அசலைப்போல் நகலைப் படைக்கும் ஜப்பானியக் கலைஞர் ஷிஷிடோ
உருட்டி விளையாடும் பகடையில் கண்கள் இருந்தால் அவை சிமிட்டுமா? சில்லறைப் பையில் வாய் இருந்தால் அது பேசுமா? கற்பனைக்கு உயிர் கொடுக்கிறார் ஜப்பானியக் கலைஞர். இவை உண்மையான மனித உறுப்புகள் அல்ல. மசாட்டாக்கா ஷிஷிடோவின் (Masataka Shishido) கை வண்ணம்; அசலைப்போல் நகலைப் படைப்பது இவருடைய தனித்துவம்.
அறிவியல் புனைவுத் திரைப்படங்கள் இவருடைய மூளையின் மூலையில் புதிய யோசனையைக் கொடுத்தன. 5 ஆண்டுகளுக்குமுன் முதல் படைப்பை உருவாக்கினார். அது மனிதனின் சதையைப்போல் தோற்றமளிக்கும் இசைப்பலகை. பாடல் தொகுப்புக்கு இசையமைக்கவும் அதைப் பயன்படுத்தினார்.கலையார்வம் கரை மீறியது. கண்ணில் கண்டவை எல்லாம் கலைவடிவம் பெற்றன. சட்டெனப் பார்த்தால் பட்டெனப் பதறவைக்கும் படைப்புகள்.
மலைக்க வைக்கிறது மனித உறுப்புகளைப் போன்ற தோற்றம். முதலில் கைகளால் வரைகிறார். சிலிக்கான் மூலம் கலைக்கூடத்தில் அது புதுவடிவம் பெறும்.ஒரு யோசனையைப் படைப்பாக்க 1, 2 மாதங்களாகலாம். 2020இல் இணையத்தில் விற்பனையைத் தொடங்கினார்.
பொருளுக்கேற்ப விலை 1,000த்திலிருந்து 5,000 டாலர் வரை. தங்கள் கண்களையும், வாயையும் பிரதியெடுத்துப் பார்ப்பதில் மக்களுக்குப் பேரின்பம். பிரபலங்களும் இவருடைய படைப்புகளை விரும்பி வாங்குகின்றனர். விரைவில் கண்காட்சி நடத்த விரும்புகிறார் வியக்கவைக்கும் கலைஞர் ஷிஷிடோ.
![]()