“அம்மைப் பூக்கள்” …. சிறுகதை 3 ….. அண்டனூர் சுரா.

அவர்களோடு நானும் சென்றிருந்தேன். பழங்கள் வாங்கியது நான்தான். தூரத்தில் நின்றிருந்த சங்க வட்டாரச் செயலாளர் உரக்க குரல் கொடுத்தார். ” அம்மை போட்டவங்க சாப்பிடுற பழமாகப் பார்த்து வாங்குங்க”. அவர் சொன்னது எனக்குதான் என்றாலும் என்னை விட பழக்கடைக்காரருக்கு நன்றாகவே கேட்டிருந்தது. கடைக்காரர், பழங்களைக் கேரிப்பையில் எடுத்துவைத்துக்கொண்டு சொன்னார். ” இந்தப் பழங்க எல்லாமே குளிர்ச்சி. அம்மைப் போட்டவங்க சாப்பிடுறதுதான்” என்றவர், பழப்பையை என்னிடம் நீட்டினார். நான் பணத்தை நீட்டினேன்.
ஐந்து வாகனத்தில் பத்துப்பேர் அம்மை கண்டவரின் வீட்டுக்குக் கிளம்பினோம். அம்மை கண்டிருந்தவர் சங்க வட்டாரத் தலைவராக இருந்தார். அவரது வீடு நகரத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திலிருந்தது.
பார்க்க வருகிறோம், என்கிற செய்தியை முன்கூட்டியே சொல்லிய பிறகுதான் கிளம்பியிருந்தோம். இதற்காகவே அவர் காத்திருந்தவரைப் போல அவரது குரலில் தூக்கலான வரவேற்பு இருந்தது. யாரெல்லாம் வருகிறீர்கள், எனக் கேட்டுத் தெரிந்துகொண்டார். உங்களைப் பார்க்க நான் காத்திருக்கிறேன், எனச் சொல்வதைப் போல சந்தோஷசத்தை வெளிப்படுத்தினார்.
நாங்கள் அவரது வீட்டிற்குச் செல்கையில் அம்மைக் கண்டவர் வெள்ளை வேட்டியில் இருந்தார். வேட்டிகளில் மஞ்சளும் பச்சையும் திட்டுத் திட்டுகளாக இருந்தன. விரிக்கப்பட்ட வெள்ளைப் போர்வையில் அமர்ந்திருந்தார். உடம்பில் சட்டை இல்லை. தலைமயிர்கள் தலையோடு படியாமல் நட்டுண்டு இருந்தன. உடம்பில் அம்மை மொட்டுகள் உண்ணிக் கடித்திருந்ததைப் போல கரும்புள்ளி கண்டிருந்தன. மூன்று தண்ணீரும் விடப்பட்டிருந்தது.![]()
அம்மை கண்டிருப்பவர்களுக்கு மூன்று தண்ணீர் விட வேண்டும், என்பது நமது மூதாதையர்களின் ஆகப்பெரும் கண்டுபிடிப்பு. அதற்கும் முன்னால் அம்மை கண்ட உடம்பில் எங்கும் தண்ணீர் பட்டுவிடக் கூடாது, என்கிற கண்டுபிடிப்பை விடவும் நல்ல கண்டுபிடிப்பு இது. அம்மை காற்றினால் பரவும் தொற்று நோய் என்றாலும் தண்ணீரிலும் பரவக் கூடியது. அம்மை உடம்பிலிருந்து இறங்கும் வரைக்கும் உடம்பில் தண்ணீர் படக் கூடாது. நோய் தணிந்ததும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று தண்ணீர் விட வேண்டும், என்பது ஆகப்பெரும் சிகிச்சைதான்.
மூன்று தண்ணீரிலும் கொஞ்சம் மஞ்சள்த்தூள், வேப்பிலை உருவிப் போட்டு கிழக்குப் பக்கமாக அமர வைத்து மூன்று குடம் தண்ணீர் ஊற்றுவார்கள். உடம்பைத் தேய்க்கக் கூடாது, சோப்புப் போடக் கூடாது.
அம்மை மேற்கத்திய நாடுகளிலிருந்து நமக்குப் பரவியதால் மேற்கு நோக்கி பார்க்காமல் கிழக்கு திசையை நோக்கி அமர வைத்து, மூன்று குடங்கள் தண்ணீர் ஊற்றுகிறார்கள், என்பதாக நான் புரிந்துகொண்டேன். மூன்று குடம் தண்ணீர் என்பதற்கு ஒன்று நோயின் வீரியத்தைத் தணிக்க. மற்றொன்று நோயைப் போக்க. மற்றொன்று அந்நோயைத் தலை மூழ்க என்பதாக நான் புரிந்துகொண்டேன். மூன்றாம் தண்ணீர் விடுகையில் பச்சரிசி இடித்து, அதில் வேப்பலையை உருவிப் போட்டு, முறத்தில் கொட்டி, விரல்களால் நீவி, வாசலில் வைத்து, போகிற வருகிறவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் சம்பிரதாயங்கள் இப்பொழுது இல்லை என்றாலும் மூன்று தண்ணீர் விடும் பழக்கம் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது.
சங்கத் தலைவருக்கு மூன்று தண்ணீரும் விட்டிருந்தார்கள். நோயின் தீவிரம் அவரது தாடியில் தெரிந்தது. கருப்புத் தாடியில் வெண் நரைகள் பூத்திருந்தன. கண்கள் உள்ளடங்கி இமைகளில்
வரிக்கோடுகள் கறுத்திருந்தன. நான் தலைவரின் மேலுடம்பைக் கவனித்தவனாக இருந்தேன். அம்மையால் பீடிக்கப்பட்டு குணமாகி வரும் யாரையும் நான் அப்படியாக பார்ப்பதுண்டு.
எங்கள் பகுதியில் அம்மையை அம்மாள் என்றும் ஆத்தா என்றும் சொல்வார்கள். தமிழகம் முழுவதும் கூட அப்படியாகத்தான் சொல்வார்கள் போலும். இதைக் கண்டுச் சொல்வதற்கு ஊரில் நிறைய அம்மையம்மாக்கள் உண்டு. வேப்பிலையைக் கையில் வைத்துக்கொண்டு சாமி ஆட்டத்துடன் செய்தி சொல்கிறவர்களும் உண்டு. அவர்களின் பார்வையில் அம்மை என்பது ஆத்தா. எந்த அம்மா உடம்பில் இறங்கியிருக்கிறாள், எப்பொழுது உடம்பை விட்டு வெளியேறுவாள், என்பதை அவர்கள் கையில் வைத்திருக்கும் வேப்பிலைக் கொத்துகள் சொல்லிவிடும். நார்த்தாமலை மாரி, திருவப்பூர் மாரி, சமயப்புரத்தாள், உள்ளூர் மாரியாத்தாள்,..இப்படி ஒரு ஊரின் மாரியம்மாளை அம்மைக் கண்டவரின் உடம்பில் இறக்குவார்கள். மஞ்சளோடு ஒரு இணுக்கு வேப்பிலை கொழுந்து பறித்து, அம்மை கண்டவரின் வாயில் வைத்து மெல்லச் சொல்வார்கள். அருகில் யாரையும் நெருங்கவிட மாட்டார்கள். நோய் கண்டிருப்பவரின் தாய், மனைவி மட்டுமே அருகில் செல்ல முடியும். அவரைக் கவனித்துக்கொள்ளும் தாய் அல்லது மனைவி பக்திப் பெண்ணாக மாற வேண்டும். தினமும் இரண்டு வேளைகள் குளிக்க வேண்டும். “ஆத்தா இறங்கிடாத்தா. உனக்கு என் முடிகளைக் காணிக்கையாகத் தருகிறேன். சேவல் தருகிறேன். இறங்கிவிடு…” எனத் தினமும் வேண்டிக் கொள்ள வேண்டும். அம்மை கண்டவரின் காலடியில் ஈரத்துணியுடன் தோப்புக்கரணம் போட வேண்டும். இதெல்லாம் இன்றைக்கும் கூட வழக்கத்திலுள்ள பழக்கமாகவே இருந்துவருகின்றன.
நான் அம்மை கண்டவரின் கரும்புள்ளிகளைக் கண் கொட்டாமல் பார்ப்பதற்குக் காரணம், ஒரு காலத்தில் பல்லாயிரம் மக்களைக் கொன்றொழித்த தொற்று இது. புயல் காற்றில் சருகோடு சருகாக நல்ல இலை தழைகள் அடித்துச் சென்றுவிடுவதைப் போல மனித உயிர்களைப் பலி கொண்ட நோய் இது.
எனக்கு எட்வர்ட் ஜென்னர் நினைவுக்கு வந்தார். அவர் இந்நோய்க்கு செய்த அர்ப்பணிப்புகள் நினைவுக்கு வந்தன. அவர் அம்மைக்கு மருந்து கண்டுபிடிக்காத காலத்தில் இந்நோய்க் கண்டவர்கள் வீட்டில் வைத்து பராமரிக்கும் அளவில் இருந்ததில்லை. ஊருக்கும் வெளியே தனி கொட்டகையில் தங்க வைக்கும் நோயாகவே இருந்தது, என்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.
நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் அம்மை என்றொரு பாடம் இருந்தது. பாடத்தில் எட்வர்ட் ஜென்னர் இருந்தார். இப்பாடம் நடத்துகையில் அறிவியல் ஆசிரியர் சொன்ன அம்மைநோய் கதைகள் நினைவுக்கு வந்தன.
ஒரு குழந்தைக்கு உடம்பெல்லாம் கொப்பளங்கள். குழந்தையின் தாய் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவரிடம் சென்றாள். மருத்துவர் குழந்தையின் உடம்பிலிருந்த கொப்பளங்களைப் பார்த்துவிட்டு, இது பெரியம்மை என்றார். அத்தாய் குழந்தையை மருத்துவரிடமே விட்டுவிட்டு வீட்டை நோக்கி ஓட்டமெடுத்தாள். அத்தாய்க்கு மேலும் பல குழந்தைகள். அவர்களை இந்த நோய் தொற்றிலிருந்து காக்கவே அப்படியாக ஓடியிருந்தாள். எட்வர்ட் ஜென்னர் அம்மை நோய்க்கென்று ஒரு மருந்து கண்டுபிடித்திருந்தார். அம்மை ஊநீரிலிருந்தே கண்டுபிடித்த மருந்து அது. அந்த மருந்தை எலிக்குச் செலுத்தி பரிசோதனை செய்திருந்தார். மனிதனுக்குச் செலுத்தி பரிசோதிக்க ஆளைத் தேடிக்கொண்டிருக்கையில்தான் இந்தச் சிறுமி அவருக்குக் கிடைத்திருந்தாள். மருந்தை அக்குழந்தைக்குச் செலுத்தி பரிசோதிக்க நினைத்தார். அப்படியாகச் செலுத்தியதில் அக்குழந்தையின் நோய் மெல்ல தணிந்து வந்தது, என்பதை அம்மை நோய்க்கு மருந்து தான் கண்டுபிடித்து வெற்றி கண்டவரைப் போல அறிவியல் ஆசிரியர் சொல்லி முடித்தார். இக்கதையை விடவும், அம்மருந்தை விலையில்லாமல் மக்களுக்கு அர்ப்பணம் செய்ததை சொல்கையில் அவரது முகம் பூரிப்புக் கண்டது.
இதே அறிவியல் ஆசிரியர் மற்றொரு கதையையும் சொன்னார். உலகத்தைப் போரால் வென்றுகொண்டிருந்த மாவீரன் நெப்போலியன், தன் படையின் பெரும்பாதியை இழந்தது இந்த அம்மை
நோயால்தான். இப்படி அம்மை மனிதர்கள் மீது நிகழ்த்திய போரை நினைவுகூர்ந்து, வியந்து என் சங்கத் தலைவரின் அம்மை வடுக்களைப் பார்த்தவனாய் இருந்தேன்.
சங்கப் பொருப்பாளர்கள், உறுப்பினர்கள் தலைவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்து, இந்த அம்மை தாக்குதலுக்கு மாற்றச் சங்கத்தாரின் சதி ஒரு காரணமாக இருக்குமோ, என்கிற போக்கில் விவாதத்தைத் தொடங்கினார்கள். பிறகு, இந்த அம்மை எதிர்ப்புச் சக்தி குறைவினால் வரும் நோய், என்று தன்னிலை விளக்கம் கொடுத்தார்கள். பிறகு அம்மை முடக்கத்திலிருந்து தலைவரை மீட்டெடுப்பதுடன் சங்கத்தையும் மீட்டெடுக்கும் வழிகள் குறித்து கலந்துரையாடுனார்கள். திருமண வீட்டில் கட்சி அரசியல் பேசுவதைப் போலதான் அவர்களின் பேச்சு இருந்தது. அம்மை கண்டிருந்தவர் முதலில் சோகமாக, மெதுவாக, அமைதியாக ‘இம்’ போட்டு வந்தார். பிறகு அவரது பேச்சு சங்க உறுப்பினர்களின் எழுச்சி குரலுக்கேற்ப சூடுபிடித்தது. பத்து நாட்கள் ஒரே அறையில் முடங்கியிருந்து யாரையும் பார்க்காமல் இருந்தவருக்குச் சங்கத்தார்களைச் சந்தித்து பேசியது அவரையும் அறியாமல் உற்சாகம் பீறிட்டது.
அவரது வீடு அம்மை கண்டிருந்தவரின் வீடாக இருந்திருக்கவில்லை. வீடு சிரிப்பும் கெலிப்புமாக இருந்தது. தலைவரின் துணைவியார் வாசலுக்கும் வீட்டுக்குமாக ஓடினார். கணவரிடம், அம்மை கண்டவர் இப்படிச் சத்தமாகப் பேசக் கூடாது, சிரிக்கக் கூடாது, எனச் சமிக்ஞையால் சொன்னார். ஆத்தா கோபம் கொள்ளும். திரும்பவும் அம்மை கண்டால் அவ்வளவு சீக்கிரத்தில் இறங்காது, என்பதைத் தலைவருக்குக் கேட்கும்படியாகவும் கண் சைகையாலும் சொன்னார். தலைவர் கேட்பதாக இல்லை. அவரது சத்தம், அவரையும் அறியாமல் குதூகலித்தது. பிறகு அவள், ஓடிச்சென்று அம்மையம்மாளை அழைத்து வந்தாள்.
அம்மையம்மாள் மஞ்சள் சேலையுடன் கையில் கொஞ்சம் வேப்பிலையைப் பறித்துக்கொண்டு ஓடி வந்தாள். பின்பக்க வாசலில் நின்றவராய், அவரைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தார். “சாமிங்களா அம்மா தாய்க்கிட்ட இப்படியெல்லாம் கிட்ட நெருங்கி பேசக்கூடாது. அம்மா கண்டவர் இப்படிச் சத்தமா பேச, சிரிக்கக் கூடாது ” என்றாள். இதையே அவர் சாமி ஆட்டத்துடன் சொல்லியிருந்தால் உடனே அந்த இடத்திலிருந்து வெளியேறியிருக்கலாம். அவர் நின்று நிதானமாக சொன்னதால் அந்த இடத்திலிருந்து வெளியேற சற்றுநேரம் பிடித்தது. நான் அவரிடமிருந்து விலகும் வரை அம்மை கண்டவரின் கண்கள், உடம்பைப் பார்த்தபடி இருந்தேன். அவரது விழிகள் வெளிர்த்துபோய் இரத்த தந்துதிகள் விழிக்குள் வேர்விடுவதாக இருந்தன.![]()
தலைவரிடமிருந்து எங்களால் சட்டென பிரியமுடியவில்லை. அவரும் எங்களை அனுப்பி வைப்பதாக இல்லை. ” தலைவரே, நாங்க இருக்கோம். கவலைப்படாதீங்க. பழங்கள நல்லா சாப்பிடுங்க. ஓய்வு எடுங்க. மெடிக்கல் லீவ இன்னும் கூட ஒரு வாரத்துக்கு நீட்டிச்சிக்கோங்க. நாங்க அதிகாரிக்கிட்ட பேசுறோம். உடம்பு முக்கியம். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். சங்க வேலைகள் நிறைய இருக்கு. உறுப்பினர் சேர்க்கணும். மாநாடு நடத்தணும்,…”
“ மீண்டு வந்துவிடுறேன்” என்கிற போக்கில் எங்களை அவர் அனுப்பி வைத்தார்.
தெருவே நின்று வேடிக்கை பார்த்தது, தலைவருக்குப் பெருமையாகக் கூட இருந்திருக்கும். அம்மை கண்டவர், வாசற்படி வரைக்கும் வந்து, கைக்காட்டி, கட்டை விரலை உயர்த்தி, சங்கத்தைத் தைரியப்படுத்துவதைப் போல, அனுப்பி வைத்தார். உடற்தகுதி பெற்று திரும்பியதும் சங்கத்தை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டுபோய் நிறுத்தப் போவதை உத்திரவாதப் படுத்துவதைப் போல அவரது கட்டை விரலின் உயர்த்தல் இருந்தது.
மறுவாரமே உடல்நலம் தேறி பணிக்குத் திரும்பினார். அடுத்த செயற்குழுவைக் கூட்டி மாநாடு நடத்தினார். தன் தலைவர் பதவியை வட்டாரச் செயலாளர் என்கிற அளவிற்கு உயர்த்திக் கொண்டார். இந்த உயர்வுக்கு அவருக்குக் கண்டிருந்த அம்மை ஒரு வகையில் துணை புரிந்திருந்தது. இது நடந்து இரண்டு ஆண்டுகளாகியிருந்தன.
நான் இதை இப்பொழுது சொல்வதற்குக் காரணம், அதே அம்மைதான் எனக்கும் கண்டிருக்கிறது. அதே சின்னம்மை. அதே தனிமை. அதே வெள்ளை வேட்டி, வெள்ளை விரிப்பு. மஞ்சள், வேப்பிலை. முதலில் எனக்குக் கண்டிருப்பது சூட்டுக்கொப்பளங்கள் என்றே நினைத்தேன். சூட்டுக் கொப்பளங்கள் எரிச்சலும் வலியும் கொடுக்கக் கூடியவை. என் உடம்பில் அரும்பிட்ட கொப்பளங்கள் என்னை அரித்தெடுத்தன.
எங்கள் தெருவிலிருந்த அம்மையம்மாள் அவளாகவே வீட்டுக்கு வந்து, ஆத்தா இறங்கியிருக்கிறாள். கோபம் கொள்ளவில்லை. போய்விடுவாள், என்றாள். நான் மருத்துவரிடம் சென்று கொப்பளங்களைக் காட்டினேன். மருத்துவர் அதையே சொல்லியிருந்தார், அம்மை. பத்து நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொண்டார். குழந்தைகள் அருகில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஐந்து நாட்களுக்கு மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார். அவரே பத்து நாட்களுக்கு மெடிக்கல் லீவுக்கான மருத்துவச் சான்றும் கொடுத்தார்.
மூன்று நாட்கள் காய்ச்சல், உடம்பு வலி, எரிச்சல், தூக்கமின்மையாக இருந்தன. பின் அரிப்பு மெல்ல தாழ்ந்து உடல் மெல்ல தேறிவந்தது. தனிமை, பல நினைவுகளை அசைபோட வைத்தன. இதற்கும் முன்பு சங்கத் தலைவரை இந்நோய் கண்டதும் சங்க உறுப்பினர்கள் திரண்டு போய் அவரைப் பார்த்து வந்ததும் நினைவுக்கு வந்தன.
எனக்குள்ளும் அப்படியான ஓர் ஏக்கம் வேர்விட்டது. இந்நேரத்தில் யாரேனும் ஒருவர் என்னைத் தேடி வந்து நலம் விசாரித்தால் நல்லாயிருக்குமென மனம் ஏங்கியது. அப்படியாக விசாரித்தால் இரண்டு ஆப்பிள் தரும் சக்தி உடம்புக்குக் கிடைக்கும், என ஆழ்மனம் ஏங்கியது. உடம்பு சத்தான உணவைத் தேடினாலும் மனம் ஆறுதலையே தேடுகிறது.
எனக்கு அம்மை கண்டிருப்பது சங்கத்தார்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் சங்க வட்டாரச் செயலாளரிடம் தனக்கு அம்மை கண்ட விசயத்தை நேரடியாக சொல்லாமல் மருத்துவ விடுப்பு குறித்து விசாரித்தேன். ” அம்மை நோய்க்கு முன்பு சிறப்பு தற்செயல் விடுப்பு ஏழு நாட்கள் இருந்ததே, இப்போது இருக்கிறதா, எடுத்துக்கொள்ளலாமா?”. சங்கச் செயலாளர், “யாருக்கு அம்மை..?” என்றார். “எனக்குத்தான்” என்றேன்.
” எத்தனை நாளாச்சு?” , ”
” அஞ்சு நாளாச்சு”
” தண்ணீ விட்டாச்சா?”
” இல்லை”
சற்றுநேரம் அமைதியாக இருந்தவர், ” அம்மையைத்தான் முழுசா இந்தியாவுல ஒழிச்சிட்டாங்களே. அதனால அதுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பெல்லாம் கிடையாது ” என்றவர் அலைபேசியைத் துண்டித்துக்கொண்டார்.
இரண்டொரு நாட்கள் கழித்து வட்டாரத் தலைவர் தொடர்புக்கு வந்தார். உடல் நலம் விசாரிக்கத்தான் அழைக்கிறாரென்று அலைபேசியை எடுத்தேன். “இன்றைக்கு மாவட்ட தலைமையிடத்துல ஆர்ப்பாட்டம். நீங்க வரணுமே” என்றார்.
” அம்மை கண்டிருக்கு. என்னால முடியாதே” எனச் சொல்லின் செல்வன் அனுமாரைப் போல, முதலில் என் நோயைச் சொல்லி, பிறகு என் இயலாமையைச் சொன்னேன். ” அப்படியா! தெரியாதே. சொல்லணும் இல்லையா. எத்தனை நாளாச்சு. நிறையவா போட்டிருக்கு. சின்னம்மையா, பெரியம்மையா. எப்பத் தண்ணீ விடுவீங்க. பார்க்க வரணுமே ” என்றார். அவரது விசாரிப்புகள் எனக்கு ஆறுதலாக இருந்தன.
எனது உடல், எனது எதிர்ப்புச் சக்தி குறைவு, எனது நோய். இதைப் பார்க்க ஏன் சங்கத்தார்கள் வர வேண்டும், என என் மூளைச்சுரப்பு சொன்னாலும் மனம் ஆறுதலுக்காக ஏங்கவே செய்தது. இந்த உடல் என்னதான் வயது மூப்புக் கண்டாலும் மனம் கடைசி வரைக்கும் குழந்தையாகவே இருந்துவிடுகிறது, என்பதை நினைத்து மனதைச் சபித்துக்கொண்டேன்.
முதல் தண்ணீர், இரண்டாம் தண்ணீர், மூன்றாம் தண்ணீரும் விட்டாகி விட்டன. மருத்துவரை நேரில் அணுகி உடற்தகுதியைக் காட்டி, மருத்துவரிடம் சான்று வாங்கி, பணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கி ஒரு மாதம் கடந்துவிட்டன.
வயிற்றுப் புண்கள் கொஞ்சம் ஆறாமல் இருந்ததில் செரிமான கோளாறுகள் காட்டின. வேப்பம்பூ சூப் வைத்து அருந்தினால் வயிற்றுப் புண் சரியாகுமென்று, பணி செய்கிற இடத்தில் என்னுடன் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சொல்லியிருந்தார். இதற்கெல்லாம்தான் அலோபதி மாத்திரைகள் வந்துவிட்டனவே, அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறந்துவிட்டவனாய் என் போக்கில் இருந்தேன்.
ஒரு நாள் வீட்டு வாசலிலிருந்த வேப்பமரத்தடியில் அமர்ந்து செய்தித்தாள் புரட்டிக் கொண்டிருந்தேன். காற்று ஒத்தடம் கொடுப்பதைப் போல வீசிக் கொண்டிருந்தது. மரத்தின் ஒரு கிளை தாழ்ந்து என் கன்னங்களை உரசியது. இலையின் தட்பமும் இதமும் என்னைப் புல்லரிக்க வைத்தன. நான் அம்மை நோயால் படுத்திருக்கையில் என் கொப்பளங்களைத் தடவி ஒத்தடம் கொடுத்த தழைகள் இவை. எனக்கு அம்மை நோய்க்காலம் நினைவுக்கு வந்தது. இம்மரத்தின் தடவலும் தழுவலும் என்னை நலம் விசாரிப்பதைப் போலிருந்தது.
நான் மரத்தைத் தழுவி கட்டிப்பிடித்தேன். என் நோயைத் தணித்ததில் இந்த வேம்புக்குப் பெரும் பங்குண்டு. இம்மரத்தின் தழுவல் என் உடல்நிலையை விசாரிக்கத்தானோ, நினைத்தவனாய் மரத்தண்டில் தலை சாய்த்தேன்.
எனக்கு சங்கம் நினைவுக்கு வந்தது. தலைவர், செயலாளர் நினைவுக்கு வந்தார்கள். தலைவர் அம்மை கண்டிருக்கையில் சங்கமே திரண்டுபோய் பார்த்ததும், ஆறுதல் சொல்லி திரும்பி வந்ததும் நினைவுக்கு வந்தன. மரத்தின் இதமான காற்றினூடே கேள்விகள் எனக்குள் சுருளெடுத்தன. அவரை ஏன் அத்தனை பேரும் பார்க்கச் சென்றார்கள்? என்னை ஏன் ஒருத்தரும் பார்க்க வரவில்லை? என் கேள்விகள் மனதிற்குள் சிலந்தி வலையாக பின்னின. சிலந்தி வலைக்குள் சிக்குண்ட எறும்பைப் போல, பூச்சியைப் போல மனது அதிலிருந்து கரையேற முடியாமல் தத்தளித்தது.
மரம் என் மன மூழ்கலைத் திசைத் திருப்பும் படியாக அசைந்து கொடுத்தது. கிளைகள் மேலும் தாழ்ந்து, இலைகளால் என் உடம்பைத் தடவிக் கொடுத்தன. நான் கண்களை மூடியபடி வேப்பமரத்தின் மென்மெல்லிய தொடுதலை உள்வாங்கினேன். வேப்பம்பூக்கள் என் தலையில் பூக்கத் தொடங்கின.
– அண்டனூர் சுரா
![]()