துரோகத்தின் சின்னம் பேனா!
திருப்பூர் மாவட்டம், உடுமலை சின்னவீரம்பட்டியைச் சேர்ந்த பெண் விவசாயி நாகரத்தினம்; இவரது மகன் விஷ்ணு பிரசாத், விபத்தில் உயிரிழந்தார். அடுத்த, 40 நாட்களில், இவரது கணவர் மோகன்குமாரும், உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். மகனையும், கணவரையும் அடுத்தடுத்து பறிகொடுத்த நாகரத்தினம் செய்த செயல் தான், நம்மை நெகிழச் செய்கிறது…
சின்னவீரம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தான், மோகன்குமாரும், விஷ்ணு பிரசாத்தும் படித்துள்ளனர். மகனின் விபத்து காப்பீட்டு தொகையாக வந்த, 10 லட்சம் ரூபாயை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு புரவலர் நிதியாக வழங்கியுள்ளார், நாகரத்தினம். அதாவது, தன் மகனின் நினைவாக, அரசு பள்ளியின் வளர்ச்சிக்கு, ஏழை விவசாய பெண் நன்கொடை அளித்துள்ளார்.
ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, மக்கள் வரிப்பணத்தை எடுத்து, அவரது அப்பாவின் நினைவாக, கடலில் பேனா சின்னம் அமைக்க தீர்மானித்துள்ளார். கோடிக்கணக்கான ரூபாய், ஸ்டாலின் குடும்பத்தாரிடமும், தி.மு.க.,வினரிடமும் கொட்டிக் கிடக்க, ‘மக்களின் வரிப்பணத்தை எடுத்து தான், கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம்அமைப்பேன்’ என, ஸ்டாலின் அடம் பிடிப்பது, கொடுமையிலும் கொடுமை.
பேனா சின்னம் அமைக்க, மக்கள் வரிப்பணம், 81 கோடி ரூபாய் செலவு செய்ய, ஸ்டாலினுக்கு இனிக்கிறது. தன் சொந்த பணத்தை கொடுத்தால் தானே வலிக்கும்… மக்கள் வரிப்பணம், 81 கோடி ரூபாயை, பேனா சின்னம் அமைத்து வீணாக்குவதற்கு பதிலாக, அரசு பள்ளிகளுக்கு, தலா, 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், அது பயனுள்ளதாக இருக்குமே!
கருணாநிதி முதல்வராக இருந்த போது செய்த சாதனைகள் என்ன தெரியுமா என, சில பட்டியல் விபரங்களை வெளியிடலாம்; ஆனால் அவை, முன்னாள் முதல்வர் காமராஜர் செய்த சாதனைகளில் கால் துாசிக்கு சமமாகுமா?
சத்தியமூர்த்தி, நீலகண்ட பிரம்மச்சாரி, செண்பகராமன் பிள்ளை, வ.உ.சி., உள்ளிட்டோர் செய்த தியாகங்களை விட, கருணாநிதி இந்த நாட்டிற்காக அதிக தியாகங்கள் செய்து விட்டாரா…
கருணாநிதி செய்த சாதனைகளின் பட்டியலை வெளியிட்டால், அதை விட அதிகமாக, தமிழகத்திற்கு அவர் செய்த துரோகங்களின் பட்டியல் தான் நினைவுக்கு வரும் என்பதை, அவரது மகனும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் உணர வேண்டும். கருணாநிதியின் நினைவாக பேனா சின்னம் அமைக்கப்பட்டால், அது வருங்காலத்தில் துரோகத்தின் சின்னமாகவே பார்க்கப்படும் என்பதை மறவாதீர்!
![]()