் மட்டுமே, கையிலால் எழுதி அனுப்பலாம். கொஞ்சம் மோசமான கையெழுத்து கொண்டவர்கள் கம்ப்யூட்டரில் அடித்து அனுப்புவது நல்லது. தற்போதைய சூழலில் பொறுமையாக படிக்க ஆளில்லை.

10. கதைக்கான களம் மிகவும் வித்தியானமானதாக இருந்தால் மிக நல்லது. மண்வாசனை கொண்ட கதைகளுக்கு என்றுமே மரியாதை உண்டு. அதற்காக வாசகர்களை ரொம்ப கஷ்டப்படுத்தக் கூடாது. புதிய கோணத்தில் கதை சொல்லுவது ஜெயிக்கும் குதிரையில் பணம் கட்டுவது மாதிரி.

11. முதலில் உங்கள் கதை ஒரு பத்திரிக்கையால் நிராகரிப்பட்டால் அதை முழுவதுமாக ஏற்றுக் கொள்ளுங்கள். வளரும் எழுத்தாளருக்கு எதிர்மறை விமர்சனங்களை பண்புடன் எற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். ஏன் இந்தக் கதை அவர்களை திருப்தி படுத்தவில்லை? என்ற கேள்வி போட்டு ஆராயுங்கள். அந்த பத்திரிக்கையில் வரும் கதைகளின் போக்கை கவனியுங்கள். அவர்களின் மன ஓட்டம் புரியும். அதற்கு ஒத்துப்போக முடிந்தால் நல்லது. இன்லையேல்லை அதை விட்டுவிட்டு வேறு பத்திரிக்கையை பாருங்கள்.

12. ஒரு கதை நிராகரிப்பட்டததும், அதை மாற்றி எழுத சோம்பல் படவே கூடாது. எனது பல சிறுகதைகள், மாற்றி எழுதப்பட்டு, வேறு பத்திரிக்கைகளில் வெளியாகி இருக்கின்றன.

13. கதை எழுதுவதற்கு மிக அடித்தளமாக இருப்பது அப்ஸர்வேஷன். நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை உண்ணிப்பாக கவனியுங்கள். ஒரு குடிகாரனை பற்றி எழுதினீர்களானால், அவன் இயல்பை ரசிப்புத்தன்மையோடு எழுதுங்கள். வண்ணதாசன், சுஜாதா, இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்களின் எழுத்துக்களை படியுங்கள். அவர்கள் எப்படி எழுத்துக்களை நகர்த்துகிறார்கள் என்பது புரியும். கதை படிக்கும் போது எழுத்துக்கள், ஆடி வரும் தேர் மாதிரி மனசை கொள்ளை கொள்ள வேண்டும்.

14. கதையில் ஒரு இடத்தைப் பற்றியோ அல்லது டெக்னிகலான விஷயங்கள் பற்றியோ எழுதப்போகிறீர்கள் என்றால் அதை பற்றி விலாவாரியாக படியுங்கள். அதன் பிறகு எழுதினால், அதன் உண்மைத்தண்மை வாசகர்களை ஈர்க்கும். வாசகனின் தேடுதல் வேட்க்கையை நீங்கள்தான் தீர்க்க வேண்டும்.

15. கூடுமானவரை உங்களது அனுபவங்களை, நீங்கள் பார்த்ததை, எழுத்தில் கொண்டுவாருங்கள். அதை அப்படியே நேரடியாக எழுதாமல் உங்கள் கற்பனையை ஓடவிட்டு, ஒட்டு சேருங்கள். ஆண் சம்பந்தப்பட்டதை பெண் ஆக்குங்கள். ஒரிஜினல் சித்தப்பாவை கதையில் மாமாவாக்குங்கள். அவர்கள் கதையை அப்படியே எழுதினால் பல் பிரச்சனைகள் பின்னால் எழலாம். தவிர, உங்களது தனித்தன்மை அடிப்பட்டு போய்விடும்.

16. ஒவ்வொரு பத்திரிக்கைக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. குமுதத்திலும், குங்குமத்திலும் கொஞ்சம் விலங்கமான/லைட்டான கதைகள் எழுதலாம். கல்கியில் அதை செய்யமுடியாது. ஆனந்தவிகடனில் இதுவரை எழுதப்படாத புதிய களன்களில், புதிய கோணத்தில் எழுதப்பட்ட கதையை வரவேற்ப்பார்கள். ஒவ்வொரு பாராவிலும் வார்த்தை நயம் அவசியம் இருக்க வேண்டும். பெண்கள் பத்திரிக்கையில் குடும்ப பிரச்சனைகளை அலசும் கதைகள் வரவேற்கப்படும்.

17. கதையை எழுதி முடித்தவுடன், உங்கள் நண்பர் குழுவில் எந்தவித சங்கோஜமும் இல்லாமல் நேரடியாக விமர்சனம் செய்யும் ஒருவரிடம் கொடுத்து படிக்கச் சொல்லுங்கள். ஒரு வாசகனாக அவருக்கு வரும் சந்தேகங்களை குறித்துக் கொண்டு அதை நிவர்த்தி செய்யுங்கள்.

18. ஒரு கதைக்கான கரு நேரடியாக கிடைக்காது. ஒரு நிகழ்வின் தாக்கம்தான் ஒரு கதைக்கான கருவாக இருக்கமுடியும். ஒரு முறை, சிக்னலில் ஸ்கூட்டரின் பின் சீட்டில் அம்மாவின் தோளில் தலை தொங்கி தூங்கிக் கொண்டிருந்த குழந்தை ஒன்றை பார்த்தேன். அதை வைத்து சின்னு என்ற சிறுகதையை எழுதினேன். குங்குமத்தில் வந்தது. ராஜேஷ்குமாரன் நிறைய க்ரைம் கதைகளுக்கு தினசரிகளே அதிகம் உதவுவதாக ஒரு முறை சொல்லியிருக்கிறார்.

19. எழுத எழுததான் வார்த்தைகள் வசப்படும். எனவே நிறைய எழுதுங்கள். அதற்காக நிறைய படியுங்கள். வார்த்தைகளை கொட்டித்தள்ளாமல் அம்மா கைமுறுக்கு சுற்றுவது மாதிரி நிதானமாக கையாளுங்கள். ஒரு அரை மணிநேர கச்சேரிக்கு பின்னால் ஒரு நூறு மணிநேர உழைப்பு இருக்கும். எனவே பலமுறை அடித்து திருத்தி மாற்றியமைத்து உங்கள் மனசுக்கு திருப்தியாகும் வரை முயற்சி செய்யுங்கள்.

20. ஒரு கதையின் நீளத்தை அந்த கதைதான் தீர்மானிக்க வேண்டும். ஒரு பக்க கதைக்கான விஷயத்தை வைத்துக் கொண்டு டி.வி.சீரியல் மாதிரி மூன்று பக்கங்களுக்கு இழுக்காதீர்கள். உங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங் விழுந்துவிடும். உங்களை மிகவும் கவர்ந்த ஒரு சில வார்த்தைகள், பாராக்கள்,நீங்கள் கதையில் சேர்த்திருப்பீர்கள். அது கதையின் போக்குக்கு அதிகப்படியாக இருக்குமானால், யோசிக்காமல் வெட்டித்தள்ளுங்கள்.

என்ன, சரிதானே. புறப்படுங்கள்

கு.அழகிரிசாமி

சிறுகதைகள் குறுகிய காலத்தில் படித்து முடிப்பதற்காகவே தோன்றின; எனினும். அது ஒன்று மட்டுமே அவற்றின் இலக்கணமாகிவிடவில்லை. இலக்கியம் பல பிரிவுகளை உடையது: ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வடிவம் உண்டு; தனித்தனியே சில இலக்கணங்கள் உள்ளன. எனவே. குறுகிய காலத்தில் படித்து முடிக்கக்ó கூடியது. என்பது சிறுகதைகளின் வெளி வடிவ அமைப்புக்குரிய இலக்கணமேயன்றி. அதன் உள்ளமைப்புக்குரிய இலக்கணங்கள் வேறு. இந்த இருவகை அமைப்புகளுக்கும் உரிய இலக்கணங்களை ஒன்று சேர்த்து. ஸாமர்ஸட் மாம் என்ற மேலை நாட்டுச் சிறுகதை ஆசிரியர் கூறுகிறார்:

“சிறந்த சிறுகதையில் நல்ல கதையம்சம் இருக்க வேண்டும். அது ஏதாவது ஒரு நிகழ்ச்சியை மட்டுமே விவரிப்பதாக இருக்க வேண்டும். ஒரு மூச்சில் படித்து முடிக்கக்கூடியதாக அதை அமைக்க வேண்டும். அது தனக்கென ஒரு தனிப்பண்பைக் கொண்டிருக்க வேண்டும். படிப்போர் மனத்தில் ஆழப் பதிந்து கிளுகிளுப்பை ஏற்படுத்த வேண்டும். ஆரம்பத்திறீருந்து முடிவு வரையில் தொய்வின்றி ஒரே சீராகச் செல்ல வேண்டும்.”– ஸாமர்ஸட் மாம்

“சிறுகதை என்பது இலக்கியத்தில் ஒரு பகுதி; இலக்கியத்தின் ஒரு வடிவம். இலக்கியம் என்பது ஒரு கலை. கலையைப் படைப்பது படைப்புத்திறன். படைப்புத்திறனை ஒருவன் இன்னொருவனுக்குக் கற்பிக்க முடியது; ஒருவனிடமிருந்து இன்னொருவன் கற்றுக்கொள்ளவும் முடியாது. அப்படிக்

கற்பிக்க முடியாமலும் கற்றுக்கொள்ள முடியாமலும் இருப்பதுதான் படைப்புத்திறன்.

படைப்புத்திறனைக் கற்பிக்க முடியாதா? இது என்ன புதிர்? என்று சிலர் ஆச்சரியப்படலாம். ஆம்! அதைக் கற்பிக்க முடியாதுதான். விருத்தப்பாவை இயற்றுவது எப்படி என்று ஒருவன் மற்றொருவனுக்குக் கற்பிக்கலாம். கற்றுக் கொண்டவன் விருத்தப்பாவை இயற்றிவிடலாம். ஆனால் அந்த விருத்தப்பா ஒரு கலைப்படைப்பாக. ஒரு சிறந்த கவிதையாக அமைவது. இயற்றியவரின் திறமையைப் பொறுத்த விஷயம். உலகில் எல்லா நாடுகளிலும் கோடிக் கணக்கானவர்கள் இலக்கிய இலக்கணங்களைக் கற்றிருக்கிறார்கள். ஆனால் கவிஞர்கள்

கோடிக்கணக்கில் இருக்கவில்லை. கம்பர். ஷேக்ஸ்பியர். காளிதாசர். தாந்தே என்று ஒரு சிலவரைத் தான் மகாகவிகள் என்று சொல்கிறோம். அந்த மகாகவிகள் மற்றவர்களிடம் இலக்கணத்தையும். இலக்கியத்தையும். அதன் நயங்களையும்தான் கற்றுக்கொண்டார்களே ஒழிய படைப்புத் திறனைக் கற்கவில்லை.

கதையின் மையமான அம்சமே. அதன் கருவே. கதையின் உருவத்தையும். நடையையும் நிர்ணயிக்கக்கூடியதாகும். எனவே கதையின் சிறப்புக்கு மூலகாரணமாக இருப்பது அதன் கருதான். கருவில் திரு இல்லையென்றால். கதையிலும் வளம் இராது. எனவே கரு பலமானதாக இருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளவேண்டும். அடுத்தபடி அந்தக் கருவுக்கு கொடுக்கப்பட்ட கதை – உருவம் – சரிதானா என்று பார்க்கவேண்டியது அவசியம். அந்த உருவத்தில் கதையின் கரு சிறப்பாக முழு வளர்ச்சி பெற்று. கதைக்குச் சிறப்பைக் கொடுக்கிறதா. அல்லது வேறொரு உருவில் கதையை எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருக்குமா என்று கவனிக்கவேண்டும். எழுதப்பட்ட கதைக்குக் கொடுக்கப்பட்ட உருவத்தைவிட. வேறோர் உருவம் நன்றாக இருக்குமென்று தோன்றினால் அந்த உருவத்தில் எழுதவேண்டும். இதற்கு. உருவத்தைப் பற்றிய உணர்வு எழுத்தாளனுக்கு இருக்கவேண்டியது அவசியம். உருவம் என்றால் என்ன? மையக்

கருத்தைக் கச்சிதமாகவும். குன்றாமலும். குறையாமலும் சரியான இடத்தில் தொடங்கிச் சரியான இடத்தில் முடிப்பது உருவத்திற்கு மேற்போக்கான ஒரு விளக்கமாகும்.

வேண்டாத விளக்கங்களோ. வர்ணனைகளோ இருக்கக்கூடாது. வேண்டிய விளக்கங்களும். வர்ணனைகளும் இல்லாமல் போய்விடவும் கூடாது. உருவம் அமைவதற்கு இன்றியமையாத விஷயங்கள் இவை. கதையில் சில பகுதிகளைக் குறைத்து விட்டால் உருவம் கெடாது. அல்லது உருவம் அமையும். அல்லது உருவம் இன்னும் கச்சிதமாக அமையும் என்று தோன்றினால் அந்தப் பகுதிகளைக் குறைத்துவிட வேண்டும். சொல்லப்போனால். ஒரு சிறுகதையில் தேவையில்லாமல் ஒரு பகுதி மட்டுமல்ல. ஒரு வார்த்தையோ.

ஒரு காற்புள்ளியோ (‘கமா’) கூட இருக்கக்கூடாது. இருந்தால் அந்த அளவுக்கு அது கதைக்குக் கேடு செய்யும்.

கதையின் கருத்தும். உருவமும். நடையும் சிறப்பாக இருப்பதுடன். தங்குதடையற்ற ஓட்டமும் இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும். கதையை அந்தரத்தில் நிறுத்தி வைக்கும் எந்த அற்புத வியாக்கியானமும் சரி. வர்ணனையும் சரி கதைக்கு அறவே ஆகாத விஷயம் என்று கொள்ளவேண்டும்.

கடைசியாகச் சில முக்கிய கருத்துகள் பின்வருமாறு:

1. சிறு கதை எழுதுகிறவன் வாழ் நாளெல்லாம் மற்றவர்களுடைய சிறுகதைகளைப் படித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

2. சிறுகதைகளோடு. காவியம். நாவல். நாடகம் போன்ற இலக்கியங்களையும். உலக அனுபவங்களையும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்.

3. தான் காண்கிற. கேட்கிற. படிக்கிற. அனுபவிக்கிற ஒவ்வொன்றினுடைய உண்மையையும் சாரத்தையும் கண்டறிவதற்கு முயலவேண்டும்.

4. இலக்கியங்களைப் படிப்பதோடு. இலக்கிய விமர்சனங்களையும் படிக்க வேண்டும்.

5. பிறர் செய்யாத ஒரு காரியத்தை அல்லது ஒரு புதுமையைச் சாதிப்பதற்கு மட்டும்தான் சிறுகதை எழுத வேண்டும்.

6. சொந்தப் புத்தியை உபயோகிக்காமல் பிறர் கருத்தை அப்படியே ஏற்கும் கண்மூடித்தனமோ அல்லது அலட்சியமாக உதாசீனம் செய்யும் அகம்பாவமோ கூடவே கூடாது.

7. எழுதும் பயிற்சியை நிரந்தரமாக வைத்துக்கொள்ள வேண்டும். நீண்ட காலம் எழுதாமல் நிறுத்திவைப்பது தவறு. எழுத எழுதத்தான் எழுத்து சிறக்கும். ’சித்திரமும் கைப்பழக்கம்’ என்பது

போல். எழுத்துச் சித்திரமும் கைப்பழக்கத்தால் தான் சிறக்கும்.

8. நடைமுறை வாழ்க்கையை ஆதாரமாக வைத்து எழுதும் கதைகளில் நடக்கமுடியாத சம்பவங்களையும். காண முடியாத பாத்திரங்களையும். கேள்விப்படாத பெயர்களையும் புகுத்தவே கூடாது.

தமிழ் எழுத்துலகின் மூத்த எழுத்தாளர்கள் சொன்னவற்றை சொல்லிவிட்டேன். அவற்றில் பொதிந்துள்ள முத்துக்களை நீங்கள் கண்டெடுத்து கையில் பொத்திக்கொள்ளுங்கள்.

இனி நவீன இலக்கியத்தின் பிதாமகன்களில் ஒருவரான ஜெயமோகன் சொல்வதை கேட்போமா?

எழுத்தாளர் ஜெயமோகன்

சிறுகதை என்றால் என்ன?

‘சிறுகதை’ என்ற சொல் short story என்ற ஆங்கிலச் சொல்லின் மொழிபெயர்ப்பு. இச்சொல்லை வைத்து சிறுகதை என்ற வடிவததை புரிந்துகொள்ளக் கூடாது. இது சிறுகதை என்ற வடிவம் உருவாகி வந்த ஆரம்ப நாட்களில் போடப்பட்ட ஒரு பொதுப்பெயர் மட்டுமே.

அதாவது சிறுகதை என்றால் ‘சிறிய கதை’அல்ல. எல்லா சிறிய கதைகளும் சிறுகதைகள் அல்ல. சிறுகதை என்பது ஒரு தனித்த இலக்கிய வடிவம். அதற்கு தனியான வடிவச்சிறப்புகள் உண்டு.

சிறிய கதைகள் பலவகை. உதாரணகதைகள் நீதிக்கதைகள், உருவகக் கதைகள், நிகழ்ச்சித்துணுக்குகள் எல்லாமே சிறிய கதைகள்தான்.

பள்ளியில் காக்கா வடை சுட்டது போன்ற நீதிக்கதைகளை நாம் படித்திருப்போம். ஏசுகிறிஸ்து, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்கள் நிறைய உதாரணக் கதைகளை சொல்லியிருக்கிறார்கள். பஞ்சதந்திரக் கதைகள் ஈசாப் குட்டிக்கதைகள் போல பலவகையான உருவகக் கதைகளை நாம் கேட்டிருபோம்.

இவை ஏதும் ‘சிறுகதை’கள் அல்ல.

புதுமைப்பித்தன் முதல் சுஜாதா வரையிலான எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகளுக்கும் இவற்றுக்கும் முக்கியமான ஒரு வேறுபாடுகள் உண்டு. அதுதான் சிறுகதையின் அடையாளம்.

அது என்ன?

அதை கதையின் முடிப்பில் உள்ள ‘திருப்பம்’ என்று சொல்லலாம். இதை ஆங்கிலத்தில் ‘twist’ என்று சொல்கிறார்கள்.

அதாவது ஒரு சிறிய கதையை சிறு கதையாக ஆக்குவது திருப்பம்தான். ‘சிறுகதை என்றால் இறுதியில் திருப்பம் உள்ள சிறிய கதை’ என்று எளிமையாக வரையறை செய்யலாம்.

சிறுகதையின் இலக்கணவடிவம் என்ன?

சிறுகதையின் வடிவத்துக்கு ஐந்து அடிப்படைகள் உண்டு என்பது மரபான இலக்கணமாகும்

1. சிறுகதையின் ‘உடல்’ ஒருமை கொண்டதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களே அதில் இருக்காது. அது நேராக ஒரு முடிவை நோக்கிச் செல்லும்.

2. சிறுகதையின் முடிவு வாசகன் ஊகித்திராத ஒன்றாக இருக்கும். இதுவே ‘திருப்பம்’ என்பது. சிறுகதையின் மையம் என்பது திருப்பத்திலேயே உள்ளது.

3. திருப்பம் நிகழ்வது வாழ்க்கையின் ஒரு புள்ளியிஉள்ளது.லேயே. ஆகவே சிறுகதை வாழ்க்கையின் ‘ ஒரே ஒருபுள்ளியை’ மட்டுமே எடுத்துக் கொள்ள முடியும். சிறுகதை ‘ஒன்றை மட்டுமே சொல்லக்கூடிய ‘ இலக்கிய வடிவம். திருப்பம் மூலம் வெளிப்படும் அந்த மையத்தைதவிர வேறு எதை அது சொல்ல தொடங்கினாலும் கதை சிதறி ,ஒருமை இல்லாமலாகும்

4. சிறுகதை வாசகனிடம் எதையாவது சொல்வதற்காக உருவான வடிவம் அல்ல. வாசகனை கதையில் பங்கெடுக்க வைப்பதற்காக உருவான வடிவம். வாசகனை எந்த அளவுக்கு கற்பனைசெய்ய வைக்கிறதோ அந்த அளவுக்கு சிறுகதை வெற்றி பெறுகிறது. சொல்லப்படும் விஷயம் சிறுகதையில் இருக்கக் கூடாது. வாசகனே ஊகித்துச் சென்றடையும் விஷயமே சிறுகதையின் மையமாகும்.

5. சிறுகதை அதன் கடைசி வரிக்குப் பிறகு வாசகன் மனதில் மீண்டும் தொடங்குகிறது.

சிறு கதையின் முடிவு

சிறுகதையின் முடிவு அதன் திருப்பத்தில் உள்ளது என்றோம். அது வாசகனை அந்தக் கதையை முற்றிலும் புதிதாக மீண்டும் கற்பனையில் எழுப்பச் செய்யவேண்டும்.

அப்படியானால் அது முடிந்தவரை குறைவான சொற்களில் சொல்லப்பட வேண்டும். எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு வாசகனின் கற்பனைக்கு விடப்பட வேண்டும்.

நல்ல கதைகளில் கடைசி சொற்றொடரில் கதையின் திருப்பம் வெளிப்படுவதைக் காணலாம்.

திருப்பம் வெளிபப்ட்டதுமே கதை முடிவது நல்லது. அதற்குப்பிறகு வரும் ஒவ்வொரு சொல்லும் கதைக்கு பாரமே!

0 0 0 0 0 0 0 0

என்ன? எழுதத் தயார்தானே?

உங்கள் கற்பனைக் குதிரையில் ஏறி இலக்கிய உலக சஞ்சாரம் செய்யும் வேளை வந்துவிட்டது. உங்கள் எண்ணத்தில் உதிக்கும் கருவுக்கு உரு கொடுக்கும் வேளை இதுதான்!

அட, சொல்ல மறந்தேனே….புதுமைப்பித்தனின் சிறுகதைகளையும் படிக்க வேண்டிய வேளையும் இதுவே.

இனி என்ன … கற்பனை உலகில் சந்திப்போம்!

 

(முற்றும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *