கட்டுரைகள்
நூறாண்டுகளாய் தொடரும் ஆதிக்க ஆக்கிரமிப்பில் இஸ்ரேல்… நீண்ட வரலாற்றின் முடிவிலா துயரில் பாலஸ்தீனம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா.

கடந்த வாரம் பாலஸ்தீனத்தில்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் இஸ்ரேலிய படையினர் மேற்கொண்ட தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாலஸ்தீன பொதுமக்கள் கொலை:

ஒரேநாளில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட இந்த தாக்குதலை தொடர்ந்து பாலஸ்தீன தலைவர்கள் இஸ்ரேலுடனான பாதுகாப்பு உறவுகளை துண்டித்துள்ளதாக அறிவித்துள்ளனர். 60 வயது பெண் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

பாலஸ்தீன மக்கள் செறிந்து வாழும், அரசியல் வலுவிடமாக காணப்படும் ஜெனின் முகாமிற்கு இஸ்ரேலிய படையினர் பெரும் எண்ணிக்கையில் அத்துமீறி வந்தனர் என்றும், சாதாரணவாகனம் போன்று உருமறைப்பு செய்யப்பட்டு அந்த பகுதிக்கு வந்த இஸ்ரேலிய படையினரின் இராணுவவாகனத்தின் மீது ஆயுதமேந்திய பாலஸ்தீனியர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து இஸ்ரேலிய படையினர் பதில் தாக்குதலை மேற்கொண்டனர் நான்கு மணிநேர மோதல் இடம்பெற்றது. பல உயிரிழப்பகள் ஏற்பட்டன என தெரிவி்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய படையினரின் தாக்குதலில் ஒன்பது பாலஸ்தீனியர்கள் பலியானதை தொடர்ந்து பாதுகாப்பு உறவை துண்டித்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யூத வழிபாட்டு தலம் அருகே தாக்குதல்:
இதனை தொடர்ந்து, இஸ்ரேலின் கிழக்கு ஜெருசலேமில் உள்ள
நிவியாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தலம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காரில் வந்தவர்கள் தாம் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 7 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்
பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதியான பியட் ஹனியா பகுதிக்குள் செல்ல முயற்சித்தார். 7 பேரை சுட்டுக்கொன்றுவிட்டு சுமார் அரை கிலோ மீட்டர் சென்ற நிலையில் அந்த ஆயுத்தாரியை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல் – மேற்குகரை இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. பதற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் இஸ்ரேல் – பாலஸ்தீனர்கள் இடையே மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் வலதுசாரி ஆட்சி :
இஸ்ரேலில் சமீபத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான வலதுசாரி கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் ஜெருசலேமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆக்ரோஷமான பதிலடியை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால் இரு தரப்புக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
காசா முனை பகுதியை ஹமாஸ் அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
நீண்டகாலமாக இருதரப்பிற்கும் இடையே நடந்த இந்த மோதலில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டும், பலர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் – பாலஸ்தீனர்கள் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
மீண்டும் போர் மூளும் அபாயம் :
தற்போதய தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேல் -பாலஸ்தீன அமைப்பினர் இடையே போர் வெடிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. கடந்த வருடம் போல் தற்போதும், அதேபோன்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால் மீண்டும் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே மீண்டும் போர் மூளும் அச்சம் எழுந்துள்ளது.
நூறாண்டுகளாக தொடரும் துயரம்:

இஸ்ரேல் – பாலத்தீனம்: நூறாண்டுகளாகத் தொடரும் துயரமும் ஆக்கிரமிப்பும் இன்னமும் தொடர்கிறது. நூற்றாண்டுகால மோதலாக பாலஸ்தீனம், மத்திய கிழக்கின் அந்த பகுதியை ஆண்டுவந்த ஓட்டோமான் அரசாட்சியை முதலாம் உலகப் போரில் வீழ்த்திய பின், அந்த பகுதி பிரிட்டனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அந்த பகுதியில் யூத சிறுபான்மையினரும், அரபு பெரும்பான்மையினரும் குடிபுகுந்தனர்.
பாலத்தீனத்தில் உள்ள யூதர்களுக்கு, “தேசியப் பகுதி” ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற பொறுப்பை உலக நாடுகள் பிரிட்டனுக்கு வழங்கின. இதில்தான் பதற்றம் தொடங்கியது.
இருபதாம் நூற்றாண்டில் பெத்லஹாம்
யூதர்களைப் பொறுத்தவரை அது அவர்கள் பூர்வீகம். ஆனால் பாலத்தீனிய அரபு மக்களும் அந்தப் பகுதிக்கு சொந்தம் கொண்டாடினர்,
ஐரோப்பாவில் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த ஹாலோகாஸ்ட் படுகொலைகளில் இருந்து தப்பி, தாயகம் வேண்டி 1920 – 40 கால கட்டத்தில் அங்கு யூதர்களின் வருகை அதிகரித்தது.
யூத அரபு மக்களுக்கு இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன.
1947ஆம் ஆண்டு பாலஸ்த்தீனம் யூதர் மற்றும் அரபு பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. ஜெருசலேம் சர்வதேச நகரமானது.
இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு தரப்பில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இஸ்ரேல் தேச உருவாக்கம்:
1948ஆம் ஆண்டு இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட இயலாத பிரிட்டன் ஆட்சியாளர்கள் அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். யூத தலைவர்கள் இஸ்ரேல் உருவானதாக அறிவித்தனர்.
அதை பாலத்தீனத்தில் பல்வேறு மக்கள் எதிர்த்தனர்.
அண்டை நாடுகளை சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன.
ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் அந்த பகுதியை விட்டு தப்பித்து சென்றனர். பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
அல் நக்பமா அல்லது பேரழிவு என்று அவர்களால் இது அழைக்கப்படுகிறது.
போர் நின்ற ஒரு வருடத்திற்கு பிறகு அந்த பகுதியை பெரும்பான்மையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
1967 இல் ஆறு நாள் அரபுப் போர்:
1967ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு போரில், கிழக்கு ஜெருசலேத்தையும், மேற்கு கரையையும், சிரிய கோலன் ஹைட்சின் பெரும்பான்மை பகுதியையும், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பெரும்பாலான பாலத்தீனிய அகதிகள், அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்கு கரையிலும், அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வசிக்கின்றனர்.
ஆனால் இந்த அகதிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை.
இது நாடு யூத நாடாக இருப்பதற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இஸ்ரேல் தெரிவிக்கிறது. இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மேற்குக் கரையை இன்றும் ஆக்கிரமித்துள்ளது. மேற்குக் கரையை ஐநா ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாகவே இன்றும் பார்க்கிறது.
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் ?
1967ஆம் ஆண்டு நடைபெற்ற ஆறு நாள் போருக்கு பிறகு இஸ்ரேலிய படைகள் கிழக்கு ஜெருசலேமை கைப்பற்றிய பிறகு இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்று கூறுகிறது.
பாலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பாலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல் முழு நகரையும் உரிமை கொண்டாடுவதை அங்கீகரித்துள்ள வெகுசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்றாகும்.
யூதக் குடியிருப்புகள் :
கடந்த 50 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை நிறுவியது. தற்போது அங்கு 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வசிக்கின்றனர்.
இது சர்வதேச சட்டங்களின்படி தவறு என்றும் அமைதிக்கு தடையாக உள்ளது என்றும் பாலத்தீனம் கூறுகிறது.
இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்திருக்கிறது.
இஸ்ரேலியப் படையினரின் நடவடிக்கைகள் பாலத்தீனர்கள் பலரின் உயிர்களையும் பலிவாங்கிவிட்டன. 

இந்த வன்முறை மீண்டும் வெடித்திருப்பதை, பலர் ஒரு புதிய “இண்டிஃபாடா” ( எழுச்சி என்பதற்கான அரபு வார்த்தை) உருவாவகக் கூடும் என்று அஞ்சுகிறார்கள்.
இந்த சமீபத்திய பதற்ற நிலை, ஜெருசலேத்தின் எதிர்காலம் குறித்த கேள்வியைச் சுற்றி எழுந்துள்ளது. இந்த நகரை இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்கள் ஆகிய இரு தரப்பினருமே உரிமை கொண்டாடுகிறார்கள்.ஆனால் இது நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு சிக்கலான மோதலின் மிகச்சமீபத்திய ஒரு அத்தியாயம்தான். இதற்கு தீர்வு என்பது வெகு தொலைவில் இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது
1993ல் ஒஸ்லோ சமாதான ஒப்பந்தம்:
பாலத்தீன விடுதலை அமைப்பும், இஸ்ரேலும், 1993ல் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதன்படி, பாலத்தீன அமைப்பு “வன்முறையையும், பயங்கரவாதத்தையும்” கைவிட்டது. மேலும் அது இஸ்ரேல் ‘அமைதியுடனும் பாதுகாப்புடனும்’ வாழ அதற்கிருக்கும் உரிமையையும் அங்கீகரித்தது.
இந்த அங்கீகாரத்தை ஹமாஸ் அமைப்பு ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
இஸ்ரேல் மேற்குக்கரையிலிருந்தும், காசாவிலிருந்தும் அதன் யூதக் குடியேற்றங்களை படிப்படியாக விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டது. இதன் மூலம் பாலத்தீனர்கள் ஒரு சுதந்திரமான நாடாக உருவாக அனுமதிக்க இந்த முடிவுக்கு அது ஒப்புக்கொண்டது.
ஆனால் இதை இஸ்ரேல் ஒரு போதும் அமல்படுத்தவில்லை.
மீண்டும் காசாவில் தொடங்கிய கடும் சண்டையால் முடிவிலா துயரில் பாலஸ்தீன மக்கள் அல்லல் படுகின்றனர். ஆனாலும் பாலஸ்தீன மண்ணில் ஆக்கிரமிப்பில் இஸ்ரேல்
தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த நூற்றாண்டின் முடிவிலா துயரமாக நீண்டு கொள்கிறது.
– ஐங்கரன் விக்கினேஸ்வரா
![]()