வேலிக்கும் யாழ்ப்பாணத்தவருக்குமான தொடர்பு!
வேலிக்கும் யாழ்ப்பாணத்தவருக்குமான தொடர்பு பெரிது.
திருநெல்வேலி, நீர்வேலி, அச்சுவேலி, கட்டைவேலி, சங்குவேலி என ஊர்ப் பெயர்களிலும் வேலி போட்டவர்கள் நாங்கள்.
நந்தி எழுதிய “நம்பிக்கைகள்” என்ற நாவலில் பச்சைவேலி என்று ஒரு கிராமம் உள்ளது. செங்கை ஆழியானின் நாவல்களில் “கிடுகுவேலி” என்று ஒன்றும் உள்ளது. இது தவிர “வேலி” என்ற பெயரில் வாஸந்தி எழுதிய சிறுகதையும் , யாழ்ப்பாணத்தில் சிறுகதைத் தொகுப்பு ஒன்றும் வெளியாகியுள்ளது.
“வேலியே பயிரை மேஞ்சது போல”, “வேலியில போற ஓணானை வேட்டியிலை விட்டது போல”,
“மதில் மேல் பூனை போல” என்று பழமொழிகளைக் கொண்டவர்களும் நாங்கள்.
யாழ்ப்பாணத்தில் மக்கள் பெரும்பாலும் பனை ஓலைகளாலும் தென்னங்கிடுகுகளாலும் வேலி அமைக்க நெடுந்தீவு மக்களோ ஒரு படி மேலே போய் முருகைக் கற்களை அடுக்கி வேலி இல்லாமல் எங்களால் வாழ முடியாது என்று காட்டியுள்ளார்கள்.
கிணற்றடிக்குத் தனி வேலி போட்டுக் குளித்தவர்கள் நாங்கள். கிணற்றடி வேலியின் உயரத்தை வைத்து வீட்டில் குமர்ப்பிள்ளை இருக்கா இல்லையா என்று இலகுவில் சொல்லிவிடலாம்.
நாலு பக்கமும் வேலி யாருக்குச் சொந்தம் எனக் காணி உறுதியிலேயே எழுதி வைத்தவர்கள் நாங்கள். வேலிக்கு வெளியே நிக்கிற எந்தெந்த மரங்களின் பழங்கள் வளவுக்க விழுந்தால் எங்களுக்குத் தான் உரிமை என்று எழுதி வைத்தவர்களும் நாங்கள்.
யாழ்ப்பாணத்தில் வேலிச்சண்டை இருக்கும் வரை அப்புக்காத்துக்குப் படிக்கிற ஆக்களும் குறையாது எண்டு அப்பப்பா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன். வேலி யாருக்குச் சொந்தம் என்பதை கிடுகு பிடித்த வளத்தைக் கொண்டு இலகுவில் கூறிவிடலாம். பங்குக் கிணத்துக்கு மேலால வேலி போட்டு “அதுகள்ட முகத்தில முழிக்கிறதே பாவம்” எனச் சில பக்கத்து வீட்டுக்காரரை வெறுத்தவர்கள் நாங்கள்.
யாழ்ப்பாணத்து வேலி என்றால் பூவரசமரம் கட்டாயம் இருக்கும். அதில் நல்ல பெரிய மரமாப் பார்த்து நெஞ்சாங்கட்டைக்கு எண்டு நேர்ந்து விட்டிருப்பினம். வீட்டில் யாராவது இறந்துவிட்டால் பாடை கட்டும் போது அந்தப் பூவரசையும் தறிச்து சுடலைக்குப் போகும் வண்டிலில் ஏற்றி விடுவார்கள்.
இனி ஆடு வளர்ப்பவர்கள் சீமைக்கிழுவை வேலி, முட்கிளுவை வேலி, முள்முருக்குவேலி என நெருக்கமாக அமைத்த வேலிகளின் அழகு தனி. வாய்க்காலை வேலியோடு அமைத்து வேலிக்கதியால் பட்டுப் போகாமல் பார்த்தவர்கள் நாங்கள்.
ஆரையும் ஆடு, மாடு வளவுக்குள் வராமல் முள்ளுக் கம்பி வேலிகளும் அமைத்ததுண்டு. இனி பனைமட்டையை நெருக்கமாக அடுக்கி கட்டுக் கம்பியால் கட்டின வேலிக்குள்ளால நாய் கூட பூர ஏலாது. அந்த வேலியிலை கறையான் ஏறாமல் இருக்க நிலத்திலிருந்து அரை அடிக்கு “சொலிக்கனம்” பூசுவது தனிச் சிறப்பு. வேலிக்குள்ளால பூந்து வந்து மேய்ந்த ஆடு மாட்டைக் கட்டி வைத்துவிட்டு விதானையாரைக் கொண்டுவந்து காட்டி அழிவு காசு தந்த பிறகு தான் அவற்றை அவிட்டு விட்ட கதைகள் கனக்க உண்டு.
வேலி எப்படி இருந்தாலும் வீட்டுக்கு ஒரு படலை இருக்கும். இனி படலைக்க நாங்கள் கதைக்கிற கதைகளைப் பக்கம் பக்கமாக எழுதலாம். படலைக்க காதலிச்சதுகளையும், வேலிக்கால காதலிச்சதுகளையும் விட்டிட்டு ஏனைய காதல் கதைகளை எண்ணினால் கொஞ்சம் தான் தேறும்.
பக்கத்து வீட்டுக்குப் போக எல்லா வேலியிலும் ஒரு பொட்டு இருக்கும். பக்கத்து வீட்டை ஆரும் வெளி ஆக்கள் வந்த சத்தம் கேட்டால் “அவசரமா ரெண்டு முட்டை வாங்கியா” என்று புதினம் பார்க்க பிள்ளைகளை அனுப்புவது படலையால் அல்ல, இந்தப் பொட்டுக்கால தான்.
கதியால் போடுறதுக்கும் வேலி அடைக்கிறதுக்கும் நாள் குறிச்சு உறவுகளைக் கூட்டி கூலி இல்லாமல் அலுவலை முடிச்சதும் யாழ்ப்பாணத்திலை தான். “மாமி வீட்டை வேலி அடைக்க மட்டும்தான் போறாய், அவள் பிச்சைக்காரி, ஒரு வெள்ளடியன் சாவலை அடிச்சு உன்னை மடக்கி மகளுக்குக் கட்டி வைச்சிருவாள்” என வகுப்பு எடுத்து மகனை அனுப்பியதும் யாழ்ப்பாணத்திலை தான்.
யாழ்ப்பாணத்திலை வேலிக்கு நெருப்பு வைச்ச கதைகளுக்கும் குறைவில்லை.
மூக்கு முட்டக் கள்ளுக் குடித்தவர்கள் நடந்து போனால் என்ன, சைக்கிளில் போனால் என்ன ஏதாவது ஒரு வேலியில் முட்டாமல் வீட்டுக்குப் போனதாக வரலாறு இல்லை. இனிக் கள்ளுக் கோப்பிரேஷன்களை இலகுவாக அடையாளம் காணத் தகர வேலிகளே போதும்.
யாழ்ப்பாணத்துச் சனம் கனடா, சுவிஸ் எண்டு போய் பனியிலை வேலை செய்து அனுப்பின காசாலை பல வேலிகள் மதில்களாக மாறீட்டுது. “மகன் காசு அனுப்பியிருக்கிறான்” என்ற செய்தியை ஊருக்குச் சொல்லப் புது மதிலும் கேற்றும் போதும்.
வேலியை வெட்டி மதில் கட்டின பிறகு வீட்டுக்க இருக்க ஏலாத அளவுக்கு வெக்கையும் வந்திட்டுது; காணியளும் வெளிச்சிட்டுது; வீட்டிலை ஆடு, மாடு வளர்க்கிறதும் குறைஞ்சிட்டுது; ஆட்டிறைச்சி விலையும் உச்சத்தில ஏறீட்டுது.
ஸ்டாண்ட் இல்லாத சைக்கிளை வேலியிலை சாத்திறது தான் யாழ்ப்பாணத்தார்ட மரபு; இப்ப மதில் கட்டின பிறகு மதில்ல சாத்த விடுறாங்கள் இல்லை, கீறிப்போடும் எண்டு. சைக்கிளும் குறைஞ்சு போய்ச்சு. மதில் கட்டின புதுசில பெடியள் அதில ஏறியிருந்து றோட்டால போன பெட்டையளுக்கு மார்க்ஸ் போட்டவங்கள்; இப்ப அதுவும் குறைஞ்சு போச்சு.
வேலி இருக்கேக்க போஸ்டர் பிரச்சினை இல்லை; காசைச் செலவழிச்சு மதிலைக் கட்டி விட்டால் அதிலை போஸ்டர் ஒட்டுறாங்கள். இனி அதைத் தடுக்க சின்னச் சல்லிகளை சீமெந்தில் கலந்து வெளிச்சுவருக்குப் பூசினதையும் மறக்கேலாது.
பின்குறிப்பு:
நல்ல பதிவு. யார் எழுதியது என்று பெயரைப் போட்டிருக்கலாம்.
இதோ என் நினைவிலும் இருக்கும் சில…..
யாழ்ப்பாணத்தில் (வலிகாமம் , வடமராட்சி) வேலி நடக்கும் என்று பகிடி சொல்வர்.
அது நீண்ட காலத்தில் இரண்டு, மூன்று அடி நகர்ந்திருக்கும்.
காணி, நிலம் குறைந்தவர்கள் அதிக சிக்கனமும் கொண்டவர்கள் என்பதால் காணி பிடிக்கும் ஆசையால் கொஞ்சம் கொஞ்சமாக வேலியை நடக்க(நகர) வைத்துவிடுவார்கள்.
அயல் ஆயிரம் பெறும்.அயலைப் போல அண்ணன்தம்பி உதவாமாட்டான்ஐயோ என்று கூப்பிட்ட குரலுக்கு அயல்தானே வரும்,தூரத்துத் தண்ணி தாகத்தைத் தீர்க்காது …என ஆயிரம் சொல்லுவம்.ஆனாலும் நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது வீதம் அயலவர் கீரியும் பாம்புமாக,இந்தியாவும் பாகிஸ்தானுமாக இருப்பது இந்த வேலி நடந்ததால வந்த வழக்கும் சண்டைகளாலுந்தான் என்பதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
படித்த சமூகம் என நினைக்கிற நாங்கள் சீதனம் வாங்குகிறதும் எல்லைச் சண்டை (வேலி) போடுவதுந்தான் மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயமெனலாம்.
ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஆறடி நிலந்தானே சொந்தம், பணம் இண்டைக்கு வரும் நாளைக்கு போகும் என்று தத்துவங்களை அள்ளி வீசுபவர்களும் இவர்கள் தான் என்பது தான் நகைப்புக்கிடமாகும்.
![]()