கட்டுரைகள்

இலங்கைத் தமிழரின் சறுக்குமர அரசியல்!…. ஏலையா க.முருகதாசன்

உலகத்திலேயே இராஜதந்திரமற்ற இனங்களில் ஒன்றுதான் தமிழினம்.அதிலும் இலங்கைத் தமிழர் இராஜதந்திரமென்றால் என்னவென்று தெரியாதது போலவும் அரசியலில் அரிச்சுவடியைத் தாண்டதவர்களாகவும் இருக்கிறார்கள்.

தமிழினம் பற்றி „கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்து குடி'(இதுவே கோள்களின் பரிணாம வளர்ச்சிக்கும் மானிடத் தோற்றத்துக்கும் முரண்பட்ட உசுப்பேத்தல் வார்த்தைகள்)பெருமை பேசுவதால் மட்டுமே சமகால அரசியல் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.தமிழர்கள் வீரத்தால் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைத்ததனால்தான் தமிழ் மன்னர்கள் பல நாடுகளுக்கு படையெடுத்து வெருட்டி வென்ற போதும் அந்நாடுகளில் தம்மரசுகளை நிலைநிறுத்திக் கொள்ள முடியவில்லை.

தமிழர்களைப் பற்றி எதிரிகள் என்ன நினைக்கிறார்கள் என்ன சொல்கிறார்கள் என்று நாம் காது கொடுத்துக் கேட்பதில்லை அவர்கள் தமிழர்களைப் பற்றி என்ன கணிப்பீடுகள் வைத்திருக்கிறார்கள் என்பதைக்கூட பகுத்தாய்வதும் இல்லை.

சரத் பொன்சேகா தமிழக அரசியல்வசாதிகளைப் பற்றிக் கோமாளிகள் என்று சொன்னது இப்பொழுது சரியாகத்தானே இருக்கிறது.

நாமல் இராஜபக்ச கடந்த ஆண்டு’ தமிழக அரசியல்வாதிகளால் இலங்கையில் சிங்களவர்கள் முரண்டு பிடிக்கிறார்கள்.அவர்கள் வாயை மூடிக் கொண்டிருந்தாலே இலங்கையில் இனப் பிரச்சினை மெது மெதுவாகத் தீர்ந்துவிடும் „ என்றொரு கருத்தைச் சொல்லியிருந்தார்.

நாமென்ன நினைத்தோம் சரத் பொன்சேகா சிங்களவன்,நாமல் இராஜபக்சா மகிந்தாவின் மகன் அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என்று உதாசீனப்:படுத்தினோம்.

சிங்கள மக்களைப் பற்றி எமது அரசியல்வாதிகள் யாருமே ஆய்வு செய்ததாகத் தெரியவில்லை.அவர்களின் மனங்களை வெல்வதற்கான தந்திரமும் தெரியவில்லை.ஒன்று மட்டும் சொல்லத் தெரியும் „சிங்களவன் மோடன்’ என்று.அந்தக் காலம் மலையேறிவிட்டது என்பதை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை..அந்த வார்த்தை ப் பிரயோகமுந்தான் நமக்கு வினையாக வந்திருக்கின்றது.

எல்லாத்துறைகளிலும்; விஞ்ஞான நுட்பவியல் அணுகுமுறை இருப்பது போல விளையாட்டுத்துறைகளிலும் உண்டு.

ஒரு உதாரணமாக, உதைபந்தாட்டப் போட்டியொன்றில் இரண்டு அணிகள் மோதி ஒரு அணி வெல்கிறது மற்ற அணி தோற்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அதற்குப் பிறகு அவர்கள் சும்மா இருப்பதில்லை.

தோற்ற அணியின் விளையாட்டுத்துறை அறிஞர்கள் தாம் ஏன் தோற்றோம் அவர்கள் எப்படி வென்றார்கள் என்பதை அக்கு வேறு ஆணி வேறாக ஆய்வு செய்வார்கள்.பலர் ஒருங்கிணைந்து கலந்துரையாடுவார்கள்.இன்னும் சொல்லப் போனால் போட்டி நடைபெற்ற அத்தனை நிமிடங்களிலும் ஒவ்வொரு உதைபந்தாட்ட வீரனும் எப்படியெல்லாம் விளையாடினான் என்பதை காணொளி வாயிலாக விவாதிப்பார்கள்.

அது போன்றுதான் வென்ற அணி, தோற்ற அணி ஏன் தோற்றது தம்மால் ஏன் வெல்ல முடிந்தது என்று அவர்களின் விளையாட்டுத்துறை அறிஞர்களும் அது சம்பந்தப்பட்ட வல்லுனர்களும் விவாதிப்பார்கள்.

வென்றவர்கள் தாம் வென்றுவிட்டோமே என்றிருக்காது,தோற்ற அணியைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது அவர்களையும் ஆய்வு செய்வார்கள்.

ஒரு விளையாட்டுக்கே இவ்வளவு ஆய்வுகள், கணிப்பீடுகள்,எடை போடுதல்,பகுத்தறிதல் தேவையென்றால் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு எவ்வளவு தேவை.

இன்றுவரையும் இராஜதந்திரத்தில் சாணக்கியனையும்,நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ குவான் யூவையும் சொல்கிறார்கள்.

இராஜதந்தரிரமற்ற அரசியலால் அரசியல் நகர்வுகளைச் நகர்த்தவே முடியாது.

இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளிடம் அது இல்லவே இல்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *